ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, October 19, 2013

விருந்தாவனத்தே கண்டேனே . . .

ராதேக்ருஷ்ணா
விருந்தாவனத்தே கண்டேனே . . .


எதைத் தேடி நான்
விருந்தாவனம் வந்தேனோ
அதைக் கண்ணாரக் கண்டேனே . . .
 
 
எல்லோரும் நினைத்திருக்கிறார்கள் . . .
நான் கண்ணனைத் தேடி
சரத் பௌர்ணமிக்கு விருந்தாவனம்
வந்திருக்கின்றேன் என்று . . .


ஆனால் அவனைத் தேடி
ஏன் இங்கே வரவேண்டும் ? ! ?


விருந்தாவனம் கண்ணனின்
லீலைக்கு தான் உசத்தியோ ? ! ?
இல்லையே . . .
 
 
உன்னதமான பக்திக்காகத் தான் . . .
அதனால் தானே கண்ணனே
இங்கு வசப்பட்டிருக்கிறான் . . .


நான் தேடி வந்தது
உத்தமமான, உன்னதமான,
பக்தி செய்யும் பைத்தியங்களை . . .கண்டேன் . . .
பக்திக்காக மட்டுமே பக்தி
செய்யும் உன்னத பக்தி பைத்தியங்களை . . .பாங்கே பிஹாரி கண்ணன்
ஆவிர்பவித்த நிதி வனத்தில்,
ராச லீலா பூமியில்,
அந்த தூளியைத் தன் உடம்பெல்லாம் பட
அழுது புரண்ட பக்திப் பைத்தியத்தை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
வெட்கம், வயது, குலம், கோத்திரம்,
பணம், படிப்பு, அழகு எல்லாவற்றையும்
மறந்து ராதிகா அவதரித்த பர்சானாவில்
இஷ்டத்திற்கு ஆடும் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .இரவு 11 மணிக்கு பனி விழும்
விருந்தாவனத்தில் சரத் சந்திரனின்
குளிரில், 1 வயது தூங்கும் பிள்ளையை
கைகளில் ஏந்தி ப்ருந்தாவனத்தை வலம் வரும்
க்ருஷ்ணனின் தீவிர பக்திப் பைத்திய தந்தையை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
அழுக்கையும், அசுத்தத்தையும் கவனியாமல்,
இந்து தர்மப்படி உடை அணிந்து,
நெற்றியில் திலகமிட்டு, கையில் துளசி
மணி மாலையோடு, க்ருஷ்ண நாம ஜபத்தில்
திளைக்கும் வெளி நாட்டுப் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
ஊரே தூங்கும் இந்த இரவில்,
சரத் பௌர்ணமி நிலவின் ஒளியில்,
யமுனையில் ஓடத்தில் அமர்ந்து,
க்ருஷ்ண கீர்த்தனம் செய்து கொண்டு,
ஆடிப் பாடி திளைக்கும் அதிசயப் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
 
கண்ணே தெரியாமல், வாயில்
ராதிகா நாம ஜபத்தோடு வீதிகளில்,
கோலோடு தட்டுத் தடுமாறி,
சௌக்கியமாய் அலையும்,
சூர்தாஸ் போன்ற ஒரு பைத்தியத்தை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
நமஸ்காரம் செய்து மீண்டு எழுந்து,
நமஸ்காரம் செய்து இப்படியாய்,
கோவர்தன கிரியை வலம் வரும்,
அசாத்தியமான க்ருஷ்ண பக்தியில்
உலகை ஒதுக்கித்தள்ளிய பைத்தியங்களை
விருந்தாவனத்தில் கண்டேனே . . .இன்னும் நிறைய விசித்திர
பக்திப் பைத்தியங்களை
ஆசை ஆசையாய் அதிசயமா
அற்புதமாய் அழகாய்
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
எல்லாவற்றையும் சொல்ல
என்னால் ஆகாது . . .
நீ வந்து பார்த்துக்கொள் . . .


கண்டேன் . . .
பக்திப் பைத்தியங்களை . . .
ஆனந்தம் . . .
இதையே நான் தேடி வந்தேன் .  . .


இன்னும் நிறைய தடவை வரவேண்டும் . . .

வருவேன் . . . வருவேன் . . . வருவேன் . . .


விருந்தாவனத்தில் இன்னும்
நிறைய பக்திப் பைத்தியங்களை
காணவேண்டியிருக்கிறது . . .


ஹே ராதே . . . 
உன்னிடம் சொல்லி விட்டேன் .  . .

எனக்கு இனியும் நிறைய
பக்திப் பைத்தியங்களைக்
காட்டித் தருவாய் . . .


வேறு ஒரு வரமும் எனக்கு வேண்டாம் . . .


ராதே . . . ராதே . . .

உன் அருளால் நிறைய
பக்திப் பைத்தியங்களை
இந்த ராச பௌர்ணமி அன்று
விருந்தாவனத்தே கண்டேனே . . . 
 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP