ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, December 31, 2016

துளசியின் கீழுதித்த தூமணியே !

கோயில் காப்பவரை
நாயகனாய் கண்டாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !


கோயிலை நந்தகோபரின்
மாளிகையாய் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


கொடியையும், தோரணத்தையும்,
வாயிலில் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


வாயில் காப்பவரையும்
உயர்வாய்க் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


மணியால் நிறைந்த
கதவைக் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


கதவின் தாள் திறக்க
காப்போரைக் கெஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


ஆயர் சிறுமியாய் உன்னை
மாற்றிக்கொண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


மாயன் மணிவண்ணன்
வாய் நேர்ந்ததை சொன்னாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !


தூயோமாய் வந்தோம்
தூயனைக் காண என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துயிலெழப் பாடுவோம்
துஞ்சுபவனுக்கே என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


வாயால் மாற்றாதே
அம்மா எனக் கொஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


நேய நிலைக்கதவை
நன்றாய் திற என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


எல்லோரும் தொண்டரே !
அவர் அடி பணி என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துள்ளும் இளமையை
தூய்மையாய் தரச் சொன்னாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துப்பில்லாத எம்மை
துளசியாய் மாற்ற வந்தாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


தூயவனின் துளசியாய் நீ !
தூசியாய் உன் திருவடியில் யாம் !
துளசியின் கீழுதித்த தூமணியே !

Read more...

Friday, December 30, 2016

திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !

தோழியை எல்லே இளங்கிளியே
என்று அன்புடன் எழுப்பியவளே...
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


தோழியை இன்னம் உறங்குதியோ
என உரிமையோடு கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


சில்லென்று அழைக்காதே என
தோழியின் பதில் கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வருகிறேன் நங்கைகளே எனும்
தோழியின் மொழியை ரசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


தோழியிடம் உன் கதைகள்
யாவும் நாமறிவோம் என்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


உன் வாய் ஜாலம் நன்கறிவோம்
என தோழியைப் பரிகசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வல்லவர்கள் நீங்களே என தோழி
கூறியதைப் புரிந்து சிரித்தவளே !
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


நானேதான் ஆயிடுக என்ற
தோழியின் மன்னிப்பை ஏற்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


முதலில் நீ வெளியில் வா
என தோழியைக் கடிந்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


உனக்கென்ன வேறு வேலை
என்று தோழியை சீண்டியவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


எல்லோரும் வந்தாரோ என்றவளின்
குரலின் நாதத்தை ருசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வந்தாரை நீ வந்தெண்ணிக்கொள்
என சாதுர்யமாய் உரைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வல்லானை கொன்றானை
வகைவகையாய் பாடினவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மாற்றாரை மாற்றழித்தவனை,
மனதார வாயாறத் துதித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மாயனை, நேயனை, ஆயனை,
தூயனை, தமிழால் அழைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மதியிலாத எமக்காய்,
விதிவலிதான எமக்காய்,
உதித்த உனக்கே நாம்
துதி பாடுவோம் !


ஆடி அடங்கும் முன்
கூடிடு கண்ணனை எனப்
பாடிப் பரவசப்படுத்தும்,
ஆடிப்பூர நாயகியே,
அடி பணிந்தோம் உன்னையே !

Read more...

Thursday, December 29, 2016

ஏங்கும் மனம் அருள்வாயே !

புழங்கும் தோட்டத்தைப் பார்த்தாயே,
அங்கிருக்கும் குளத்தைப் பார்த்தாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


செங்கழுநீர் மலர்ந்ததைச் சொன்னாயே,
ஆங்கே ஆம்பல் கூம்பினதைச் சொன்னாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


செங்கல் பொடியாய் காவியைக்
கண்டாயே,
சங்கம் ஊதுவாரின் சங்கத்தைக் கண்டாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


தங்கள் கோயிலடைவாரைச்
சொன்னாயே,
பங்கமில்லாத அவர் பல்லைச்
சொன்னாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


மங்காதத் தவத்தைக் கண்டாயே,
உங்களை எழுப்பாமல் தூங்குபவளைக் கண்டாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


தூங்குபவளுக்கு நாணமில்லை என்றாயே,
பொங்கும் நாவுடையாள்
என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !


சங்கும் சக்கரமும் அங்கையில் என்றாயே,
தங்கும் திருக்கையன் கண்ணன் என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட
பைங்கிளியே !


பங்கயக் கண்ணன் காதலைச் சொன்னாயே,
சங்கமாய் பாடலாம் அவனை என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !

எங்கும் கண்ணனைக் காணும் பைங்கிளியே !
பொங்கும் பரிவாலே
இங்கே வந்தாயே !
எங்கள் நெஞ்சில்
தங்கி அருளாயே !


பங்கயக் கண்ணனின்
தங்கக் கிளியானவளே !
அங்கையில் நீயே
எங்களைக் கிளியாய் கொள்வாயே !


நீங்கா பக்தியோடு,
மங்கா பணிவோடு,
ரங்கன் நினைவோடு,
சங்கமிக்கும் வரம் தருவாயே !


இங்கும் ரங்கன்,
அங்கும் ரங்கன்,
எங்கும் ரங்கன், என
ஏங்கும் மனம் அருள்வாயே !

Read more...

Wednesday, December 28, 2016

ஹரி சந்தன கல்பவல்லியே !

புள்ளின் வாய்
கீண்ட கண்ணனின்,
கீர்த்தியை பாடின,
ஹரி சந்தன கல்பவல்லியே !


பொல்லா அரக்கனைக்
களைந்த ராமனின்,
கீர்த்தியைப் பாடின,
ஹரி சந்தன கல்பவல்லியே !


கீர்த்தியைப் பாடும்
கிறங்கிய பாவைகளின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


பாவைகள் கூடும்
பாவைக்களத்தின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


வியாழன் உறங்கி,
வெள்ளி எழுந்தக்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


புள்ளும் சிலம்பும்
புனித விடியலின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


சகியின் சிருங்கார
கண் அழகின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


குள்ளக் குளிரக்
குடைந்து நீராடும்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


பள்ளிக் கிடக்கும்
க்ருஷ்ண பாவையின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


கண்ணனைக் கூடும்
நல்ல நாளின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


கள்ளம் தவிர்ந்தால்
உண்டாகும் சங்கமத்தின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


கலந்தால் கிடைக்கும்
கண்ணனின் கலவியின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !


கள்ளம் தவிர்த்து,
கண்ணனைப் பிடித்து,
காதலை வளர்த்த,
ஹரி சந்தன கல்பவல்லியே !


அரிதான ஹரியை
துரிதமாய் அறிவதே,
அறிவெனச் சொன்ன
ஹரி சந்தன கல்பவல்லியே !


சிறிதும் அறிவிலாத,
சரியான பிரியமிலாத,
அறியும் குறியிலாத,
புரியாத சிறியரான எமக்கும்
ஹரியை பிரியமாய்
உரிமையாய் சொல்லும்
ஹரி சந்தன கல்பவல்லியே !


அரிதான கல்பவல்லியே,
ஹரி தான கல்பவல்லியே,
துரிதமாய் வா !
அறிவைத் தா !
ஹரியைத் தா !


ஹரி சந்தன கல்பவல்லியே !
ஹரி என்றாலே
சரிதானே என்று
அறிந்த உனக்கே
உரியது வந்தனங்களே !

Read more...

Tuesday, December 27, 2016

ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !

கனைத்திளம் கற்றெருமை
தன் வாஞ்சையைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


கன்றுக்கும் இரங்கும்,
நினைக்கும் தாய் நெஞ்சைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


பிஞ்சுக்காய் முலை வழியே
பால் சோரும் கொஞ்சலைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சமில்லாத பாலால்,
தஞ்சமடைந்த இல்லம் சேறாக்கக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


நஞ்சில்லாத நற்செல்வன்
தங்கையான வஞ்சியைக்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


அஞ்சிலே துஞ்சாமல்,
பனித் தலை வீழக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


பிஞ்சுப் பாதங்கள் நழுவ,
இடைக் கழியைத் தஞ்சமாய்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சத்தால் வஞ்சியை அடைந்தவனை,
வெஞ்சினத்தால் வென்றவனைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


அஞ்சேல் என்றவனை,
மனத்துக்கு இனியானாய்க்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


தஞ்சமானவனைப் பாடாமல்,
மஞ்சத்தில் துஞ்சுபவளைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


துஞ்சாதே வஞ்சியே,
தஞ்சமடை எனச் செஞ்சொல் சொன்னாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


தஞ்சம் அடைந்தார் அறிந்தார்,
மஞ்சத்தை விட்டு வா என
கொஞ்சினாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


மஞ்சள் நிற வஞ்சியே,
வஞ்சமில்லாத வஞ்சியே,
கஞ்சமில்லாத வஞ்சியே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


கொஞ்சலாய், கெஞ்சலாய்,
தஞ்சமாய்,செஞ்சொல்
சொலும் வஞ்சியே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


உன் பிஞ்சுப் பாதங்களில்,
தஞ்சமடைந்தோம்,
எம் வஞ்ச நெஞ்சம்
மாற கெஞ்சுகிறோம் உன்னை !
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சியே உன் நெஞ்சமே,
துஞ்சாத கண்ணனின் மஞ்சமே,
எமக்கும் தா அதுபோலே நெஞ்சமே !
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !

Read more...

Monday, December 26, 2016

பிஞ்சாய் பழுத்தவளே !

கறவைகள் பல கறந்தவர் அன்றோ...
செற்றார் திறல் அழிப்பவர் அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


சென்று செறுச் செய்பவர் அன்றோ...
குற்றமேயில்லாத கோவலர் அன்றோ...
எனச் சொல்லும்,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


கோவலரின் பொற்கொடியே அன்றோ..
அரவு போல், மயில் போல், அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


உடனே போதராய் அன்றோ,
சுற்றத்து தோழிமார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


எல்லோரும் வந்தார் அன்றோ,
நின் முற்றம் புகுந்தார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


முகில்வண்ணன் பேர் அன்றோ,
அழகாய் பாடுகிறார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


சிற்றாமல், பேசாமல் அன்றோ,
செல்வப் பெண்டாட்டி அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !

ஏன் உறங்குகிறாய் அன்றோ,
என்ன காரணம் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


நஞ்சே நெஞ்சமான எம்மிடம்,
பிஞ்சுக் குழந்தையைக்
காண்பவள் நீயே அன்றோ,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


வஞ்சம் நிறை உலகில்,
நெஞ்சம் நிறை அன்போடு,
கொஞ்சிப் பேசும் வஞ்சி,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றோ !


பிஞ்சிலே வெம்பிய எமக்கு,
தஞ்சமாய் வந்த தெய்வம்,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றொ !

Read more...

Sunday, December 25, 2016

கண்ணனின் ப்ரியசகி !

நோன்பு நோற்பவளை,
சுவர்க்கம் புகுகிறவளை,
அன்பான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !

மாற்றமும் தராதவளை,
வாசல் திறவாதவளை,
அழகான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


நாறும் துழாய் முடியன்
நாராயணனை நினைப்பவளை,
அடக்கமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


போற்றக் கிருபை செய்யும்
புண்ணியனை சிந்திப்பவளை,
அருமையான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்பகர்ணனை வென்றவளை,
அதிசயமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


பெருந்துயில் கொள்பவளை,
ஆற்ற அனந்தலுடையாளை,
அனைவருக்கும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


அருங்கலமாய் வந்தவளை,
தியானத்தில் திளைப்பவளை,
அருட்பெரும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


தேற்றமாய் வந்தவளை,
திறந்து வந்தவளை,
அமுதமான சகியை,
அழைக்கும் கண்ணனின் ப்ரியசகியே !


அருந்தவம் செய்யவில்லை,
ஆசையும் குறையவில்லை,
பக்தியும் போதவில்லை,
ஆயினும் எம்மையும்,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


ப்ரியனான கண்ணனின்,
ப்ரியத்தை புரியவைத்து,
ப்ரியமாய் எமக்கருளும்,
கண்ணனின் ப்ரியசகியே,
நீயே எங்கள் சகியும், சக்தியும்...

Read more...

Saturday, December 24, 2016

அரங்கனின் காதலியே !

தூமணியைக் கண்டாயோ,
மாடத்தைக் கண்டாயோ,
விளக்கெறியக் கண்டாயோ...
அரங்கனின் காதலியே !


தூபம் கமழக் கண்டாயோ,
துயிலணையைக் கண்டாயோ,
கண் வளரக் கண்டாயோ,
அரங்கனின் காதலியே !


சொந்தம் கொண்டாயோ,
மாமன் மகளாய்க் கண்டாயோ,
மணிக்கதவைக் கண்டாயோ,
அரங்கனின் காதலியே !தாள் திறக்கச் சொன்னாயோ,
திறவாதிருக்கக் கண்டாயோ,
மாமீரை அழைத்தாயோ,
அரங்கனின் காதலியே !


மகளை எழுப்பச் சொன்னாயோ,
மகள் ஊமையோ என்றாயோ,
மகள் செவிடோ என்றாயோ,
அரங்கனின் காதலியே !


மகள் சோம்பேறியோ என்றாயோ,
மகள் கண் துயின்றாளோ என்றாயோ,
மகள் மந்திரப்பட்டாளோ என்றாயோ,
அரங்கனின் காதலியே !


மாமாயன் என்றே சொன்னாயோ,
மாதவனும்
சொன்னோம் என்றாயோ,
வைகுந்தன் என்றும் சொன்னாயோ,
அரங்கனின் காதலியே !


நாமம் பலவும் நவின்றாயோ,
நன்மையை அடையச் சொன்னோயோ,
நாராயணனே நன்மை என்றாயோ
அரங்கனின் காதலியே !


எல்லாம் சொல்லியே,
எம்மையும் எழுப்பியே,
இன்பமும் தந்தாயே,
அரங்கனின் காதலியே !


அந்த ரங்கத்தின்
சொந்த ரங்கனை
அந்தரங்கத்தில் கொண்ட
அரங்கனின் காதலியே !


எங்கள் அந்தரங்கம்,
உங்கள் அந்தப்புரமாக,
நீங்கள் இங்கே வந்து
தங்க வரம் தா,
அரங்கனின் காதலியே !

Read more...

Friday, December 23, 2016

வேறொன்றும் வேண்டாமடி !

கீழ் வானம் வெளுத்ததடி,
எருமைகள் எழுந்ததடி,
நீயும் எழுந்து வ்ந்துவிடடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...மற்ற பிள்ளைகள் போனாரடி,
உன் பேரே சொன்னோமடி,
உடனே அவரும் நின்றாரடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...உன்னைக் கூவ வந்தோமடி,
கோதுகலமான பாவையடி,
நீயும் எழுந்து வாராயடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...பாடிப் பறை கொள்வோமடி,
மாவாயைப் பிளந்தானடி,
மல்லரையும் வென்றானடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...நம் தேவாதி தேவனடி,
சென்று நாம் சேவிப்போமடி,
ஆவாவென்று சொல்வானடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...ஆராய்ந்து அருள்வானடி,
உடனேயே அருள்வானடி,
அழகாய் அருள்வானடி,
என்று சொன்ன தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...இத்தனை சொல்பவள் நீயேயடி,
எம்மேல் அன்பு உனக்கேயடி,
இந்த உரிமை போதுமடி,
வேறொன்றும் வேண்டாமடி,
நீ எங்கள் நாச்சியாரடி...

Read more...

Thursday, December 22, 2016

திருத்திப் பணி கொள் !

கீசு கீசு என்று
பறவைகளும்,
எங்கும், எப்போதும்
கண்ணனைக் கூப்பிடுவதை
அழகாய் ரசிக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


என்ன சொல்லியும்
எழாதவளை,
பேய்ப்பெண்ணே
என்று தோழமையோடு
உரிமையோடு
பரிகசிக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சிகளின்
அச்சுத்தாலியும்,
காசுமாலையும்,
உரசும் சத்தத்திற்கும்
காது கொடுக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சியரின் கூந்தலில்
கண்ணனின் வாசனயை நுகர்ந்து,
அவர்தம் கூந்தலின்
அழகையும் அனுபவித்து
அதில் திளைக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சியரின் மத்தையும்,
பானையையும்,
தயிரையும், அவர்கள்
கடையும் அழகையும்
அதன் சத்தத்தையும்
அனுபவித்துப் புலம்பும்
திருப்பாவை பாடிய செல்வியே !


நாயகனுக்குப் பிடித்த
பெண் பிள்ளாய்,
நீயே எங்களுக்கும்
நாயகப்பெண் பிள்ளாய்
எனக் கொண்டாடும்
திருப்பாவை பாடிய செல்வியே !


நாராயணன் நாமத்தில்
திளைத்து, அவனின்
மூர்த்திகளில் மனதைக்
கொடுத்து, கேசவனின்
காதலில் மயங்கிப் பாடும்
திருப்பாவை பாடிய செல்வியே !


திருமாலின் திருமுடியில்
பூமாலை சூடி,
திருமாலவனுக்கு
திருப்பாவைப் பாடிய செல்வியே !
திருப் பாவையே...
உன் திருப்பாவையே
எமக்குத் திருவருள் !


திருப்பாவை பாடிய
செல்வியே !
திருமாலின் திருப் பாவையே !
நின் திருப் பாதத்தில்
தருகிறேன் என்னை !
திருத்திப் பணி கொள்,
இத்திருந்தாப் பாவியையும் !

Read more...

Wednesday, December 21, 2016

எங்கள் ராமானுஜரின் தங்கையே !

பறவைகள் எழுந்தன...
ஒன்றாய் கூடிப் பேசின...
கோயிலில் திரண்டன...
என ஆசையாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


காலை வந்தது...
கோயில் திறந்தது...
சங்கம் முழங்கியது...
என உற்சாகமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


பிள்ளாய் ! எழுந்திராய்...
நாமும் அனுபவிப்போம்...
இந்த நாள் இறைவன் நாள்...
என உள்ளன்போடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


விஷப்பால் சுவைத்தான்...
பூதனா உயிரைக் குடித்தான்...
மோக்ஷம் தந்தான்...
என பக்தியோடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


கள்ளச் சகடமாய் வந்தான்...
கண்ணனே உதைத்தான்..
மோக்ஷம் பெற்றான்...
என குதூகலமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


திருப்பாற்கடலில் படுத்தான்...
திருவனந்தன் மேல் துயின்றான்...
வேதவித்து நம் கண்ணன்...
என உருக்கமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


உள்ளத்துக் கொண்டார்...
மெள்ள எழுந்தார்...
ஹரி என சொன்னார்...
என யோகிகளோடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


உள்ளம் புகுந்து,
பேரரவம் செய்து,
குளிரவைத்து,
உரிமையோடு அன்புகொண்டு,
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !


உன் திருவடி தொழுதோம்...
உன் அன்பில் கரைந்தோம்...
உன் அருகில் நின்றோம்...
உன் உருவில் மயங்கினோம்...
உன் நிழலில் இளைப்பாறினோம்...
உன் அருளாலே வாழ்வோம்..
எங்கள் ராமானுஜரின் தங்கையே !

Read more...

Tuesday, December 20, 2016

நீயே போதுமடி பெண்பிள்ளையே !

மாயனை நாங்கள்
தூய மலரிட்டு
தொழச் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

வடமதுரை மைந்தனை
தூமலர் தூவித்
தொழச் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தூய பெருநீர் யமுனையும்
தொழுத தூயவனுக்கு
தூமலர் தூவச்செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

ஆயர்குல அணி விளக்குக்கு
அழகாய் தூமலரை
தூவச்செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தாயைத் தொழுத
தாமோதரதனைத்
தொழுது தூமலர்
தூவ வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தூமலர் தூவி
தூயோமாய் தொழுது
தூயவனின் திருநாமத்தை
வாயினால் பாட வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

மனதால் அவனை
நினைக்கத் தெரியாத
எங்களையும் அவனையே
சிந்திக்க வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தூயவனின் நாமமே
எம் பாவத்தை எரித்து
எம்மை தூய்மையாக்கும்,
என சத்தியம் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தூயவனின் நினைவே
இனியும் பாவம்
செய்ய விடாமல்
தூய்மையாய் காக்கும்
என துணிவைத் தந்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

தூயவனின் நாமம்
தூயவனை விட
தூய்மையானது எனச்
சொன்ன தூயவளே...
எம்மை தூய்மையாக்க
நீயே போதுமடி...
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !

Read more...

Monday, December 19, 2016

தந்தோமடி கோதாதேவியே!

ஆழிமழைக் கண்ணனும்,
தன் தாபம் நீங்க
உன்னடி பணிந்தானடி
கோதா தேவியே !


ஆழிமழை அண்ணலை
ஒளித்து வைக்காமல்
தரச்சொன்னாயடி
கோதா தேவியே !


ஆழியுள் புகுந்து
முகந்து கொண்டு
வரச்சொன்னாயடி
கோதா தேவியே !


மழை அண்ணனை
ஊழி முதல்வன் போலே
கறுக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


மழை மின்னலும்,
பத்மநாபன் கையாழியாய்
மின்னச் சொன்னாயடி
கோதா தேவியே !


இடியும் பத்மநாபனின்
கைச் சங்கம் போலே
முழங்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


மழையும் பத்மநாபனின்
சார்ங்க வில்லின் அம்புகள்
போலே பெய்யச் சொன்னாயடி
கோதா தேவியே !


பெய்யும் மழையும்,
பத்மநாபனைப் போலே
வாழவைக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


உன்னோடு எங்களையும்
மார்கழி நீராட வைத்து
மகிழச்செய்தாயடி
கோதா தேவியே !


இத்தனையும் தந்த உனக்கு
எங்களையே தந்தோமடி,
ஏற்றுக்கொள்வாயடி,
எங்கள் கோதா தேவியே !

Read more...

Sunday, December 18, 2016

சரணடைந்தோமடி சுடர்கொடியே !

ஒங்கி உலகளந்த
கள்ளனையும்
உத்தமனாக்கினாயடி
சூடிக் கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேரைப்
பாடி எங்களையும்
பாவையாக்கினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
தீங்கில்லா மழை
தருமென அருளினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
செந்நெல்லையும் ஓங்கச்
செய்யுமென காட்டினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
கயல்களையும் வயல்களில்
விளையாடச் செய்யுமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
கருங்குவளைகளில்
தேன் வழிய வைக்குமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
வண்டுக்கும் தேனும்,
தாலாட்டும் தருமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
பசுக்களின் மடியில்
பாலைப் பெருக்குமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
குடம் நிறைக்கும்
எனப் புரியவைத்தாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
நீங்காத செல்வமென
சத்தியம் செய்தாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமன் பேரை விட
இந்த உத்தமியே
எமக்கு பேறு
என்று நின்னையே
சரணடைந்தோமடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

Read more...

Saturday, December 17, 2016

உய்வோமடி நாச்சியார் !

வையத்து வாழ்வு உயர்ந்ததென சொன்னாயடி
நாச்சியார்...


பாற்கடல் பரமனடியை
எம்மையும் பாட வைத்தாயடி
நாச்சியார்...


நெய்யும் பாலும் கண்ணனுக்கே,
நமக்கல்ல என்றாயடி
நாச்சியார்...


கண்ணுக்கு அழகு மையல்ல, கண்ணனே
என புரியவைத்தாயடி
நாச்சியார்...


தலைக்கு அழகு பூவல்ல, கண்ணனின் அபயக்கரமே
என உணர்த்தினாயடி
நாச்சியார்...


செய்யாதன செய்யாதபடி
புத்தியையும், மனதையும்,
உடலையும், இந்திரியங்களையும் திருத்தினாயடி
நாச்சியார்...


தீக்குறளைப் பேசாதபடி நாவையும், மனதையும்,
அடக்கினாயடி
நாச்சியார்...


பக்தருக்கும், முக்தருக்கும், ஆசாரியருக்கும், கைங்கர்யம் செய்ய ஆசை
கூட்டினாயடி
நாச்சியார்...

நீ எம்மிடம் உகந்தால்,
உலகமும், உயிரும், தேவரும், தெய்வமும்,
எல்லாம் உகக்குமடி
நாச்சியார்...


உன்னைக் கொண்டே
நாங்களும் இந்த வையத்தில்
வாழ்ந்து உய்வோமடி
நாச்சியார்...

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP