ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, March 14, 2010

உலகைப் பார் !

ராதேக்ருஷ்ணா


ஏன் நம்பிக்கையை இழக்கிறாய் ?

வாழ்வில் நம்பிக்கை இழப்பதே
வழக்கமாகி விட்டதே !
என்ன செய்தால் நீ
நம்பிக்கையை இழக்கமாட்டாய் ?

ஒரு நாளில் எத்தனை முறை
நம்பிக்கையை இழக்கிறாய் . . .
நீயே கணக்கிட்டுப் பார் . . .

உனக்கே அசிங்கமாக இருக்கும் . . .

உனக்கே கேவலமாக இருக்கும் . . .

உனக்கே வெட்கமாக இருக்கும் . . .

ஏன் இத்தனை அவநம்பிக்கை ?
உனக்கு என்ன குறை ?

உலகில் பல வித
கஷ்டங்களோடு வாழும்
ஜனங்களைப் பார்க்கலாம் வா . . .

முழு வளர்ச்சி அடையாமல்,
மற்றவர் போன்று வாழ முடியாமல்,
மற்றவர்களால் கேலி செய்யப்படும்
குள்ள மனிதர்களும்
நம்பிக்கையோடு வாழ்கிறார்கள் !

உலகின் அழகு ஒன்றும் தெரியாமல்,
வெளிச்சமே அறியாத, தன் உருவம் கூட
தெரியாத,தன் சாப்பாட்டில் ஏதேனும் பூச்சிகள்
விழுந்தால் கூட கண்டுபிடிக்கமுடியாத,
இரண்டு கண்களும் இல்லாத
குருடர்களும்
எத்தனை நம்பிக்கையோடு வாழ்கிறார்கள் !

உடல் சுகத்திற்காக,ஒரு கோயிலில்
வைத்து தாலி கட்டிவிட்டு,முதலிரவைக்
கொண்டாடிவிட்டு,மொழி புரியாத ஊரில்,
ரயில் நிலையத்தில்,அம்போவென்று
ஆண்களால் கைவிடப்பட்ட
இளம்பெண்களும்
நம்பிக்கையோடு வாழ்கின்றார்கள் !

பிறவியிலேயே அங்கஹீனமானவர்களும்,
விபத்தில் உடல் குறை ஏற்பட்டவர்களும்,
தன் உடலைக் கூட தானே இயக்க முடியாத
நிலையிலிருப்பவர்களும் கூட,
திடமான நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !

பெற்றோர் யாரென்றே தெரியாமல்,
எங்கேயோ யாரோ வளர்க்க,
பிறந்த நாளும் தெரியாமல்,
குலமும்,கோத்திரமும்,பந்துக்களும்
தெரியாமல்,சொந்தம் என்று சொல்ல
யாருமில்லாமல் வாழும்
உலகில் அனாதைகள் என்று
பைத்தியக்காரத்தனமாக சொல்லப்படுகின்ற
"க்ருஷ்ண குழந்தைகள்"
மிக நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !


அடுத்த வேளை சாப்பாட்டிற்கு
வழி இல்லாமல்,வழி தெரியாமல்,
வீடு வீடாக,தெருத் தெருவாகப்
பிச்சை எடுத்து,எங்கோ படுத்துத்
தூங்கி,எதையோ உடுத்திக்கொண்டு,
எதையோ சாப்பிட்டுக்கொண்டு,
எல்லோராலும் விரட்டப்படும்
பிச்சைக்காரர்கள் கூட
நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !

மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு,
சொந்தங்களால் விற்கப்பட்டு,
வாழ வழி தெரியாமல், சாப்பாட்டிற்காக,
தன் உடலை விற்றுப் பிழைக்கும்
விலைமாதர்களும்
என்றாவது ஒரு நாள் விடியும் என்று
தன் உடலின் வலியையும்,
மனதின் காயங்களையும் தாங்கிக்கொண்டு
நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள் !


பேசியே தன் காரியத்தைச் சாதித்துக்
கொள்ளும் சுய நல உலகில்,
பேசவே முடியாத, தன் மனதின்
எண்ணங்களை யாரிடமும் உள்ளபடி
சொல்லமுடியாத,
ஊமைகளும்,
நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !

இரண்டு கைகளுமில்லாமல்,
தன் ஆகாரத்தைக்கூட தானே
எடுத்துச் சாப்பிடமுடியாமல்,
தன் உடலைக்கூட சுத்தம் செய்ய
முடியாமல்,தன் ஆடையைக் கூட
தானே அணிந்துகொள்ள முடியாமல்
இருக்கும் இருகை இல்லாதவரும்
நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !


இரு காலுமில்லாமல்,நடக்க
வாய்ப்பேயில்லாமல்,ஆமை போல்
ஊர்ந்து ஊர்ந்து சென்று, மல மூத்திரம்
விடுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்
காலில்லாத முடவரும்
நம்பிக்கையோடு வாழ்கின்றார்கள் !


ஏதோ ஒரு விபத்தினால்,
முதுகுத் தண்டுவடத்தில் அடி பட்டு,
கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லாமல்,
தன்னுடைய மல மூத்திரம் வெளிவருவது
கூட தெரியாமல்,அடுத்தவரின்
உதவியை நாடியே வாழவேண்டிய
நிலையிலிருப்பவரும்
நம்பிக்கையோடு வாழ்கிறார்கள் !


பெற்று வளர்த்த பிள்ளைகளே,
வயதான காலத்தில் காப்பாற்றாமல்,
தள்ளிவிட்ட சமயத்திலும்,
தங்களின் தள்ளாத வயதிலும்,
தங்கள் காரியங்களைத் தானே
கவனித்துக்கொள்ளும்,
ஆதரவற்ற முதியோர்களும்
நம்பிக்கையோடு வாழ்கின்றார்கள் !


தாங்கள் வாழ்ந்த நாட்டை விட்டு,
யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து,
கதியில்லாமல் வேறு நாடுகளில்,
பிச்சைக்காரர்களைப்போல்,
திக்கு தெரியாமல்,எதிர்காலம் புரியாமல்
வாழும் அகதிகளும்
மிகுந்த நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !

உலகின் எந்த சத்தத்தையும்
அனுபவிக்க முடியாமல்,மொழியின்
சுவாரஸ்யத்தை உணராமல்,
தாலாட்டையும்,ஆனந்தமான சிரிப்பின்
ஒலியையும்,சத்சங்கத்தையும்,
இசையையும்,குயிலின் ஓசையையும்,
அனுபவிக்க முடியாத
செவிடர்களும் நம்பிக்கையோடு
வாழ்கின்றார்கள் !


தன்னுடைய சொத்தை பந்தங்களே
அபகரித்துவிட்டு,நம்பிக்கை துரோகத்தால்
ஏமாந்தபோதும்,அனாதையாக
தெருவில் விடப்பட்ட வாழ்ந்து
கெட்டவர்களும்,
நம்பிக்கையோடு வாழ்கின்றார்கள் !

இளவயதில் கணவனை இழந்து,
குடும்ப பாரத்தைச் சுமந்துகொண்டு,
தன்னுடைய ஆசைகளைக் கொன்றுவிட்டு,
குழந்தைகளுக்காகவும்,குடும்ப
மரியாதைக்காகவும்,உயிரைச் சுமக்கும்
இல்லத்தரசிகளும்
மிக நம்பிக்கையோடு வாழ்கின்றனர்!


கணவனும் இல்லாமல்,குழந்தைகளும்
இல்லாமல்,பந்துக்களும் கண்டுகொள்ளாத
நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கும்,
தானே வேலை செய்து தன் வயிற்றிற்கு
உணவிட்டுக்கொண்டு அடுத்தவர்களுக்கும்
தன்னால் இயன்ற உதவிகளையும் செய்யும்
விதவைகளும் நம்பிக்கையோடு
வாழ்கின்றர்கள் !


நாட்டிற்காக தன் இன்னுயிரை
இழந்த ராணுவத்தினரின் குடும்பத்தினரும்,
எல்லோரும் அவர்களை
மறந்தபின்னரும், வாழ்க்கையில்
நம்பிக்கையோடு வாழ்கின்றனர் !

இன்னும் இதுபோல்
பலகோடி பேர் வாழ்க்கையில்
பலவிதமான இன்னல்களோடு
மிக நம்பிக்கையோடு
வாழ்கின்றார்கள் !


நீயோ சுகமாக 
நல்ல சரீரத்துடனும்,
நல்ல குடும்பத்தாருடனும்,
வயிறார ஆகாரத்தோடும்,
உயர்ந்த ஆடைகளோடும்,
ஒரு சிரமமில்லாமல்
இருக்கின்றாய் என்பதை
இனியாவது உணர்ந்துகொள் !


உலகைப் பார் !
உள்ளபடி உலகைப் பார் !


உன் க்ருஷ்ணனுக்கு உன்
மீதுள்ள கருணையைப் பார் !

உன் க்ருஷ்ணனுக்கு உன்
வாழ்க்கையில் உள்ள அக்கரையைப் பார் !


இனியாவது நம்பிக்கை இழக்காதே !
மறந்தும் நம்பிக்கை இழக்காதே !
கனவிலும் நம்பிக்கை இழக்காதே !
எது நடந்தாலும் நம்பிக்கை இழக்காதே !
யார் எப்படி நடத்தினாலும்
நம்பிக்கை இழக்காதே !

உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !
உன் குரு இருக்கிறார் !
சத்சங்கம் இருக்கிறது !


எல்லாவற்றையும் கடந்து வந்த
நீ, இனி வரும்
எல்லாவற்றையும் கடப்பாய் !


இந்த சம்சார சாகரத்தை
நிச்சயம் கடப்பாய் !
எல்லாவற்றையும் ஜெயிப்பாய் !
உன்னை ஜெயிப்பாய் !
க்ருஷ்ணனிஷ்டப்படி ஜெயிப்பாய் !
உன் குருவின் ஆசைப்படி
எல்லோரையும் ஜெயிப்பாய் !

உலகைப் பார் . . .. 
உண்மையை புரிந்து கொள் . . .

ஜெயிப்பாய் . . . ஜெயிப்பாய் . . .ஜெயிப்பாய்!

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP