ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராம ஜெயம்!

ராதேக்ருஷ்ணா

 ஸ்ரீ ராம நவமி !

எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் !

 மனிதன் இருக்க வேண்டிய முறையை
வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன்
வந்த நாள் ! 
 
எல்லோரும் வெறுத்து ஒதுக்கும்,
நவமி திதிக்கும் மஹிமை தர,
எங்கள் குலபதி குலசேகரனின்
க்ஷத்திரிய வம்சத்தில்,
தினகரன் அவதரித்த நாள் !

எதற்கும் அஞ்சாத
தனி ஒரு வீரன் வந்துதித்த நாள் !

பிள்ளையில்லாத கிழவன் தசரதன்,
ரிஷ்யஷ்ருங்கர் சொல்படி,அயோத்யாவில்,
சரயு நதிக்கரையில்,யாகம் செய்ய,
பாத்திரத்தில் பாயசமாக வந்து,
3 ராணிகளிடம் 4 பிள்ளையாக வந்து,
அதில் மூத்தவனாக புராணபுருஷன்
பூமியில் வந்த நாள் !

கௌசலையின் மணிவயிற்றில்
12 மாதம் சுகமாக சிறைபட்டு,
அவளுக்கு பரமானந்தத்தை
அள்ளித் தந்து, வைகுண்டபதி
பூலோக ஜனங்களின் துயர் தீர,
மனிதனாக வந்துதித்த நாள் !
   
 தந்தை சொன்ன வார்த்தைக்காக,
விஸ்வாமித்திரரோடு வனம் சென்று,
தாடகையை வதம் செய்து, கல்லையும்
பெண்ணாக மாற்றிய
கருணாமூர்த்தி அவதரித்த நாள் !

 கர்மவீரர் ஜனகரிடமிருந்த சிவபெருமானின்
வில்லை வளைத்து,என் தாய்
சிங்காரச் சீதையை மணந்து,
பரசுராமனின் வில்லை வாங்கி
அவன் கர்வத்தை அடக்கின,
ஏக பத்தினி விரதனான,
என் ப்ரபு அவதரித்த நாள் !
பிதாவின் சத்தியத்தைக் காப்பாற்ற,
தன் சொத்தான ராஜ்ஜியத்தைத் துறந்து,
மரவுரி தரித்து,கைங்கர்ய சிகாமணி
லக்ஷ்மணனோடும்,ப்ரிய நாயகி
சீதையுடனும்,வனத்திற்கு சென்ற, 
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
அவதரித்த புண்ணிய நாள் !

ஸ்ருங்கிபேரபுரத்தில்,வேடுவன்
குகனை தோழனாகக் கொண்டு,
அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும்,
அனுக்ரஹம் செய்து,ஆலம்பாலால்,
ஜடாமுடி தரித்த, ஜகன்னாதன்
அவதரித்த நாள் ! 

வனவாசிகளின் கண்களுக்கு
தன்னுடைய அழகான உருவத்தை
மறைக்காமல் காட்டிக்கொடுத்து,
மரவுரி தரித்து அவர்களை மயங்கடித்து,
ராக்ஷசர்களை வதம் செய்து,ரிஷிகளின்
ஆனந்தத்தை அதிகரித்த, 
மன்னவன் பூமியில் வந்த நாள் !

உத்தமி கைகேயி மாதாவின் தவப்புதல்வன்
அற்புத பரதன்,அயோத்யா வாசிகளோடு வந்து,
நாட்டிற்கு வருக என கதற, அவனுக்கு,
கீதையை உபதேசித்து,தன் பாதுகையையும்
தந்து,அவனைப் பழியிலிருந்து காத்த,
ரகூத்தமன் அவதரித்த நாள் ! 
 
சித்திரகூடத்திலிருக்க,ஜயந்தன்
சிறு காக்கையாக வந்து,எங்கள்
சீதையின் அழகு திருமுலைத் தடங்களைக்
காயப்படுத்த,அவன் மீது
புல்லையே அஸ்திரமாக ஏவிய
வல்லவன் அவதரித்த நாள் !

அசிங்கமான சூர்ப்பணகையின்,
மூக்கையும்,காதையும் வெட்டி,
அவளுக்காக சண்டையிட வந்த 
14000 ராக்ஷஸ வீரர்களை தனியாக
நின்று த்வம்சம் செய்த
அசகாயசூரன் அவதரித்த நாள் !

கிழப்பறவை ஜடாயுவையும் தந்தையாக
மதித்து,அவருடைய இறக்கையின் கீழ்
ஆனந்தமாக வசிப்போம் என்று சொல்லி,
பஞ்சவடியில் பர்ணசாலையில் வசித்த,
ராகவசிம்மன் அவதரித்த நாள் !

மாயமான் என்று தெரிந்தும்,அவதார
நோக்கமான இராவண வதத்திற்க்காக,
அதைத் துரத்தி,லக்ஷ்மணனைப் பிரிந்து,
சீதையை இராவணன் அபகரிக்கச் செய்து,
சீதா விரஹத்தில் புலம்பின,
சீதாராமன் அவதரித்த நாள் !

ஜடாயுவுக்கும் மோக்ஷம் தந்து,
கபந்தனும் வழி காட்ட,
சபரியை மோக்ஷத்திற்கு வழியனுப்பி,
  ரிஷ்யமூக பர்வதத்தில் சுக்ரீவனைச்
சந்திக்க,அஞ்சனையின் மைந்தன்,
ராம பக்த ஹனுமானின் தோளில் சென்ற,
வீரராகவன் அவதரித்த நாள் !

குரங்கரசன் சுக்ரீவனை நண்பனாகக் கொண்டு,
வாலியை மறைந்து நின்று அம்பெய்தி,
கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம்
செய்வித்து,மழைக்காலத்தில் சீதா விரஹத்தில்
தஹித்த, தீனதயாளன் அவதரித்த நாள் !

 ஆஞ்சநேயனை தூதுவனாக்கி,அவனிடம்
தன் கைமோதிரத்தையும் தந்து,பழங்கதைகளைச்
சொல்லி,சீதைக்குச் சமாதானம் சொல்லி,
ஆஞ்சநேயனின் பக்தியையும்,சீதையின்
பதிவிரதத்தையும் நிரூபித்த
பக்தவத்ஸலன் அவதரித்த நாள் !

ஆஞ்சநேயன் தந்த சிதையின் சூடாமணியை
வாங்கி ஆனந்தக்கண்ணீர் சொரிந்து,
குரங்குகளை படையாகக் கொண்டு,
கடற்கரையில் குரங்குகளோடு இருந்து,
இராவணன் தம்பி தர்மாத்மா வீபீஷணனுக்கு,
சரணாகதி செய்வித்து,தன் கூட்டத்தில்
சேர்த்துக்கொண்ட,சரணாகதவத்ஸலன்
அவதரித்த புண்ணிய நாள் !

 விபீஷணாழ்வார் சொன்னபடி,
கடலரசனிடம் சரணாகதி செய்து,
கோபத்தில் அவனை அழிக்கக் கிளம்பி,
அவன் தன்னிடம் சரணாகதியடைய,
அவனிடம் உபாயம் கேட்டு, குரங்குகளைக்
கொண்டு கடலில் ஒரு பாலம் கட்டி,
அணில்களுக்கும் அருள் செய்த,
சகலகலாவல்லவன் அவதரித்த நாள் ! 
 
 விரோதியின் கோட்டைக்குள் நுழைந்து,
இலங்கையில் தங்கி,இராவணனை
அவனுடைய கூட்டத்தாரோடு அழித்து,
சீதையை மீட்டு,அவளின் கற்பை
உலகிற்கு நிரூபணம் செய்து,
புஷ்பகவிமானத்தில் மீண்டும்
அயோத்யா வந்த,
ரகுகுலதிலகன் அவதரித்த நாள் !

 14 வருஷம் பித்ரு வாக்ய பரிபாலனம்
செய்து,ஐவராக ஆனோம் என்று சொல்லி,
கைகேயி மாதாவின் திருவடிகளில் வணங்கி,
ஜடாமுடியைக் களைந்து,சுற்றமும்,நட்பும்,
புடை சூழ,விண்ணும் மண்ணும் மகிழ,
அயோத்யாவில் பட்டாபிஷேகம்
செய்து கொண்ட,
ராஜாராமன் அவதரித்தத் திருநாள் !

 தன் கதையை,தன் குழந்தைகள்
லவகுசன் சொல்ல,தானும் ஜனங்களோடு அமர்ந்து,
தன்னை மறந்து கேட்டு,
சத்சங்க பலத்தை நிரூபணம் செய்த,
ஸ்ரீ மன் நாராயணன் பூமிக்குத்
தானே ஆசைப்பட்டு வந்த நாள் !

11000 வருஷங்கள் பூமியிலிருந்து,
மனிதன் வாழவேண்டிய முறை இதுதான்
எனக் காட்டி,புல்லையும்,எறும்பையும்,
மனிதர்களையும்,யாவரையும்,
வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று,
எங்கள் வால்மீகியையும் கவியாக்கிய,
நரோத்தமன்,
அவதரித்த புண்ணிய நாள் இன்று !

இன்று கேட்கிறேன் ராமனான க்ருஷ்ணா !

இரு வரம் தருவாயா !

சத்தியமாகச் செய்யவேண்டும் !

அயோத்யாவில் உனக்கு ஒரு
தங்கமாளிகை கட்டவேண்டும் !

 நீ கட்டின பாலத்தை
எங்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் !

நீ செய்வாய் !

க்ருஷ்ணா நான் உன் பக்தன் !
ஆனாலும் இப்போது உன்னை
ராமனாக நினைத்துப் பேசிவிட்டேன் !

உடுப்பிக்கு அடியேன் வந்தபோது
நீ
ராமனாகத்தானே நின்றாய் !

அதனால் இது என் குற்றமல்ல !
உன் குற்றமே ! 

ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் !
ஜெய் சீதாராம் ! 

ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேராதே !
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன பூமிக்கு !

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP