ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, December 27, 2016

ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !

கனைத்திளம் கற்றெருமை
தன் வாஞ்சையைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


கன்றுக்கும் இரங்கும்,
நினைக்கும் தாய் நெஞ்சைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


பிஞ்சுக்காய் முலை வழியே
பால் சோரும் கொஞ்சலைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சமில்லாத பாலால்,
தஞ்சமடைந்த இல்லம் சேறாக்கக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


நஞ்சில்லாத நற்செல்வன்
தங்கையான வஞ்சியைக்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


அஞ்சிலே துஞ்சாமல்,
பனித் தலை வீழக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


பிஞ்சுப் பாதங்கள் நழுவ,
இடைக் கழியைத் தஞ்சமாய்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சத்தால் வஞ்சியை அடைந்தவனை,
வெஞ்சினத்தால் வென்றவனைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


அஞ்சேல் என்றவனை,
மனத்துக்கு இனியானாய்க்
கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


தஞ்சமானவனைப் பாடாமல்,
மஞ்சத்தில் துஞ்சுபவளைக் கண்டாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


துஞ்சாதே வஞ்சியே,
தஞ்சமடை எனச் செஞ்சொல் சொன்னாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


தஞ்சம் அடைந்தார் அறிந்தார்,
மஞ்சத்தை விட்டு வா என
கொஞ்சினாயே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


மஞ்சள் நிற வஞ்சியே,
வஞ்சமில்லாத வஞ்சியே,
கஞ்சமில்லாத வஞ்சியே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


கொஞ்சலாய், கெஞ்சலாய்,
தஞ்சமாய்,செஞ்சொல்
சொலும் வஞ்சியே,
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


உன் பிஞ்சுப் பாதங்களில்,
தஞ்சமடைந்தோம்,
எம் வஞ்ச நெஞ்சம்
மாற கெஞ்சுகிறோம் உன்னை !
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !


வஞ்சியே உன் நெஞ்சமே,
துஞ்சாத கண்ணனின் மஞ்சமே,
எமக்கும் தா அதுபோலே நெஞ்சமே !
ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP