ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Sunday, December 18, 2016

சரணடைந்தோமடி சுடர்கொடியே !

ஒங்கி உலகளந்த
கள்ளனையும்
உத்தமனாக்கினாயடி
சூடிக் கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேரைப்
பாடி எங்களையும்
பாவையாக்கினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
தீங்கில்லா மழை
தருமென அருளினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
செந்நெல்லையும் ஓங்கச்
செய்யுமென காட்டினாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
கயல்களையும் வயல்களில்
விளையாடச் செய்யுமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
கருங்குவளைகளில்
தேன் வழிய வைக்குமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
வண்டுக்கும் தேனும்,
தாலாட்டும் தருமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
பசுக்களின் மடியில்
பாலைப் பெருக்குமென்றாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
குடம் நிறைக்கும்
எனப் புரியவைத்தாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமனின் பேர்
நீங்காத செல்வமென
சத்தியம் செய்தாயடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

உத்தமன் பேரை விட
இந்த உத்தமியே
எமக்கு பேறு
என்று நின்னையே
சரணடைந்தோமடி
சூடிக்கொடுத்த
சுடர்கொடியே !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP