ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, June 24, 2010

அருகதையில்லை !

ராதேக்ருஷ்ணா !

பரதா !
தாசரதியின் செல்லத் தம்பியே ! 
உத்தமி கைகேயி பெற்ற ரத்தினமே !
சுமைதாங்கி வார்த்தையின் அர்த்தமே !
தியாக வாழ்க்கையின் உருவமே ! 


ஆசைவயப்பட்டு
மனதில் ப்ரார்த்தனையோடு
அலையும் நாங்கள் எங்கே ?
ஆசையை அழித்த நீ எங்கே . . . !

அடுத்தவரின் சொத்துக்கு
ஆளாய் பறக்கும்
நாங்கள் எங்கே ?
உனக்கென கிடைத்ததையும்
வேண்டாமென்ற நீ எங்கே . . . !

சுகபோகமே வாழ்க்கையின்
உண்மையான ப்ரயோஜனமென்று
நாயாய் திரியும்
நாங்கள் எங்கே ?
14 வருஷங்கள் மரவுரி
தரித்து,தரையில் படுத்த நீ எங்கே . . . !

தேவைக்காகத் தெய்வத்தைக்
கொண்டாடும்
சுயநலப்பிசாசுகளான
நாங்கள் எங்கே ?
தெய்வமே தேவையென்று
எல்லாவற்றையும் தவிர்த்த நீ எங்கே . . . !

செய்த பாவத்திற்கு உலகில் பழி வர,
அதை மறுத்து வாதாடும்,
நாங்கள் எங்கே ?
பாவமே செய்யாமல்
பழியைச் சுமந்த நீ எங்கே . . . !

அகம்பாவத்தினால் உளறி, 
சிறிது அவமானம் ஏற்பட்டாலே
தெய்வத்தை நிந்தனை செய்யும்
நாங்கள் எங்கே ? 
ஊரே அவமதித்த போதும்
பக்தியை நிரூபித்த நீ எங்கே . . . !

தன் தவற்றை அடுத்தவர் தலையில்
போட்டு தப்பிக்கும் நாங்கள் எங்கே ?
கூனியின் சதி,கைகேயிமாதாவின் வரம்,
தசரதரின் மரணம்,ஸ்ரீ ராமனின் வனவாசம்
என எல்லாவற்றிற்கும் தன்னுடைய
பாபமே காரணம் என்ற நீ எங்கே . . . ! 

நினைத்த காரியம் நடக்கவிட்டால்,
அழுது புரண்டு நடித்து வேஷமிடும்
நாங்கள் எங்கே ?
ராமன் சொன்ன வார்த்தையை மதித்து
அவன் வைத்த இடத்தில்
14 வருஷம் வாழ்ந்து காட்டிய நீ எங்கே . . . !

சோம்பேறித்தனத்தால் 
 தினமும் பூஜை செய்யாமல், சாக்கு
சொல்லி தப்பிக்கும் நாங்கள் எங்கே ?
ஸ்ரீ ராமனின் பாதுகையே கதி என்று
14 வருஷம் அதையே பூஜை செய்து
கொண்டாடின நீ எங்கே . . . ! 

 ஸ்ரீராமனைப் பார்க்கும் ஆசையே
இல்லாமல்,மிருக ஜாதி போல்,
சாப்பாடு,தூக்கம்,காமம் என்று
அலையும் நாங்கள் எங்கே ?
15வது வருஷத் தொடக்கத்தில்
ஸ்ரீ ராமனைப் பார்க்கவில்லையென்று,
அக்னியில் குதிக்கச்சென்ற நீ எங்கே . . . !

 பரதா. . .
ஸ்ரீ மான் நீ . . .
உத்தம ராம தாஸன் நீ . . .  

உன்னோடு கொஞ்சம்
எங்களை உரசிப்பார்த்தோம் . . .
அதில் ஒரு உண்மை
தெளிவாகப் புரிந்தது . . .

உன் பெயரைச் சொல்லக்கூட
எங்களுக்கு அருகதையில்லை . . .

இதுவே அந்த உண்மை . . .

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP