ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, May 30, 2012

எங்கள் குலதெய்வம் . . .

ராதேக்ருஷ்ணா


இந்த ராத்திரி விசேஷ ராத்திரி . . .

இபபொழுது திருக்குருகூர் ஆதிநாதர்
ஆழ்வார் திருநகரியில்
திருக்குருகூர் நம்பியோடு
திவ்யமாய் திருவீதி உலாப் போகிறார் . . .

இந்த சமயத்தில்
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான்
ஆழ்வார் திருநகரியில்
ஸ்வாமி நம்மாழ்வாரோடு
உவந்த உள்ளத்தனாய் உலாப் போகிறார் . . .

இந்த நடுநிசியில்
வரகுணமங்கை விஜயாசனர்
ஆழ்வார் திருநகரியில்
வேதம் தமிழ் செய்த பிரானோடு
திருவீதி உலாப் போகிறார் . . .

இந்த உன்னத இரவில்
திருப்புளியங்குடி பூமிபாலர்
ஆழ்வார் திருநகரியில்
காரி மாறன் சுகப்பட
ரக்ஷகனாய் உலாப் போகிறார் . . .

இந்த இருளடைந்த நள்ளிரவில்
திருத்தொலைவில்லிமங்களம்
அரவிந்த லோசனரும், தேவர்பிரானும்,
ஆழ்வார் திருநகரியில்
வகுளாபரணனோடு
வாத்சல்ய உலாப் போகிறார் . . .

இந்த வைகாசி வசந்த ராத்திரியில்
திருக்குளந்தை மாயக்கூத்தன்
ஆழ்வார் திருநகரியில்
சீர் சடகோபனோடு
மாயக் கூத்தாடிப் போகிறார் . . .

இந்த சுகம் தரும் ப்ரேம ராத்திரியில்
தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதர்
ஆழ்வார் திருநகரியில்
பராங்குச நாயகியோடு
காதல் உலாப் போகிறார் . . .

இந்த தென்றல் வீசும் ராத்திரியில்
திருக்கோளூர் வைத்தமநிதி
ஆழ்வார் திருநகரியில்
குருகை பிரானோடு
குதூகலமாய் உலாப் போகிறார் . . .

தாமிரபரணியும் அலையாட,
தொண்டர்களும் தொழுதாட,
திவ்ய ப்ரபந்தமும் திரண்டாட ,
வேதமும் தன்னை மறந்தாட,
 சந்திரனும்  சுகமாய் சதிராட,
திருப்புளியாழ்வாரும் திளைத்தாட,
மதுரகவியும் மதுரமாயாட,
கோபாலவல்லியும் அழுதாட,

வகுளாபரணன்,காரிமாறன்,
எங்கள் நம்மாழ்வார்
திருநகரியை வைகுந்தமாக்கி
பவிஷ்யதாசார்யன் ராமானுஜனும்
கை கூப்பி கும்பிட்டு ஆட
கலிபுருஷனும் கலங்கியாட,
திருவீதி உலாப் போகிறார் . . .

ஒன்பது கருட சேவை
அனுபவிக்கும் மனிதரே
எங்கள் குலதெய்வம் . . .
 Read more...

Friday, May 25, 2012

என் அருமைக் குழந்தையே !

ராதேக்ருஷ்ணா


வாராய் . . .
என் அருமைக் குழந்தையே !
வாராய் . . .

உலகம் உய்ய கீதை சொன்ன
வழி காட்டும் நாயகனைக் காண . . .
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வேதத்தின் சுவைப்பயனை
விழுமும் வேதவல்லியைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வேங்கடவனை க்ருஷ்ணனாய்,
ருக்மிணியுடன்,பலராமனுடன் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

அரங்கனை அன்போடு ரசிக்க,
மந்நாதனாய் தரிசிக்க,
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ஆனையின் துயரம் தீர்த்த
கஜேந்திர வரதனை கண்ணாரக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ப்ரஹ்லாதனைக் காத்து,
நம்மையும் காக்கும் நரசிம்மனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ராமானுஜனைத் தந்த,
ராமானுஜனாய் வந்தவனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

முதலாழ்வார் மூவரும்,
திருமழிசையாரும் சந்தித்த
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

அன்பைத் தகளியாய் கொண்ட
பேயாழ்வாரின் அவதார ஸ்தலமான
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ஆயர் குலத்தினனாய்
நம்பெருமாளை மீசையோடு காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

மஹாபாரத யுத்த விழுப்புண்களோடு
வீரமான அன் அப்பனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

விவேகானந்தனும் தன் கடிதத்தில்
சரணாகதி செய்த ஆதியை அமுதைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

பார்த்தனுக்கும் சாரதியாகி,
நமக்கும் சாரதியான அழகனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

என் பக்தனுக்காக நான் சங்கம்
முழங்குவேன் என்னும் பார்த்தசாரதியைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வாராய் . . .
என் அருமைக் குழந்தையே !
வாராய் . . .

உடனே வாராய் . . .
உன்னைத் திருவல்லிக்கேணி
அழைத்துச் செல்வதே என் கடமை !

பார்த்தசாரதி  என்னை அழைத்தான் !
நான் உன்னை அழைத்துச் செல்வேன் !

இது ராமானுஜன் மேல் சத்தியம் . . .

Read more...

Sunday, May 20, 2012

காத்திருப்பதே தவம் . . .

ராதேக்ருஷ்ணா
 
திருமலை . . .
 
நினைத்தபோது அழைக்கிறான்
மலையப்பன் . . .
அவன் நினைக்கும்போதெல்லாம்
என்னை அழைக்கின்றான்
மலையப்பன் . . .
 
ஒவ்வொரு முறையும்
என்னைக் காக்க வைப்பதில்
ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சந்தோஷம் . . .
எனக்கும் தான் . . .
 
வேங்கடவன் நான் அவனைத்
தரிசிக்கும் நாளுக்காகக்
காத்திருக்கும்போது,
நான் காத்திருப்பதில்
என்ன தவறு ?
 
எனக்கும் திருமலைக்குச்
சென்று வேங்கடநாதனுக்காகக்
காத்திருப்பதே தவம் . . .
 
நான் ஒன்றும் பெரிய
ஞானியோ,ரிஷியோ,
பக்தனோ இல்லை....
அதனால் நான் மலையப்பஸ்வாமிக்காகக்
காத்திருப்பதையே தவமாய் செய்கிறேன் . . .
 
ஸ்ரீசைல நாதனின் தரிசனத்திற்குக்
காத்திருப்பதைப் போல்
சுகமான ஒரு காரியம் இந்தப்
பூவுலகில் மனிதருக்கு
வேறொன்றும் சத்தியமாய் இல்லை !
 
 
நான்கு மணி நேரம் காத்திருந்து,
ஒரு நிமிஷத்திற்குள் பாலாஜியை
பாதாதி கேசம் பலமுறை
பார்த்த சுகம் இருக்கிறதே . . .
அப்பப்பா . . . இன்னும் தித்திக்கிறதே !
 
திருவடியைக் காட்டும் வலது கையும்,
தன்னைக் காட்டும் இடது கையும்,
சர்வ அலங்காரத் திருமேனியும்,
இன்னும் கண்ணில் நிற்கிறதே . . .
 
ஜனங்களுக்கும் இந்த சேஷாசல
நாதன் மேல் எத்தனை ஆசை . . .
எவ்வளவு நம்பிக்கை . . .
அம்மம்மா . . . அசந்துபோகின்றேன் !
 
மலையப்பனை ரசிக்கும் பாஷ்யகாரர் . . .
ஜனங்களுக்கு அவர் செய்யும் ஆசி . . .
எத்தனை சந்தோஷம் என் ராமானுஜனுக்கு !
 
திருமலையின் ஒவ்வொரு மரமும்,
ஒவ்வொரு பூச்சியும், ஒவ்வொரு மனிதரும்,
நிஜமாகவே பரம பாக்கியவான்கள் !
 
 ஸ்ரீ ஸ்ரீநிவாசா . . .
அத்வைதியும்,த்வைதியும்,
விசிஷ்டாத்வைதியும்,
வடக்கத்தியரும்,தெற்கத்தியரும்,
எல்லோரும் உன்னிடம் மயங்கிக்கிடக்கும்
ரஹஸ்யம்தான் என்ன ? ? ? ! ! ! ? ? ?
 
எல்லாவற்றிற்கும் அவசரப்படும்
நாங்கள் உன்னிடம் வந்தால் மட்டும்,
எப்படி பல மணி நேரம் காத்திருக்கிறோம் ? ! ?
 
இதுவே எனது கேள்வி !
இதுவே எனக்கு ஆச்சரியம் !
 
பதில் உனக்குத் தெரியும் . . .
எனக்குப் பதிலே வேண்டாம் . . .
 
உனக்காக என்னை எப்போதும்
காத்திருக்க வை . . .
 
வாழ்க்கையில் யார் யாருக்காகவோ
காத்திருந்தேன் . . .
காத்திருக்கிறேன் . . .
 
உனக்காகக் காத்திருக்காவிட்டால்
என் தாய் என்னைப் பெற்றது வீண் ...
 
 

Read more...

Saturday, May 19, 2012

உடனே சாப்பிடு . . .

ராதேக்ருஷ்ணா
 
பழம் வேண்டுமா பழம் ?
 
 
 
ரசமான பழம் . . .
 
பழைய மரத்தின் பழம் . . .
 
கிளி கொத்தின பழம் . . .
 
மோக்ஷம் தரும் பழம் . . .
 
நல்ல வாசனையுள்ள பழம் . . .
 
சுலபமாக சாப்பிட ஏற்ற பழம் . . .
 
பகவான் காட்டின பழம் . . .
 
ப்ரும்மதேவர் ரசித்த பழம் . . .
 
நாரதர் கொண்டாடின பழம் . . .
 
வேதவ்யாசர் தந்த பழம் . . .

சுகப்ரும்மம் அனுபவித்த பழம் . . .

பரீக்ஷித்து உண்ட பழம் . . .

கலியுகத்திற்கு ஏற்ற பழம் . . .

நாம ருசி மிகுந்த பழம் . . .

எல்லோருக்கும் ஏற்ற பழம் . . .

சம்சார தாபம் தீர்க்கும் பழம் . . .

பிறவிப்பிணி நீக்கும் பழம் . . .

க்ருஷ்ணனுக்குப் பிடித்த பழம் . . .
 
ராதிகா ஆசைப்படும் பழம் . . .
 
எனக்கும் பிடித்த பழம் . . .
 
நீ சாப்பிட வேண்டிய பழம் . . .
 
பாகவத பழம் . . .
 
ஸ்ரீ மத் பாகவதம் என்னும் ஞானப்பழம் . . .
பக்திப் பழம் . . .
வைராக்யப் பழம் . . .
 
 
இந்தப் பழமே உன் துன்பம் நீக்கும் . . .
இந்தப் பழமே உனக்கு ஆனந்தம் தரும் . . .
இந்தப் பழமே உனக்கு சமாதானம் நல்கும் . . .
 
உடனே சாப்பிடு . . .
ஸ்ரீமத் பாகவத பழத்தை . . .
 
 
விலை :  உன் நம்பிக்கை,
அளவு : உன் தேவையைப் பொறுத்து,
 
இலவசமாக உன் வீட்டிற்கு
அனுப்பிவைக்கப்படும் . . .
 
சாப்பிட வேண்டிய முறை . . .
பழத்தைச் சாப்பிட்டவர்களைக் கேள் . . .
 
பழத்தை உண்டவர்கள் . . .
ஸ்ரீ ப்ரும்ம தேவர்,
ஸ்ரீ நாரத மஹரிஷி ,
ஸ்ரீ வேத வ்யாசர்,
ஸ்ரீ சுகப்ரும்ம மஹரிஷி,
ஸ்ரீ பரிக்ஷித் மஹாராஜன்,
ஸ்ரீ சூத பௌராணிகர்,
ஸ்ரீ சௌனக மஹரிஷி,
ஸ்ரீ ஆத்மதேவர்,
ஸ்ரீ கோகர்ணன்,
ஸ்ரீ துந்துகாரி,
ஸ்ரீ சனகாதி முனிவர்கள் . . .
மற்றும் பலர் . . .
 
கிடைக்குமிடம் :
பாரத தேசம்
 
விற்பனையாளர்கள் :
உத்தம ஆசார்ய புருஷர்கள்,
பாகவத ரசிக சிகாமணிகள்
 
 
உடனே வாங்கு . . .
உடனே சாப்பிடு . . .
 
ஆயுள் முடியும் முன்
ஒரு முறையாவது சாப்பிட்டு விடு . . .
 
ஆயுள் முடியும் வரை
சாப்பிட்டுக்கொண்டேயிரு . . .
 
மோக்ஷம் அடையும் வரை
சாப்பிடுவாய் . . .
 
 

Read more...

Saturday, May 5, 2012

நரசிம்மம் வரும் !

ராதேக்ருஷ்ணா
 
 
 ப்ரஹ்லாதா . . .
உனது வீரம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் த்யானம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் பக்தி வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் நாமஜபம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் நம்பிக்கை வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் பணிவு வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் சிரத்தை வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
எப்படி கண்டுபிடித்தாய் ?
நரசிம்மன் தூணில் இருந்ததை ? ! ?

ப்ரஹ்லாதா . . .
எப்படி தீர்மானம் செய்தாய் ?
நரசிம்மன் நாராயணன் என்பதை ? ! ?

ப்ரஹ்லாதா . . .
என்ன நினைத்தாய் ?
நரசிம்மன் உன் தகப்பனை கொன்ற போது ? ! ?

ப்ரஹ்லாதா . . .
என்ன தைரியத்தில் நரசிம்மரின்
அருகில் ஆனந்தமாய சென்றாய் ? ! ?

ஓ ப்ரஹ்லாதா . . .
சத்தியமாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர யாராலும்
நரசிம்மரை உள்ளபடி அறியமுடியாது !

ஓ ப்ரஹ்லாதா . . .
உறுதியாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர எவராலும்
நரசிங்கத்தை இப்படி  ரசிக்கமுடியாது !
 
ஓ ப்ரஹ்லாதா . . .
இறுதியாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர யாருக்கும்
நரசிம்மரை பூரணமாய் அனுபவிக்கமுடியாது !
 
ஆகவே ப்ரஹ்லாதரே . . .
உமது நரசிம்மத்தை
அடியேன் அனுபவிக்க
ஆசிர்வாதம் செய்வீர் . . .
 
நரசிம்மத்தின் செல்லமே . . .
உம் நரசிங்கத்தை
அடியேன் மனதில்
நிரந்தரமாய் தங்கச் சொல்லும் . . .
 
நரசிம்மப் ப்ரியனே . . .
உன் அழகிய சிங்கரை
உம்மை ஆசிர்வதித்த கை கொண்டு
என்னை ஆசிர்வதிக்கச் சொல்லும் !

நரசிம்ம ஜயந்தியில்
நான் சரணடைவது
நரசிம்ம பக்தனான
ப்ரஹ்லாத ஆழ்வாரிடத்தில் . . .

நிச்சயம் என்னைத் தேடி
நரசிம்மம் வரும் . . .Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP