ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, July 6, 2012

கருட சேவை . . .

ராதேக்ருஷ்ணா
 
 
அரிது . . .அரிது . . .
மானிடராய் பிறத்தல் அரிது !
 
அதிலும் கூன் குருடு செவிடு இன்றி
பிறத்தல் அரிது !
 
அதிலும் கலியுகத்தில் பிறத்தல் அரிது !
 
அதிலும் பாரதத்தில் பிறத்தல் அரிது !
 
அதிலும் இந்துவாய் பிறத்தல் அரிது !
 
அதிலும் விஷ்ணு பக்தராய் பிறத்தல் அரிது !
 
 அதிலும் காஞ்சிபுரம் செல்வது அரிது !

அதிலும் வரதனை சேவிப்பது அரிது !

அதிலும் வரதராஜனின் கருடசேவை
கிடைப்பது அரிது . . .
 
அதிலும் ஆனி ஸ்வாதி கருடசேவை
கிடைப்பது அரிதிலும் அரிது . . .
 
இத்தனை அரிதான விஷயம்
எங்களுக்கு பவித்தது
நிஜமாகவே அரிது . . .
 
 
வரதனை சேவிக்க நினைத்தேன் . . .
 
அழைத்துச் சென்றான் என் வரதன் . . .
 
சேவித்தவுடன் கிளம்ப நினைத்தேன் . . .
 
 
வரதனுக்கு நான் அவனின் கருடசேவை
அழகை ரசிக்கவேண்டும் என்று ஆசை . . .
 
அதனால் முதலில் ஒரு பட்டர் மூலம்
எனக்குச் சொன்னான் . . .
ராமானுஜருக்குச் திருக்கச்சி நம்பிகள்
வழியாகச் சொன்னது போலே . . .
 
புஷ்ப மாலையில் புன்னகையோடு
காத்திருந்த வரதனைக் கண்ணாரக்
கண்டவுடன் கிளம்பினேன் . . .
 
போதுமென்று நிறைவோடு கிளம்பினேன் !
ஆயினும் வரதன் விடுவதாக இல்லை . . .
 
 
இன்னொரு பட்டர் வந்தார் . . .
கூப்பிட்டு ப்ரசாதம் தந்தார் . . .
இன்று ஆனி ஸ்வாதி என்றார் . . .
பெரியாழ்வார் திருநக்ஷத்ர கோஷ்டி என்றார் . . .
சரி என்றேன் . . .ப்ரசாதம் பெற்றேன் . . .
அடியேன் தாசன் என்றேன் . . .


வெளியில் வந்தோம் . . .
பக்தர்களின் பக்தி வெள்ளம் . . .
அசந்து போனேன் வரதனின் வைபவத்தில் . . .
 
 
சரி . . .கிளம்பலாம் நேரம் ஆகிறது என்று
புத்தி உத்தரவு இட்டது . . .
வரதனைப் பார்த்தாகிவிட்டது . . .
கருடசேவை வேறொரு சமயம்
பார்க்கலாம் என்றது புத்தி....
 
மனமோ . . .கொஞ்ச நேரம் இருக்கலாமே
என்று பவ்யமாய் கெஞ்சியது . . .
இன்னும் ஒரு பத்து நிமிடம்
இருந்து பார்க்கலாமே என்றது . . .
வரதனை கருட சேவையில்
பார்ப்பது எத்தனை பாக்கியம் என்று
மனம் புலம்பியழுதது . . .


புத்தியும் மனமும் என்னோடு
சண்டை போட்டது . . .
 நானோ . . . வரதா . . . நீயே கதி !
என்று அவனிடம் விட்டுவிட்டேன் . . .
வரதா . . .உன் ஆசை என் இஷ்டம் என்றேன் !

புரியாமல் நின்றிருந்தேன் . . .

ப்ரசாதம் தந்த பட்டர் வந்தார் . . .
என்ன கிளம்பியாச்சா . . .என்றார் . . .
ஆமாம் என்றேன் அரை மனதுடன் !

நின்றார் . . . சொன்னார் . . .
கருட சேவை உயர்ந்தது என்றார் . . .
வைகாசி கருட சேவை,
ஆனி கருட சேவை, கிடைப்பது அரிது !
இன்னும் பத்து நிமிஷம் இருந்தால்
நன்றாக சேவிக்கலாம் என்றார்  . . .

என் மூலமாகப் பெருமாள்
உங்களுக்கு சொல்கிறார் என்றார் . . .

அடியேனின் புத்தி அடங்கியது !
மனம் ஆனந்தத்தில் ஆடியது !
உடல் மகிழ்ச்சியில் திளைத்தது !
கண்கள் கண்ணீரில் நிறைந்தது !

என் வரதன் தன் ஆசையை
எனக்கு தெளிவாய் சொல்லிவிட்டான் !
 
இதன் பிறகும் கிளம்புவேனா ?
 அமைதியாய் மனதினுள்
வரதனை நினைத்திருந்தேன் . . .
 
ஜனங்கள் வரதனுக்காகக் காத்திருந்தனர் !
கருடசேவைக்காகத் தவமிருந்தனர் !
அடியேனும் நிம்மதியாய் நின்றேன் !
என்னோடு வந்த அடியவரும்
அமைதியாய் இருந்தனர் !
 
திரை விலகியது . . .
மாயத்திரை விலகியது . . .
அகம்பாவத் திரை அழிந்தது . . .
சந்தேகத் திரை கிழிந்தது . . .
 
 அத்தியூரானை,
புள்ளை ஊர்வானாகக் கண்டேன் . . .
 
பெரியாழ்வாரைக் காணக்
கருடன் மீதேறி வந்தவன்,
இந்த கோபாலவல்லியை நிறுத்த
கருடன் மீதேறி வந்தான் . . .

கதறினேன் . . .மனத்தால் . . .
ஏனடா . . . இந்தக் கருணை என்மீது
உனக்கு . . . ஐயோ முடியவில்லை
என்றேன் வரதனிடம் . . .


புன்னகை மன்னன் புதிராய் சிரித்தான் !
எனக்கு நீ வேண்டும் என்றான் . . .
அதனால் உன்னை நிறுத்தினேன் என்றான் !

அடியேன் சொன்னேன் . . .
அடியேன் ராமானுஜ தாசன் . . .
என்றும் வரதனின் கொத்தடிமை என்றேன் !


இதை மறக்காதே என்றான் வரதன் . . .
அடியேன் மறந்தாலும் நீ மறவாதே என்றேன் நான் !
 
சரி . . .சுகமாய் கிளம்பு என்றான் . . .
சீக்கிரம் வா என்றான் . . .
அத்திகிரி அழகன் . . .
 
சரி . . . அடியேன் உத்தரவு என்றேன் . . .
சீக்கிரம் அழை என்றேன் . . .
அழகாய் சிரித்தான் புன்னகை அரசன் !
 
வரதராஜனே அழைத்தான் . . .
வரதராஜனே நிறுத்தினான் . . .
வரதராஜனே அனுக்ரஹித்தான் . . .
 
அடியேன் சுகமாய் அனுபவித்தேன் . . .
 
பெரியாழ்வார் போலே
நானும் கருடனின் மேல்
அத்திகிரி அருளாளனைக் கண்டேன் . . .
 
வரதராஜன் பேரருளாளன்
என்பதை புரிந்துகொண்டேன் . . .
 
யோசித்தேன்  . . . புரிந்தது . . .
 
இந்த கருடசேவை எனக்குத் தந்தது
என் ராமானுஜனும், என் பெருந்தேவித் தாயாரும் !
 
அடியேன் ராமானுஜ தாசன் . . .
அடியேன் பெருந்தேவி பிள்ளை . . .
 
வரதா . . . 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
உயர்வர உயர் நலமுடையவனாய் ,
அயற்வரு அமரர்கள் அதிபதியாய்,
மயற்வற மதி நலம் அருளுபவனாய்,
துயரறு சுடரடியோடு,
அடியோமோடும்,
பெருந்தேவியோடும்,ராமானுஜனோடும்,
திருக்கச்சி நம்பியோடும்,
சுகமாய் இருப்பாயாக . . .
 
அடுத்த கருடசேவை எப்போது வரதா ? ! ?
 
 


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP