ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, February 17, 2010

ஆற்றங்கரை . . .


ராதேக்ருஷ்ணா

ஆற்றங்கரை . . .

கவிஞருக்கும் பிடிக்கும் . . .
குழந்தைக்கும் பிடிக்கும் . . .
இளைஞருக்கும் பிடிக்கும் . . .
முதியோருக்கும் பிடிக்கும் . . .
 பறவைகளுக்கும் பிடிக்கும் . . .
விலங்கினங்களுக்கும் பிடிக்கும் . . .
தாவரங்களுக்கும் பிடிக்கும் . . . 
 
நாஸ்தீகருக்கும் பிடிக்கும் . . .
ஆஸ்தீகருக்கும் பிடிக்கும் . . .

நம்முடைய சனாதன இந்து
தர்மத்தில்,இதிஹாசங்களிலும்,
புராணங்களிலும்,பக்த வைபவங்களிலும்
பல கோடி விஷயங்கள்
ஆற்றங்கரையைப் பற்றிக்
கொட்டிக் கிடக்கிறது . . .

கொஞ்சம் பக்தி ஆற்றின்
கரையில் புரளுவோம் . . .
புரண்டு எவ்வளவு ஒட்டுகிறதோ
அதை அள்ளிக்கொண்டு,
மூட்டை கட்டிக்கொண்டு,
மோக்ஷம் வரை செல்வோம் வா . . .

பிள்ளையில்லாத தசரதன்,
ரிஷ்ய ஸ்ருங்க ரிஷியின் உத்தரவோடு
புத்ர காமேஷ்டி யாகம் செய்தது,
சரயு ஆற்றின் கரையில் !

சீதையைப் பிரிந்த ராமன்,
லக்ஷ்மணனோடு சபரியைச் சந்தித்து
அவள் தந்த பழங்களை ஏற்றது,
பம்பையாற்றின் கரையில் !

பகவான் க்ருஷ்ணன் மாடு மேய்க்கும்
சிறுவர்களோடு,கன்றுகளை மேய்த்து,
அவைகளை நீரூட்டி விளையாடினது,
யமுனையாற்றின் கரையில் !

தேவரிஷி நாரதர்,மனம் குழம்பியிருந்த
வேதவ்யாஸருக்கு ஸ்ரீ மத் பாகவதத்தை
எழுதக் கட்டளையிட்டது
சரஸ்வதியாற்றின் கரையில் !

சுகப்ரும்ம மஹரிஷி,7 நாளில் மரணம்
என்கிற நிலையிலிருந்த பரீக்ஷித்து ராஜனுக்கு
ஸ்ரீ மத் பாகவதத்தைச் சொன்னது
கங்கையாற்றின் கரையில் !

யக்ஞம் செய்துகொண்டிருந்த சௌனகாதி
ரிஷிகளின் கேள்விகளுக்கு, சூத பௌராணிகர்
ஸ்ரீ மத் பாகவதத்தைப் பதிலாகச் சொன்னது
கோமுகியாற்றின் கரையில் !

தன் ப்ரிய சிஷ்யனான ராமானுஜருக்கு
ஏற்ற சமையல் செய்யும் சிஷ்யனாக
கிடாம்பியாச்சானை,திருக்கோஷ்டியூர் நம்பி
தேர்வு செய்தது காவேரியாற்றின் கரையில் !

பலவிதமான ப்ரேம ரஹஸ்யங்களை
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்,
ராஜா ராமானந்தரும் பேசிக்கொண்டது
கோதாவரியாற்றின் கரையில் !


திருமங்கையாழ்வாருக்கு ததீயாராதனத்திற்கு
தேவையான தனத்தை காஞ்சி வரதராஜர்
காட்டியருளியது
வேகவதியாற்றின் கரையில் !

தன்னுடைய ஆசார்யனான ஸ்வாமி ஆளவந்தாரைப்
பிரிந்த தெய்வவாரியாண்டான் அவரைக்
கண்டு சேவித்து ஆனந்தித்தது
திருவனந்தபுரம் கரைமனையாற்றங்கரையில் !

ஸ்வாமி இராகவேந்திரர் தான்
ஜீவ சமாதியடைய தேர்ந்தெடுத்த
மாஞ்சாலை கிராமம் இருப்பது
துங்கபத்திரா ஆற்றங்கரையில் !

புண்டலீகனின் ப்ரார்த்தனைக்காக
அவன் கொடுத்த செங்கல்லின் மேல்
க்ருஷ்ணன் பாண்டுரங்கனாக நிற்பது
சந்திரபாகா ஆற்றின் கரையில் !

ஞானத்தை உலகோற்கு உபதேசம்
செய்து,பக்தியை நிரூபித்த
ஞானேஸ்வரர் ஜீவ சமாதியடைந்தது
இந்திரயாணி ஆற்றங்கரையில் !

கலியும் கெடும் என்று சொன்ன
மாறன் சடகோபன் வகுளாபரணன்
ஸ்வாமி நம்மாழ்வார் இருப்பது
தாமிரபரணி ஆற்றங்கரையில் !

ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
கைகளில் கிடைத்தது
க்ருஷ்ணவேணி ஆற்றங்கரையில் !
 


க்ரௌஞ்ச பக்ஷிகளின் துக்கத்தைச்
சகிக்கமுடியாத வால்மீகி மஹரிஷியின்
திருவாயிலிருந்து ஸ்ரீ மத் ராமாயணம்
வெளிவந்தது தமஸா ஆற்றங்கரையில் !

ஸ்ரீ ராமன்,லக்ஷ்மணனோடும்,முனிவர்களோடும்,
விஸ்வாமித்திரரின் சத்சங்கத்தைக் கேட்டு
அனுபவித்து இரவு தங்கியிருந்தது
உன்னதமான சோணா ஆற்றங்கரையில் !

அக்ஷோப்ய தீர்த்தரின் ப்ரார்த்தனைக்கு
வசப்பட்டு ஸ்ரீ மத்வாசார்யார் அவருக்கு
சத் சிஷ்யனைக் காட்டிக்கொடுத்தது
பீமா ஆற்றங்கரையில் !

சுந்தர பரிபூரண நம்பி ராயரான
திருக்குறுங்குடி திருமலை நம்பி
ஆனந்தமாய் வசிப்பது
தெளிந்த நம்பி ஆற்றங்கரையில் !

தன்னுடைய பக்த ஜனங்களுக்கென
ஸ்ரீ க்ருஷ்ணன் உருவாக்கிய
த்வாரகாபுரி இருப்பது கடலோடு
சங்கமிக்கும் கோமதி ஆற்றங்கரையில் !

உலகையே மயக்கும் கள்ளழகர்
மீனாக்ஷி திருக்கல்யாணத்திற்காக
செல்வதைப் பார்க்க ஜனங்கள் காத்திருப்பது
அற்புதமான வைகை ஆற்றங்கரையில் !


இன்னும் இதுபோலே
நர்மதா,மணிமுத்தாறு,அம்பலப்புழா,
பாரதப்புழா,சிந்து,பாலாறு என்று
எத்தனையோ ஆற்றின் கரைகளில்
பல அற்புதமான பக்தி வைபவங்கள்
அரங்கேறியுள்ளது !

நான் சொன்ன வைபவங்களும்
மிகவும் கொஞ்சம் தான் !

ஒவ்வொரு நதியின் கரையிலேயே
பல நூறு வைபவங்கள்
பக்தியை இன்னும் அழகாகச்
சொல்லிக்கொண்டிருக்கின்றன !

இந்த ஆறுகளில் நீராடி,
இந்த ஆற்றின் கரைகளில்,
பக்தியுடன் நாம ஜபம் செய்து,
பகவானைப் ப்ரார்த்தனை செய் !

நேரம் கிடைத்தால் கொஞ்சம்
குடும்பத்தோடு சென்று வா !
முடிந்தால் நானும் உன்னோடு
வருகிறேன் !

என்னோடு மானசீகமாக
இந்த ஆற்றங்கரைகளில் புரண்டதே
இத்தனை சுகமென்றால்,
ப்ரத்யக்ஷத்தில் சென்றால்
எத்தனை ஆனந்தமாயிருக்கும் !

இப்படியே நேரம் கிடைக்கும்போதெல்லாம்
இந்த ஆற்றங்கரைகளில் சென்று
வந்தால், ஒரு நாள் இந்த மனித
உடலை விட்டு
பரமபதமாகிய ஸ்ரீ வைகுண்டம்
செல்வாய் !

அங்கேயும் ஒரு ஆற்றங்கரை உண்டு !

அதுதான் வ்ரஜா நதியின் கரை !

அந்த ஆற்றில் நீராடி
எழுந்தால்,
ஸ்ரீ வைகுண்டத்தில்
உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் !

அந்த ஆற்றின் கரையில்
"அமானவான்" என்ற தேவன்
நீ எந்த வாசல் வழியாக பரமபதத்தில்
நுழையவேண்டும் என்பதைச் சொல்வான் !

அதன் வழியாக நீ உள்ளே
நுழைய, இந்த ஆற்றங்கரைகளில்
எந்த மஹாத்மாக்களை நினைத்தாயோ,
அத்தனை பேரையும் நீ,
உனக்காகக் காத்திருப்பவர்களாகவும்,
உன்னை வரவேற்பவர்களாகவும்,
ப்ரத்யக்ஷத்தில் பார்க்கலாம் . . .

அப்போது அங்கே பேரிகைகள்
முழங்கும்...
அப்போது அங்கே துந்துபிகள்
சப்திக்கும் . . .
அப்போது அங்கே சங்கங்கள்
முழங்கும் . . .
உன்னைச் சுற்றி நித்ய சூரிகள்,
நித்ய முக்தர்கள் எல்லோரும்
ஆனந்தமாய் நிற்பர் . . .

அங்கே பொன்மயமான
மண்டபத்தில்,
ஆதிசேஷ சிம்மாசனத்தில்,
ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி,
சமேதனாக
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனான,
சர்வ லோக ரக்ஷகனான,
ஸர்வ லோக சரண்யனான,
ஸ்ரீயப்பதியான பகவான்
ஸ்ரீ மன் நாராயணனைக் காண்பாய் . . .

ஒரு வேளை உனக்கு இது
பிடிக்கவில்லையென்றால்,
கோலோக ப்ருந்தாவனத்தில் நுழைவாய் . . .

அங்கே ராசலீலா மண்டபத்தில்,
நம் ராதிகா ராணியின் ப்ரேமையில்
மயங்கிக் கிடக்கும்,
புவன சுந்தரனான பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணனை,
புவன சுந்தரி,ப்ரேம ஸ்வரூபினி
ராதா தேவியோடும்,
அஷ்ட சகிகளோடும்,
குயில்கள் சப்திக்க,
மயில்கள் ஆட,
வேணு கான இசையோடு,
பக்தர்களின் பஜனையோடும்,
ஆனந்த ந்ருத்யத்தோடும்
அனுபவிப்பாய் . . .

அதனால் உடனே கிளம்பு . . .

இந்த ஆற்றங்கரைகளை நினை . . .

ஒரு நாள் வ்ரஜா நதிக்கரைக்குச்
செல்வாய் . . .

நான் உன்னை வரவேற்பேன் . . .
அல்லது
நீ என்னை வரவேற்பாய் . . .

அப்போது நீ சொல்...
நான் கேட்கிறேன்...
இந்த ஆற்றங்கரை மஹிமையை . . .
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP