ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஸ்ரீரங்கம் . . . அந்தரங்கம்..

ராதேக்ருஷ்ணா




அந்தரங்கத்தில் உள்ள
அழுக்குகள் அறவே நீங்கி,
அந்தரங்கம் திருவரங்கமாக
அந்த ரங்கனிடம் சென்றேன் ! ! !

அந்த ரங்கத்தில் அரங்கனுக்கு
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்
தானான திருமேனி நம்
ராமானுஜரைக் கண்டேன் ! ! !

அந்தரங்கத்தில் அற்புதமாய்
அந்த ரங்கனை அணு அணுவாய்
ஆசையாய் அனுபவிக்கும்
அரங்கநாயகியைக் கண்டேன் ! ! !


அந்தரங்க அன்புடன் தன்னைத்
தொழுத மண்ணுடை விபீஷணனுக்காய்,
மதில் இலங்கை நோக்கிக் கிடக்கும்
அந்த ரங்கனை ஆசையாய்க் கண்டேன் ! ! !

அந்தரங்கத்தில் தன்னிடம்
தன்னையே பூரணமாய் தந்த
திருப்பாணரை தன்னுள் வைத்த
அந்த ரங்கத்தின் அமுதினைக் கண்டேன் ! ! !

அந்தரங்கமாய் தன்னைக் காதலித்து,
தனக்காய் ஏங்கின ஆண்டாளை,
தன் அந்தரங்கத்தில் அழகாய் கொண்ட
என் அரங்கத்து இன்னமுதனைக் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தில் அழுது தொழுது
பாடி அலற்றின நம்மாழ்வாரின்
நம்பெருமாளை அந்த ரங்கத்தில்
அதிசயமாய் அர்ச்சாவதரமாய்க் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தை அப்போதைக்கு இப்போதே
இந்த ரங்கனிடம் சொன்னால் தான்
உண்டென்று சொன்ன பெரியாழ்வாரின்
பெரிய பெருமாளை அந்த ரங்கத்தில் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தில் இருந்த அந்த ரங்கனை
மறந்து தேவதேவியின் அந்தரங்கத்தில்
தன்னை இழந்த விப்ரநாராயணரைத் 
தன் அந்தரங்கத் தொண்டர் அடிப் பொடியாய்
மாற்றின அந்த ரங்கனைக் கண்டேன் ! ! !




கருவரங்கத்தை மீண்டும் அடையாமலிருக்க,
திருவரங்கமே கதி என்றிருக்க,
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வாரும் அனுபவித்த
அந்த ரங்கனைக் கண்டேன் ! ! !

திருவரங்க யாத்திரை என்று
நித்யம் தன் ராஜ்ஜியத்தில் பறை அறிவித்த
அந்த ரங்கதேசத்தின் தாசன் குலசேகர ராஜனின்
அந்த ரங்கனைக் கண்ணாரக் கண்டேன் ! ! !


  அந்தரங்கத்தில் அந்த ரங்கனின் பாதம்
பிரியாதபடி இருக்க ப்ரார்த்தனை செய்த
திருமழிசை ஆழ்வாரின் ஸ்வாமியை
அந்த ரங்கத்தில் அமைதியாய்க் கண்டேன் ! ! !


அந்த ரங்கத்தில் வானளாவிய மதில்களை
அந்தரங்க கைங்கர்யமாகக் கட்டி, மதில் உமக்கு,
மடல் நறையூராருக்கு என்ற 
திருமங்கை மன்னனின் அந்தரங்க நாயகனை,
அந்த ரங்கனை அந்த ரங்கத்தில் கண்டேன் ! ! !


அந்தரங்கமாய் காவேரி தன் திருக்கையால்,
திருவடிகளை வருட, கருமணியாய்,
கோமளமாய், அமலனாய், அழகனாய்,
முன்னிலும் பின்பழகியவனாய்,
கள்வனாய், அழகிய மணவாளனாய்,
ஆதி பிரானாய், ஆயனாய், கோவலனாய்,
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வனாய்,
அனந்த சயனனாய், இஷ்வாகு குல தனமாய்,
உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும் என்று
நம்மைப் பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்,
அந்த ரங்கத்தில் கிடக்கும்,
அந்த ரங்கனிடம் என் அந்தரங்கம்
தானாய் சரண் புகுந்தது . . .


அந்தரங்கம் இனி அந்த ரங்கனிடம் ! ! !

https://www.facebook.com/media/set/?set=a.10151679774601631.1073741856.668376630&type=1&l=343515e1bb





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP