ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, December 2, 2009

க்ருஷ்ணனைக் கண்டுபிடி . . .

ராதேக்ருஷ்ணா


உன் வாழ்க்கையின்
ஒவ்வொரு நிகழ்வும்
நன்மையானதே !


நடந்தவை நல்லவையே !
நடக்கின்றவை நல்லவையே !
நடக்கப்போவதும் நல்லவையே !


எல்லாம் நல்லவையே !
எதுவும் நன்மைக்கே !

முக்கியமாக உன் வாழ்வில்
உன் மனதைப் பாதித்தக்
கவலைகளும், பிரச்சனைகளும்,
அவமானங்களும், நஷ்டங்களும்
நிஜமாகவே மிக மிக மிக
நல்லவையே ! 
 

உன் வாழ்வில் நீ பட்ட
கஷ்டங்களும் நன்மைக்கே !
அதனால் தானே இன்று
ஆனந்தத்திலும் நிதானமாக
இருக்கின்றாய் ! 

உனக்கு சிலர் செய்த நம்பிக்கை
துரோகங்களும் உனக்கு நன்மையே !
அதன்பிறகு தானே யாரிடம்,
எப்படிப் பழகவேண்டும் என்பதை
தெரிந்துகொண்டாய் ! 

மற்றவர்கள் உனக்குச் செய்த
அவமரியாதைகளும் உனக்கு நல்லதே !
அதுதானே உனக்குள் ஒரு வேகத்தைத்
தந்து மற்றவர்கள் முன் வாழ்ந்துகாட்ட
உன்னைத் தூண்டியது !

உனக்கு வந்த வியாதிகளும்
உனக்கு நல்லதுதான் !
அதனால்தானே அடுத்தவருடைய
வலியும்,கஷ்டமும் உனக்குத்
தெளிவாகப் புரிந்தது !

உன் வாழ்க்கையில் நீ
பட்ட நஷ்டங்களும் நல்லதற்கே !
ஏனெனில் அதனால்தானே ஒரு
விஷயத்தை ஆராய்ந்து பார்த்து
முடிவெடுக்கும் பக்குவம் வந்தது !

 மற்றவர்கள் உன்னிடம் நடித்து
உன்னை ஏமாற்றியதும் நன்மைக்கே !
அதன்பிறகுதானே எப்படி உன்னை
ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள
உனக்குப் புரிந்தது !

நீ சில விஷயங்களில்
தோற்றுப்போனதும் ரொம்பவே நல்லது !
அதனால்தான் அகம்பாவப் பிசாசின்
பிடியில் முழுவதுமாக உன்னைக்
கொடுக்காமல் இருக்கிறாய் !

உன்னுடைய பல முயற்சிகள்
தோல்வியடைந்ததும் மிக நல்லதே !
அதனால்தான் வெற்றியின்
பல ரகசியங்கள் உனக்குத்
தெளிவாகப் புரிந்தது !

உன்னுடைய பல பிரச்சனைகளுக்குத்
தீர்வு கிடைக்காததும் நல்லதே !
அதனால்தானே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனையும்,
அவனுடைய நாமத்தையும், குருவையும்
பிடித்துக்கொண்டாய் !

உன்னைப் பலபேர் குறை
கூறிக் கேலி பேசினதும் நல்லதே !
அதனால்தான் உன்னுடைய பல
குற்றங்கள்,குறைகள், முட்டாள்தனங்கள்,
பலம்,தைரியம் ஆகியவை உனக்கே புரிந்தது !

உன்னுடைய வாழ்வில் நீ பார்த்த
தரித்திரமும் மிக உன்னதமானதே !
அதுதான் உன்னை மிகப்பெரிய
இடத்தில் இன்று அற்புதமாக
வைத்திருக்கிறது !

உன்னைப் பற்றி பலபேர்
இல்லாததையும், பொல்லாததையும்
சொல்லி உன்னை அழவைத்ததும்
மிக நன்மையே !
அதனால்தான் உலகின் ஸ்வபாவமும்
புரிந்து,அவமானப்பட்டுவிடக்கூடாதென்று
மோசமான காரியங்களை செய்யாமலும்
இருக்கின்றாய் !

சிலரை உன் வாழ்க்கையில் நீ
இழந்ததும் மிக மிக நல்லதே !
அதனால்தான் தனித்து நிற்கவும்,
வாழமுடியும் என்ற நம்பிக்கையும்,
க்ருஷ்ணன்மட்டும்தான் நிரந்தரம் என்பதும்
மிகத்தெளிவாக உன் புத்தியில் உறைத்தது !

நீ எதிர்பார்த்தது நடக்காமல் போனதும்
உன் வாழ்க்கைக்கு மிக நல்லதே !
அதனால்தான் வருவதை ஏற்றுக்கொள்ளும்
பக்குவமும், விடாமுயற்சியும் உன்னிடம்
வந்து சேர்ந்தது !

நீ எதிர்பாராதது நடந்ததும்
மிக விசேஷமானதே !
அதனால்தான் எதையும் தாங்கும்
இதயமும், வாழ்க்கையின் நெளிவு,
சுளிவுகளும் உனக்குப் புலப்பட ஆரம்பித்தது !

அடுத்தவர்கள் உன்னைக்
கஷ்டப்படுத்தியதும் உனக்கு நன்மையே !
அதனால்தான் அவர்களுடைய
ஸ்வபாவமும், க்ருஷ்ணன் உன்னைக்
காப்பாற்றுகின்றான் என்ற உண்மையும்
உனக்குப் புரிந்தது !

இப்படி பல கோடி விஷயங்களை
என்னால் அடுக்கிக் கொண்டே
போகமுடியும் !

நீ எவையெல்லாம் உன் வாழ்வின்
மிக மோசமான சம்பங்களாக,
துக்கங்களாக, அடுத்தவர்களிடம்
சொல்லி, சுய பச்சாதாபத்தைச்
சம்பாதிக்கிறாயோ, அவைதான்
உன்னை பக்குவப்படுத்தியிருக்கிறது.

இந்த உண்மையை சரியாக ஏற்றுக்கொள் !

புத்தக அறிவை விட
பட்ட அறிவே விசேஷமானதே !

உனக்கு இவைகளைப் பாடமாக
நடத்தினால் சத்தியமாகப் புரியாது !
அதனால்தான் க்ருஷ்ணன்
உனக்கு எவை நடந்தால்,
நீ வாழ்க்கையை உள்ளபடி
புரிந்துகொள்வாயோ, அந்த
விஷயங்களை உன் வாழ்க்கையில்
தானே நடத்திக்காட்டியிருக்கிறான் !

இதுவும் உன் க்ருஷ்ணன்
உன் வாழ்க்கையை நீ
புரிந்துகொள்ள,
உனக்கென்று விசேஷமாகச்
செய்த லீலையே !

உன் க்ருஷ்ணனின் லீலையே !
உனக்காகவே அவனின் திவ்ய லீலையே !

 குழந்தையை மிரட்டும் அம்மா,
அதன் நன்மைக்காகவே செய்கிறாள் !
அது மிகவும் பயந்தபிறகே
அம்மாவே அதற்கு தைரியமும் தருகிறாள் !

அதுபோல உன் க்ருஷ்ணன்
உன்னிடத்தில் பூச்சாண்டி
விளையாட்டு விளையாடுகின்றான் !

இந்த விளையாட்டில் நீ
அவனைக் கண்டுபிடித்துவிட்டால்
நீ ஜெயித்துவிட்டாய் !

இல்லையென்றால் 
மீண்டும் மீண்டும் வருவாய் !
என்றோ ஒரு நாள் நீ ஜெயிக்கும்வரை
இந்த விளையாட்டு முடியாது !

நீ ஜெயித்து, 
உன்னை ஆலிங்கனம் செய்து, உன்னை உச்சி முகர்ந்து,
ஆனந்தக்கண்ணீரில் உன்னைக் குளிப்பாட்டி,
தன் மேனி சிலிர்க்க,
உன் பெருமையைப் பேச,
உன் க்ருஷ்ணன் பல கோடி
வருஷங்களாகக் காத்திருக்கிறான் !

 அதனால் உன்
கஷ்டங்களிலும், அவமானங்களிலும்,
நஷ்டங்களிலும், வியாதிகளிலும்,
தோல்விகளிலும், பிரச்சனைகளிலும்,
ஒளிந்துகொண்டிருக்கும்,
உன் க்ருஷ்ணனை கண்டுபிடி . . .

இதோ,இங்கே,இன்று,
உன்னுடனேயே
ஒளிந்துகொண்டிருக்கிறான் . . .

சீக்கிரம் கண்டுபிடித்து
ஆனந்தவேதத்தின்
நாயகனை,
ஆனந்தத்தில் திளைக்க வை ! ! !

சீக்கிரம்...சீக்கிரம்...சீக்கிரம்...

இந்த ஜன்மாவில் கண்டுபிடி...
இன்றே கண்டுபிடி...
இப்பொழுதே கண்டுபிடி...
உடனே கண்டுபிடி . . . 

 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP