ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 நவம்பர், 2009

எனக்கும் தா !





ராதேக்ருஷ்ணா


ப்ரஹ்லாதா உன்னைப் போல்
ஒரு மனம் தா !


பெற்ற தகப்பனே விஷம்
தந்தாலும், நாராயணனை
குறை சொல்லாத ப்ரஹ்லாதா !
உன் உயர்ந்த மனதை எனக்கும் தா !

சொந்தங்கள் எல்லோரும்
ஸ்ரீமன் நாராயணனை பொய் என்று
நீருபிக்க முயற்சித்த போதும்
பகவானிடம் மாறாத பக்தி வைத்த
ப்ரஹ்லாதா ! உன் மனதை எனக்கும் தா !

மலையிலிருந்து உருட்டிவிட்ட
போதிலும், தன்னைப் பற்றிக்
கவலைப்படாமல், அந்தர்யாமியான
பகவானுக்கு ஒரு கஷ்டம் வரக்கூடாதே,
என்று நினைத்த ப்ரஹ்லாதா !
அந்த மனதை எனக்கும் தா !

ஜபமாலையில்லாமல்,
பகவானின் உருவப்படம் இல்லாமல்,
அர்ச்சாவதார மூர்த்தி இல்லாமல்,
நாராயண நாமத்தை விடாமல் ஜபித்து
ஸ்ரீமன் நாராயணனையே வசப்படுத்தின
ப்ரஹ்லாதா !
அந்த  அற்புதமான மனதை எனக்கும் தா ! 

அழியக்கூடிய உடலுக்காக,
ஆடாத ஆட்டம் ஆடி, அழுது
புரளாமல், யானை மிதிக்கவந்தபோதும்,
அசராத வீரனே ப்ரஹ்லாதா !
அந்த அசராத மனதை எனக்கும் தா !

  கர்ப்பத்தில் கேட்ட, பகவானின்
திவ்ய சரிதங்களையும், குருவின்
உபதேசத்தையும் வாழ்நாள்
முழுவதும், ஒரு நிமிஷம் கூட
மறக்காத ப்ரஹ்லாதா !
அந்த திவ்யமான மனதை எனக்கும் தா !

 எல்லோரும் பக்தியிலிருந்து
மாற்ற முயற்சித்தபோதிலும்,
அவர்களையும் பக்தி செய்யவைத்து,
நாராயண நாமத்தை ஜபிக்கவைத்த
அசாத்தியமான ப்ரஹ்லாதா !
அந்த த்ருடமான மனதை எனக்கும் தா ! 
 
சுற்றியிருந்தவர்கள் எல்லோரும்
பரிகசித்து, மனதைப் புண்படுத்தி,
உடலையும் படாதபாடு படுத்தி,
அழிக்க முயற்சித்த சமயத்திலும்,
தளராத பக்த ப்ரஹ்லாதா !
அந்த தளராத மனதை எனக்கும் தா ! 

எங்கிருக்கிறான் நாராயணன் என்ற
தந்தைக்கு, எங்கும் உளன் கண்ணன்
என்று தைரியமாக, துளிகூட 
யோசனை செய்யாமல், நம்பிக்கையோடு
சொன்ன ப்ரஹ்லாதா !அந்த 
நம்பிக்கை மிகுந்த மனதை எனக்கும் தா !

எங்கும் உள்ள பகவான், இந்தத்
தூணிலும் இப்போது இருக்கின்றானென்று
தூணையும் காட்டி, அதில் யாருக்கும்
தெரியாத நரசிம்ம வேஷத்தில் இருந்தவனை
நாராயணன்தான் என்று கண்டுபிடித்த,
ஐந்து வயது ஞானியே ப்ரஹ்லாதா !
அந்த ஞானமனதை எனக்கும் தா !

எல்லோரும் நரசிம்மனைப் பார்த்து 
பயந்து நடுங்க, துளிகூட பயமில்லாமல்,
உக்ரமான அவரிடம் பக்கத்தில் சென்று,
நரசிம்மனை ஸ்தோத்திரம் செய்த,
சமத்துப் பிள்ளையே ப்ரஹ்லாதா !
அந்த தைரியமான மனதை எனக்கும் தா !

 அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகன் நரசிம்மனே வரம் கேள்
என்ற போதிலும், பக்தியை விலை
பேசாத, தந்தைக்கு நல்ல கதியைக்
கேட்ட சத்புத்ரனே ப்ரஹ்லாதா !அந்த
விரோதமில்லாத மனதை எனக்கும் தா !

ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு . . .

உலகத்தை குறை சொல்லி,
அடுத்தவர்கள் மேல் பழி சுமத்தி,
க்ருஷ்ணனை நிந்தித்துகொண்டு,
அழுது வடியும் முகமாக ஒரு 
வாழ்க்கையை நான் ஒரு நிமிஷம் கூட
வாழக்கூடாது . . .

எப்பொழுதும் அசராத,தளராத,
அடுத்தவரை குறை சொல்லாத,
யார்மேலும் பழி சொல்லாத,
பகவானின் கருணையை
நினைத்துக்கொண்டு, 
என்றும் சிரித்த முகத்தோடு,
எல்லா துன்பங்களையும் ஜெயித்து,
பகவானிஷ்டப்படி ஒரு வாழ்க்கை வாழ ப்ரஹ்லாதா !
உன்னிடம் பிச்சைக் கேட்கின்றேன் !

இந்த ஏழைக்கு உன்னுடைய
லக்ஷிய மனதை ப்ரசாதமாகத் தா !

உன்னைப்போல் என்னையும்பார்த்து
என் க்ருஷ்ணன் ஆனந்தப்பட
எனக்கு உன் மனதைத் தா !


 






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP