ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 செப்டம்பர், 2012

உன் பிறந்த நாள் !

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
உன் பிறந்த நாள் . . .
 
உனக்கு என்ன வேண்டும் ?

நான் ; உனக்கு ஏதாவது தரவேண்டுமே ?
க்ருஷ்ணன் ; என்ன தருவாய் நீ எனக்கு ?

நான் ; ஒரு பானை வெண்ணை தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; வேண்டாம் . . .நானே அதைத் திருடிச் சாப்பிட்டுக்கொள்வேன் !

நான் ; ஒரு அண்டா பால் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; வேண்டாம் . . .நான் அதை மாட்டின் மடியிலிருந்தே குடிப்பேன் !

நான் ; ஒரு தடா தயிர் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; வேண்டாம் . . . ஏற்கனவே அதை நான் உன் வீட்டிலிருந்து திருடி எடுத்துவிட்டேன் !

நான் ; ஒரு பாத்திரம் நிறைய நெய் ?
க்ருஷ்ணன் ; வேண்டவே வேண்டாம் . . .
உன் வீட்டு நெய்யில் இப்பொழுதுதான் இரண்டு கைப்பிடி மணலைப் போட்டு வைத்திருக்கிறேன் !

நான் ; நூறு தடா அக்கார அடிசில்
தரட்டுமாடா என் செல்லமே ?
க்ருஷ்ணன் ; ஏற்கனவே ஆண்டாள்
வாய் நேர்ந்து உன் ராமானுஜன்
எப்பொழுதோ கொடுத்துவிட்டான் !

நான் ; போடா . . . திருடா . . .
ஒரு கோமணம் தரட்டுமா, உன்
மாணிக்க மொட்டை மறைத்துக்கொள்ள ?
க்ருஷ்ணன் ; ஹூஹூம் . . .
எனக்கு நிறைய கோமணங்களை
ஏற்கனவே குரூரம்மையும், த்ரௌபதியும் கொடுத்துவிட்டார்கள் !

நான் ; என் சமத்தே . . .
உனக்கு நிறைய அப்பம்
தரேண்டா ?
க்ருஷ்ணன் ; ப்ராம்மண பத்தினிகள்
நிறைய தூக்குகளில் விதவிதமான
அப்பம் கொடுத்துவிட்டார்கள் !

நான் ; உனக்கு நிறைய பனம்பழங்கள் தின்னத் தருகிறேன் ?
க்ருஷ்ணன் ; ஹாஹாஹா . . .
நான் பனங்காட்டிற்கு சென்று
நானாகவே பறித்துத் தின்பேன் . . .
உனக்கும் கொடுப்பேன் !

நான் ; நன்றாகப் பிசைந்து
ஊறுகாயுடன் தயிர் சாதம்
ஜோராகத் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; என் யசோதா மாதா
மாதிரி யாராலும் ஒரு நாளும்
தயிர் சாதம் தரவே முடியாது !

நான் ; நிறைய விதவிதமான
சுவை மிகுந்த பழங்கள் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; கோகுலத்து பழக்காரியிடம் நானே தானியங்களைக் கொடுத்து
கை நிறைய வாங்கிக்கொள்வேன் !

நான் ; நீ மாடுமேய்க்க அழகான
தங்கக் கோல் பண்ணித் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; நந்தபாபா எனக்கு வைரங்கள் பதித்த பசும்பொன்னாலான
தங்கக்கோலை கொடுத்திருக்கிறார் . . .
இதோ பார் . . . அது தான் இது !

நான் ; நீ ஆனந்தமாய் ஊத
அற்புதமான புல்லாங்குழல் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; நீ என்ன தருவது ?
நான் போய் நின்றால் மூங்கில்களே
எனக்குத் தருமே !

நான் ; கொஞ்சம் மண்ணாவது தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; கொடுத்துவிட்டு, யசோதையிடம் கோள் மூட்டி என்னை உதை வாங்க வைக்க அத்தனை ஆசையா ?

நான் ; உன் கருப்பு வண்ணத்தை மாற்ற கொஞ்சம் மஞ்சளும், சந்தனமும் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; ஒரு பிரயோஜனமில்லை !
எல்லா கோபிகைகளும் முயன்று
பார்த்து விட்டார்கள் . . .
என் வண்ணம் தான் எல்லோரையும்
மயக்குகிறதே . . .

நான் ;  நீ சுகமாய் தூங்க
அழகாய் ஒரு தொட்டில் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; என் அளவிற்கு ஏற்றார் போல் பெரியாழ்வார் மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி, ஆனிப் பொன்னால் செய்து கொடுத்துவிட்டார் !

நான் ; உன் தலைக்கு பொருத்தமாக
ஒன்று தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; என்ன மயில்பீலி தானே ?
ஏற்கனவே வீடு முழுக்க நிரம்பி
வைக்க இடமில்லாமல் அம்மா
திணறுகின்றாள் ...பாவம் !

நான் ; உன்னை சுகப்படுத்தும்படி
மென்மையான மெத்தை தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; ஆதிசேஷன் என்னும்
பலராம மெத்தை இருக்க, அதை விட
சிறந்த மெத்தையும் உண்டோ ?

நான் ; நீ ஆனந்தத்தில் திளைத்து
உன்னையே மறக்க சுத்தமான
ப்ரேமையைத் தரட்டுமா ?
க்ருஷ்ணன் ; ராதிகா ராணி என்னும்
ப்ரேம சாகரம் என்னோடு என்றுமிருக்க எனக்கு என்ன குறைச்சல் ?

நான் ; க்ருஷ்ணா . . .எல்லாம் உன்னிடமே இருக்கிறது . . . நான் என்ன தரட்டும் உன்னுடைய பிறந்தநாளுக்கு ?
க்ருஷ்ணன் ; நீ ஒன்றுமே தர வேண்டாம் ! என் பிறந்தநாள் பரிசாக நான் உனக்கு ஒன்றைத் தரப்போகிறேன் . . .
நீ மறுக்காமல் வாங்கிக்கொள்ளவேண்டும் !
என்ன சரியா ? ! ?

நான் ; க்ருஷ்ணா . . . போக்கிரிப் பயலே . . .
தீராத விளையாட்டுப் பிள்ளையே . . .
நடைமுறைகளை மாற்றும் நாயகனே  . . . தா . . . வாங்கிக்கொள்கிறேன் !
க்ருஷ்ணன் ; நான் உனக்கு என்
பிறந்தநாள் பரிசாக என்னையே
தருகிறேன் . . .
நீ என்னை அனுபவி . . .
அதுவே நீ எனக்குத் தரும்
உன்னதமான பிறந்தநாள் பரிசு ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP