ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, July 28, 2012

திருமகளே . . .

ராதேக்ருஷ்ணா


திருமகள் பிறந்ததால்
திருப்பாற்கடலும் மஹிமை பெற்றது !
திருமகளைப் பெற்றதால்
சமுத்திரராஜனும் மேன்மையடைந்தான் !
திருமகளோடு பிறந்ததால்
சந்திரனும் அம்புலி மாமாவானான் !திருமகளைத் திருமணம் செய்ததால்
திருமாலும் தேவாதி தேவனானான் !
திருமகளோடு சம்மந்தம் ஏற்பட்டதால்
தாமரைக்கும் தெய்வீகம் வந்தது !திருமகளின் திருவடியில் இருப்பதால்
சலங்கையிலும் நாதம் பிறந்தது !
திருமகள் பிடித்து சேவை செய்வதால்
திருமாலின் செவ்வடியும் திருவடியாயிற்று !

திருமகளுக்கு தன் மார்பில் இடம் தந்ததால்
பெருமாளும் திருமால் ஆனார் !
திருமகளின் கருணையால் தான்
சம்சாரிக்கும் சரணாகதி கிடைத்தது !
திருமகளே வர மகளாய் வந்ததால்
விதேஹனும் விண்ணை அடைந்தான் !
திருமகளே மருமகளாய் வந்ததால்
தயரதனும் துயரம் தீர்ந்தான் !
திருமகளின் திருவடியை அடைந்ததால்
சிறியவனும் மன்னவனின் தகப்பனானான் !
திருமகளுக்காகத் தீரமாய் போரிட்டதால்
ஜடாயுவும் திருலோகம் அடைந்தார் !
திருமகளின் திருவாபரணத்தால்
சுக்ரீவனும் திருமாலின் தோழனானான் !
திருமகளிடம் தூது சென்றதால்
ஆஞ்சனேயனும் சிறிய திருவடியானான் !
திருமகளுக்காகப் பேசினதால்
விபீஷணனும் திருப்பாதம் அடைந்தான் !
திருமகள் வந்ததாலேயே வால்மீகியும்
திருத்தமாக ராமாயணம் சொன்னான் !
திருமகளைத் தந்தும் ஏற்றும்
பூமியும் திருந்திய செல்வமடைந்தாள் !
திருமகளே ஒரு மகளாய் கிடைத்ததால்
பீஷ்மகனும் கண்ணனின் மாமனாரானான் !
திருமகளுக்காகத் தூது போனதால்
பெரிய திருவடியும் தாபம் தீர்ந்தான் !திருமகள் திருநாரணனைத் தடுத்ததாலேயே குசேலனும் குறைவிலா திருமகனானான் !
திருமகள் தைரியமாய் துளசியைத் தந்ததால்
சத்தியபாமாவும் சமத்தானாள் !
திருமகள் வயிற்றில் சுமந்ததால்
காமனும் கண்ணனின் மகனானான் !
திருமகளால் தேவதேவியின் காதலனும்
தொண்டரின் அடிப் பொடியானான் !
திருமகளின் தாகம் தணிக்கத் தானே
ராமானுஜனும் தீர்த்தம் சுமந்தான் !
திருமகளின் கருணைக் கண் பார்வைக்கு
பராசர பட்டரும் ரங்கனின் வாயடைத்தான் !
திருமகளே . . . நீயே எங்களுக்கு
திருமாலின் திருவடியைத் தருவாய் !
திருமகளே . . .கருவிலே
திருவிலாததால் இருளிலே இருக்கின்றேன் . . .
திருமகளே . . . உன் கருவிலே
ஒரு நாள் வாழ  விரைந்து அருள் தா . . .
திருமகளே . . . உன் நிழலிலே
மழலையாய் உழல அனுமதி தா . . .
திருமகளே . . .
உன் மடியிலே மரணம் அடைய
நின் மகனுக்கு வரம் தா . . .
திருமகளே . . .
அடியேன் மறப்பேன் . . .
நீ மறவாய் . . .
சிறியேன் உன் தாசன் ! ! !
திருமகளே . . .திரு வாய், , , திறவாய் . . .
திருமகளே . . .வருவாய் , , ,தருவாய் . . .
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP