ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, September 27, 2013

காஞ்சிபுரம் . . .சேவிப்பேன் !

ராதேக்ருஷ்ணா
தரம் பார்த்து வரம் தராமல்,
சிரம் தாழ்ந்து சேவித்தாலே,
வருவோர் போவோர்கெல்லாம் வரம் தரும்
வரதராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

கரம் கூப்பி வருவோருக்கு,
வலக் கரத்தில் வருந்தாதே என்று
எழுதி வைத்து வரம் தரும்
 தேவராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


பெரும் பாரம் சம்சார சாகரம் என்று
வரும் அடியாரின் கடும் துயரம் தீர
ஆர்வமாய் பேரரருள் செய்யும்
பேரரருளாளனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !
 


பெருமையினால் பொறுமையிழந்த மனிதரை
அருள் நிறைந்த பார்வையினால் ஆட்கொள்ளும்
அருமையான பெருந்தேவித் தாயாரின்
தேவப்பெருமாளை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


புத்தியில்லாமல் பணத்தை மட்டுமே நாடி,
நித்தியமும் மரணத்தை அறியா மனிசரை,
அத்திசையிலும் அருகிலிருந்து காக்கும்
அத்திகிரி நாதனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

உச்சி மீது துயரறு சுடரடியை வைத்து,
கச்சிதமாய் பூந்தோட்டம் சமைத்து,
உசிதமாய் விசிறி வீசிய கச்சி நம்பியின்
கச்சியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !கேள்வி கேட்ட ராமானுஜரைக் கொல்ல,

ஆள் கூட்டத்தோடு சென்ற யாதவப்ரகாசனிடமிருந்து,
விந்தியத்தில் வில்லேந்தி வந்து மீட்ட
வேடுவனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


விருப்புற்ற ராமானுஜருக்கு கச்சி நம்பி மூலம்
திருத்தமாய் ஆறு வார்த்தைகளை அருளி,
கருவிலே திருவிலாத நமக்கும் கிருபை செய்யும்
அத்தியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


திருவரங்க பெருமாளரையரின் திருப்பாவைக்கு மயங்கி,
பெருந்தேவித் தாயாருக்கு தீர்த்தம் தந்த யதிராஜரை,
ஒரு வார்த்தைக்காய் திருவரங்கனுக்குத் தாரை வார்த்த
தியாகத்தின் ராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


நாற்பது வருடத்திற்கு ஒரு முறை
அற்புதமாய் திருக்குளத்தில் இருந்து
புறப்பட்டு வந்து பக்தருக்கு அருள் பாலிக்கும்
அத்தி மர ப்ரபுவை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


 
வரதராஜா . . . பேரருளாளா . . .
அத்தியூரா . . . கச்சியின் பதியே . . .
தேவப்பெருமாளே . . . தேவராஜனே . . .
 பெருந்தேவி நாயகா . . .
யதிராஜரைக் காத்த வில்லியே . . .
ஆளவந்தாருக்கு அருளின அருளாளப் பெருமாளே . .


சேவித்தேன் . . . உன்னை சேவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அழகை அனுபவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் கருணையைக் குடித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அருளில் திளைத்தேன் . . .
சேவித்தேன் . . . உன் குழந்தையாய் மாறினேன் . . .
சேவித்தேன் . . . உன் சொத்தாய் ஆனேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என்னுள் கண்டேன் . . .
சேவித்தேன் . . . உன்னிடம் என்னைக் கொடுத்தேன் !
சேவித்தேன் . . . உன்னையன்றி வேறறியேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என் சொத்தாய் பாவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் பித்தனானேன் . . .
சேவித்தேன் . . . இன்னும் சேவிப்பேன் . . .உன் இராமானுஜ தாசனாய்
நான் ஆகும் வரை சேவித்துக்கொண்டிருப்பேன் . . .காத்திருப்பாய் . . .
எனக்கு ஒரு வரம் தர . . .
பார்த்திருப்பாய்  . . .
உன் இராமானுஜ தாசனாய் நான் மாற . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP