ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, January 16, 2017

செல்வச் செல்ல மகள் !

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

வங்கக்கடல் கடைந்த
மாதவனாய் கேசவனாய்,
உன்னைச் சொல்லி
உன் நாமத்தை பறைசாற்றினவள்
எங்கள் பூமகள்,திருமகள்,
செல்வச் செல்ல மகள்...

திங்கள் திருமுக கோபியாய்
உன்னைக் கொஞ்சிக் கெஞ்சி,
எல்லோரையும் பாட வைத்து
உனக்கு பெருமை தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

உன்னிடம் பறை வாங்கியதை
உவகையுடன் சொல்லி
வில்லிபுத்தூர் பட்டர் பிரானுக்கும்
உனக்கும் ஏற்றம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

சங்கத் தமிழ் மாலை
முப்பதும் தப்பாமே
சொல்லி உன் அருளுக்கு
உலகில் மதிப்பு தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஈரிரண்டு தோள்களாகவும்,
செங்கண் திருமுகமாகவும்,
செல்வத் திருமாலாகவும்
உன்னழகைக் கொண்டாடினவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கும் திருவருள் எப்போதும்
எல்லோருக்கும் எல்லா விதத்திலும்
இன்பமும் கிடைக்கும் என்று
உனக்கு அடையாளம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஒன்றும் தெரியாத எமக்காய்
என்றோ உன்னிடம் பரிந்தாள்,
எமக்காகவே உன்னை அடைந்தாள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

பூவுலகில் இருக்கும் எம்மை
வைகுந்தம் ஏற்றிவிட திருப்பாவை
முப்பதும் சொல்லி அருள்
செய்து காவல் காக்கிறவள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கள் பூமகள் எங்கள்
தாய் !
எங்கள் திருமகள் எங்கள்
செல்வம் !
எங்கள் செல்வ மகள் எங்கள்
தெய்வம் !
எங்கள் செல்ல மகள் எங்கள்
வாழ்வு !

எங்கள் செல்ல மகளே,
உனக்காகவே நாங்கள்
பக்தி செய்வோம் !
உனக்காகவே நாங்கள்
நாமம் ஜபிப்போம் !
உனக்காகவே நாங்கள்
கண்ணனைத் தொழுவோம் !
உனக்காகவே நாங்கள்
சரணாகதி செய்வோம் !

எங்கள் செல்வ மகளே !
நீ பாவை விரதம்
இருக்கப்போவது தெரிந்தே,
அன்றே சொன்னான் மாயன்,
மாதங்களில் நான் மார்கழி என்று...

அடுத்த மார்கழி...
யாம் இருப்போமோ ?!
செல்ல மகளை அனுபவிப்போமோ ?!
அப்போதைக்கு இப்போதே
சொல்லிவைத்தோமடி...
உன் திருப்பாவை முழுதும்...

இருந்தால் இங்கே திருப்பாவை...
இல்லை என்றால் அங்கே திருப்பாவை...
நீ எங்கேயோ அங்கே...

© *குருஜீ கோபாலவல்லிதாசர்*

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

Read more...

Saturday, January 14, 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் ராசாத்தியடா !

சிற்றம் சிறு காலே
எழுந்தோமடா கோவிந்தா !
வந்து உன்னை
சேவித்தோமடா கோவிந்தா !

பொற்றாமரை அடி
அடைந்தோமடா கோவிந்தா !
போற்றும் காரணம்
கேளாயடா கோவிந்தா !

மாடு மேய்க்கும் குலத்தில்
பிறந்தாயடா கோவிந்தா !
அடிமையான எங்களை
ஏற்கவேண்டுமடா கோவிந்தா !

இன்று பறையென காரணம்
சொன்னோமடா கோவிந்தா !
என்றும், ஏழேழ் பிறவியிலும்
உன்னோடுதானடா கோவிந்தா !

உனக்காகவே நாங்கள்
வாழ்வோமடா கோவிந்தா !
மற்றை நம் காமங்கள்
மாற்றிவிடடா கோவிந்தா !

வேறெதுவும் வேண்டவே
வேண்டாமடா கோவிந்தா !
உன்னிஷ்டமாய் மட்டுமே
வாழவேண்டுமடா கோவிந்தா !

இப்படியெல்லாம் அழகாய்
சொன்னாளடா கோவிந்தா !
எங்கள் வில்லிபுத்தூர்
ராசாத்தியடா கோவிந்தா !

ராச வாழ்க்கை
வேண்டாமடா கோவிந்தா !
ராசாத்தி சொத்தாய் வாழ
வைப்பாயடா கோவிந்தா !

ராசாத்தியின் அந்தப்புரமாக
மனமாகட்டுமடா கோவிந்தா !
ராசம் நீயும் அவளும்
ஆடவேண்டுமடா கோவிந்தா !

Read more...

ஆண்டாளோடு கோவிந்தா !

கறவைகள் பின் செல்வோம் கோவிந்தா,
காட்டில் சேர்ந்து உண்போம் கோவிந்தா !

அறிவே இல்லையே கோவிந்தா,
அறியாத ஆய் குலமே கோவிந்தா !

பிறவிப் புண்ணியமே கோவிந்தா ,
குறையொன்றும் இல்லை கோவிந்தா !

உன் பிறவி எமக்கே கோவிந்தா,
எம் வாழ்வு உனக்கே கோவிந்தா !

குறையே இல்லாத கோவிந்தா,
உறவே நீயானாய் கோவிந்தா!

அறியாத பிள்ளைகள் கோவிந்தா,
சிறு பேர் அழைத்தோம் கோவிந்தா !

சீறி அருளாதே நீ கோவிந்தா,
பறை தாராய் நீ கோவிந்தா !

உனையே நினைத்தாளே கோவிந்தா,
உனையே பாடினாளே கோவிந்தா !

உனையே கேட்கிறோம் கோவிந்தா,
உனையே சரணடைந்தோம் கோவிந்தா !

நீயே தருவாய் கோவிந்தா,
நீங்காத உறவை கோவிந்தா !

ஆண்டாளோடு கோவிந்தா,
ஆண்டாண்டு கோவிந்தா !

Read more...

பொங்கலோ பொங்கல் !

பொங்கலோ பொங்கல்...

இந்தப் பொங்கல் இப்படி பொங்கட்டுமே...

நீ ப்ரஹ்லாதனாக ஆனால்,
உனக்கு இது தைரியப் பொங்கல் !
நரசிம்ம பொங்கலோ பொங்கல் !

நீ துருவனாக ஆனால்,
உனக்கு இது சிரத்தைப் பொங்கல் !
ஸ்ரீஹரி பொங்கலோ பொங்கல் !

நீ திரௌபதி ஆனால்,
உனக்கு இது சபதப் பொங்கல் !
கோவிந்தப் பொங்கலோ பொங்கல் !

நீ குந்தி ஆனால்,
உனக்கு இது நம்பிக்கைப் பொங்கல் !
க்ருஷ்ணப் பொங்கலோ பொங்கல் !

நீ அர்ஜுனன் ஆனால்,
உனக்கு இது கீதைப் பொங்கல் !
பார்த்தசாரதி பொங்கலோ பொங்கல் !

நீ கோபி ஆனால்,
உனக்கு இது ப்ரேமைப் பொங்கல் !
கோபாலப் பொங்கலோ பொங்கல் !

நீ பரீக்ஷித்து ஆனால்,
உனக்கு இது ஸ்ரவணப் பொங்கல் !
பாகவதப் பொங்கலோ பொங்கல் !

நீ ஆஞ்சநேயர் ஆனால்,
உனக்கு இது கீர்த்தனப் பொங்கல் !
ஸ்ரீராமஜெயப் பொங்கலோ பொங்கல் !

நீ சுகப்ரும்ம ரிஷி ஆனால்,
உனக்கு இது தியானப் பொங்கல் !
ப்ரும்ம பொங்கலோ பொங்கல் !

நீ வார்கரி பக்தரானால்,
உனக்கு இது பாதசேவனப் பொங்கல் !
விட்டல் பொங்கலோ பொங்கல் !

நீ உத்தவன் ஆனால்,
உனக்கு இது அர்ச்சனைப் பொங்கல் !
நந்தகிஷோர் பொங்கலோ பொங்கல் !

நீ அம்பரீஷன் ஆனால்,
உனக்கு இது வந்தனப் பொங்கல் !
சுதர்சன பொங்கலோ பொங்கல் !

நீ ராமானுஜ தாசன்/தாசி ஆனால்,
உனக்கு இது தாஸ்ய பொங்கல் !
ராமானுஜப் பொங்கலோ பொங்கல் !

நீ கோப குழந்தைகள் ஆனால்,
உனக்கு இது சகா பொங்கல் !
நவநீதசோர பொங்கலோ பொங்கல் !

நீ மீரா ஆனால்,
உனக்கு இது ஆத்ம நிவேதனப் பொங்கல் !
கிரிதாரி பொங்கலோ பொங்கல் !

நீ வால்மீகி ஆனால்,
உனக்கு இது நாமஜபப் பொங்கல் !
ராமாயணப் பொங்கலோ பொங்கல் !

நீ மதுரகவியாழ்வார் ஆனால்,
உனக்கு இது குரு பொங்கல் !
சடகோப பொங்கலோ பொங்கல் !

நீ பூந்தானம் ஆனால்,
உனக்கு இது மூடபக்தி பொங்கல் !
குருவாயூரப்பன் பொங்கலோ பொங்கல் !

நீ சிஷ்யன் /சிஷ்யை ஆனால்,
உனக்கு இது முன்னேற்றப் பொங்கல் !
சத்குரு பொங்கலோ பொங்கல் !

இன்னும் இன்னும்
கோடி விதமாய் பொங்கல் பொங்கட்டும் !

மனம் என்னும் பானை...
குரு என்னும் நெருப்பு...
பக்தி என்னும் பால்...
சிரத்தை என்னும் அரிசி...
முயற்சி என்னும் வெல்லம்...
தெய்வீகம் என்னும் பொங்கல் பொங்கட்டும் !

பொங்கலோ பொங்கல் !

Read more...

Friday, January 13, 2017

போகியன்று நீ யோகியாவாய் !

தாகத்தினால் போகம் அடைந்தாய் !
போகத்தில் திளைத்து போகியானாய் !

போகியானதால் நீ ரோகம் அடைந்தாய் !
ரோகத்தினால் நீ ரோகியானாய் !

ரோகம் நீங்க க்ருஷ்ணனிடம் மோகம் கொள் !
மோகம் கொண்டால் நீ யோகியாவாய் !

யோகியானால் உன்னுள்ளே கண்ணன் !
யோகமே கண்ணனென்று அறிவாய் !

யோகத்தில் சோகத்தை அழிப்பாய் !
சோகத்தை அழிக்கவே யாகம் !
யாகமே போகி !

போகியன்று நீ யோகியாவாய் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

Thursday, January 12, 2017

கோவிந்தவல்லியே !


கூடாரை வென்று
கூடுபவரை சேரும்
கூடுவதில் பிரியமான
கூடல் நாயகன் கோவிந்தனோடு
கூடித்திளைத்திட ஆசைப்பட்ட
குதூகலமான கோவிந்தவல்லியே !

கோவிந்தனைப் பாடி
கோவிந்தனிடம் பறை கொண்டு
கோவிந்தனை அனுபவிக்க
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
கொஞ்சலாய் சொன்ன
குஞ்சலமான சுந்தரவல்லியே !

யாம் பெறும் சம்மானம்
நீ தரும் அருளமுதம்
நாடு புகழும் பரிசென்று
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
உரிமையாய் சொன்ன
உன்னத ஞானவல்லியே !

சூடகமான சுரி வளையும்,
தோள் வளையும்,
தோடும், செவிப்பூவும்,
நீயே ஆகவேண்டும் என
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
அழகாய் சொன்ன
அற்புத ஆனந்தவல்லியே !

பாடகமான பாத கடகமும்,
பல ஆபரணமும் நீயே
பலவிதமாய் சூட்டுவாய் என
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
அர்த்தமாய் சொன்ன
அதிசய வேதவல்லியே !

ஆசையாய் ஆடை நீ தா,
பூசை செய்து அதை உடுத்தி,
திசை எட்டும் கொண்டாட,
உனைப் பாடுவோம் என,
உற்சாகமாய் சொன்ன
உன்மத்த கோமளவல்லியே !

பால் சோற்றில் நெய்
மேலாய் மூடியிருக்க,
கோலாகலமாய் கை வழிய,
கூடியிருந்து உன்னோடு
குளிருவோம் என,
கள்ளமாய் சொன்ன
கண்மணி கனகவல்லியே !

கூடாரவல்லியன்று
கோபாலனைக் கூடிட
குழந்தைகள் எமக்கு
கூடயிருந்து சொல்லித்தரும்
கூடல் நாயகன் கோவிந்தனின்
செல்லக் கோபாலவல்லியே !

உன் கையில் தந்தோம்,
உன் திருவடியில் விழுந்தோம்,
உன் வார்த்தையில் மாறினோம்,
உன்னால் வாழ்கிறோம்,
உன்னோடு வாழ்கிறோம்...

© *குருஜீ கோபாலவல்லிதாசர்*

Read more...

விவேகானந்தரைப் பிடி !

விவேகம் வேண்டுமா ?!
ஆனந்தம் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

வீரம் வேண்டுமா ?!
தைரியம் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

உற்சாகம் வேண்டுமா ?!
உத்வேகம் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

ஞானம் வேண்டுமா ?!
வைராக்கியம் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

நிதானம் வேண்டுமா ?!
நிரூபிக்க வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

நம்பிக்கை வேண்டுமா ?!
நல்ல எண்ணங்கள் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

தெய்வீகம் வேண்டுமா ?!
தெளிவு வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

மாற்றம் வேண்டுமா ?!
மானிடராய் வாழ வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

தூய்மை வேண்டுமா ?!
துறவு புரிய வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

திடம் வேண்டுமா ?!
வலிமை வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

தேச பக்தி வேண்டுமா ?!
சேவை செய்ய வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

சாதிக்க வேண்டுமா ?!
சமாதானம் வேண்டுமா ?!
விவேகானந்தரைப் படி...

உணர வேண்டுமா ?!
உள்ளொளி வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

மனோபலம் வேண்டுமா ?!
மகிழ்ச்சி வேண்டுமா ?!
விவேகானந்தரைப் பிடி...

நீ தேடும் உயர்ந்தவை எல்லாம்
ஓரிடத்தில்...
விவேகானந்தரிடத்தில்...

நம்பினார் கெடுவதில்லை...
விவேகானந்தரை...
விரும்பினோர் வீணானதில்லை...

இன்று விவேகானந்தர் பிறந்தநாள் !
கொண்டாடு !
இது உன் கடமை !
இது உன் உரிமை !

விவேகானந்தரைப் படி...
விவேகானந்தரைப் பிடி...
நீயும் விவேகானந்தன் ஆகமுடியும் !
நீயும் நிவேதிதா ஆகமுடியும் !

Read more...

Tuesday, January 10, 2017

அழகிய கோபியே !

மாலே மணிவண்ணா !
மார்கழி விரதத்திற்கு
பெரியோர்கள் சொன்ன
விதம் கேட்பாயடா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனை
ஆசையாய் சொன்ன
கள்ளழகனை கவர்ந்த
அழகியகோபியே !

பால் போல் வண்ணமும்,
ஞாலம் நடுங்க ஒலிப்பவையுமான,
பாஞ்சசன்னிய சங்கமே தா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனை கவர்ந்த
அழகிய கோபியே !

ஊரெல்லாம் அறிய
உலகெல்லாம் தொழ
எல்லோரும் சிலிர்க்கும்
பெரும் பறையே தா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனை கவர்ந்த
அழகிய கோபியே !

பல்லாண்டு பாட
பன்னெடுங்காலமாக
பரந்தாமனின் அடிபிடித்த
பல்லாண்டு இசைப்பாரைத்
தா என்று கண்ணனை
கள்ளனைக் காதலனைப்
பார்த்து கொஞ்சினவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

கள்ளனின் முகத்தை
கள்ளத்தனமாய் அனுபவிக்கும்
கள்ளனைக் காட்டித்தரும்,
கோல விளக்கை தா,
என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

உள்ளமெல்லாம் ஜோராய்
கொள்ளையடிக்கும் கள்ளனின்
துள்ளும் கொடியான கருடனைத்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து உத்தரவிட்டவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

ஆதிமூலமானவனுக்கு
ஆதியோடு அந்தமாய்
பாதுகையாய், படுக்கையாய்
விதானமான அனந்தனைத்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்துக் கேட்டவளே,
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

ஆலமாமரத்தின் இலையில்
பாலகனாய் கிடந்து
ஞாலமெல்லாம் உண்ட
கோல மணிவண்ணனாய் அருள்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து மொழிந்தவளே,
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

கள்ளமே உள்ளமாய்,
கள்ளமே வாழ்வாய்,
கள்ளமே மூச்சான,
கள்ளர்களான எங்களைக்
கள்ளனின் திருவடியில்
கள்ளமில்லாமல் சேர்க்கும்
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

எங்களைக் கவர்ந்து
மங்களம் அருளும்
திங்கள் முக கோபியே,
கள்ளமில்லாத உன்னிடம்
கள்ளன் பேரைச் சொல்லும்
செல்லக் கிளியாய் எம்மை ஏற்பாயா ?!?

© *குருஜி கோபாலவல்லிதாசர்*

Read more...

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு... வதை அல்ல !
ஜல்லிக்கட்டு... விதை !

ஜல்லிக்கட்டு... கொலை அல்ல !
ஜல்லிக்கட்டு... காளையின் வாழ்வு !

ஜல்லிக்கட்டு... இறக்குமதியல்ல !
ஜல்லிக்கட்டு... தேசத்தின் அடையாளம் !

ஜல்லிக்கட்டு... கொடுமை அல்ல !
ஜல்லிக்கட்டு... புனித வீரம் !

ஜல்லிக்கட்டு... ஏமாற்று அல்ல !
ஜல்லிக்கட்டு... தன்னம்பிக்கை !

ஜல்லிக்கட்டு... மண்ணின் மாண்பு !
ஜல்லிக்கட்டு... காளையின் மாண்பு !

ஜல்லிக்கட்டு... பழங்கதை மட்டுமல்ல !
ஜல்லிக்கட்டு... எதிர்கால நம்பிக்கை !

ஜல்லிக்கட்டு... நடந்தால் நாளை நடக்கும்
வீரமாக நம் எதிர்கால சந்ததி...

காளையின் வீரம்...
காளையர்களின் தீரம்...

எதிர்காலம் வாழ,
உழவு வாழ,
உழவன் வாழ,
காளை வாழ,
தமிழகம் வாழ,
பாரதம் வாழ,
ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும்...
ஜல்லிக்கட்டு நடக்கும்...

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

Monday, January 9, 2017

பொருத்தமான பொற்கொடியே !


ஒருத்தியான தேவகிக்கு
கருத்த கண்ணன்
திருத்தமாய் பிறந்ததை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

ஒருத்தியான யசோதைக்கு
பெருத்த கண்ணன்
ஒருத்தரும் அறியாமல் வந்ததை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

ஒருத்தரும் காணமுடியா
கருத்த இரவில் யாவரையும்
திருத்த வந்த கண்ணனை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

தரிக்க முடியாமல்
வெறுத்த கம்சனை
பருத்த கஞ்சனாய்
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே!

நெருப்பென வயிற்றில் நின்று
கருத்தை மாற்றும்
வெறுப்பிலா கண்ணனை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

அருத்தித்து வந்தோம்,
பொருத்தமான உன்னை !
வருத்தம் தீர்த்து,
மருத்துவம் செய்வாய் என,
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

பொறுப்பும் இலாத,
பொறுத்துப் பார்க்காத,
திருத்த முடியா எம்மிடம்,
வருத்தம் கொள்ளாமல்,
திருத்தப் பார்க்கும்,
பொருத்தமான பொற்கொடியே !

கருத்தில் கண்ணனை,
திருத்தமாய் கொண்ட,
பொருத்தமான பொற்கொடியே, நீயே
திருத்தி பணி கொள் எம்மை !

மருத்தவமும் நீயே !
மருத்துவச்சியும் நீயே !

©*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Read more...

Sunday, January 8, 2017

குன்றாத சேம வைப்பே !

அன்று உலகம் அளந்ததற்கு
இன்று அந்த திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !

சென்று தென்னிலங்கை
வென்ற திறமைக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !

நின்றிருந்த சக்கர அசுரனை
கொன்ற சிறு திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !


கன்றாய் வந்த அசுரனை
குன்றிப்போக வைத்த திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !


குன்றை குடையாய் கொண்டு
கன்றினத்தை காத்த குணத்துக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !


வென்று பகை கெடுத்த
நன்றான வேலுக்கும் கைக்கும்
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !


என்றென்றும் சேவகமே
நன்றாய் கேட்ட உனக்கு
நன்றாய் பல்லாண்டு...
குன்றாத சேம வைப்பே !


குன்றாத சேம வைப்பே !
நன்றாய் உன்னை சேவிக்க
என்றும் திருவருள் தா !
இன்று உன்னிடம் தந்தோம்,
என்றும் உன்னிடமே கொள் !
நன்று எமக்கு இதுவே !

Read more...

Saturday, January 7, 2017

அரங்கனின் கோல மயிலே !

மாரி காலத்தில் குகையில்
சீரிய சிங்கம் துணையுடன்
பிரியாமல் இருப்பதை
பரிவுடன் சொன்ன ,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


அறிவுற்ற சிங்கத்தின்
எரிக்கும் பார்வையையும்
வேரி மயிர் சிலிர்ப்பையும்
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


சூரியனாய் எழுந்து,
மூரி நிமிர்ந்து முழங்கி
தைரியமாய் வரும் சிங்கத்தை,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


சீரிய சிங்கம் போல்
சீரிய சிங்கனே நீ,
கோரிய வரமருள வாவென,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


கரிய காயாம்பூ வண்ணனை,
பெரிய கோயில் விட்டு,
சிறிய எமக்காய் வாவென,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


சீரிய சிங்கனுக்கு
சீரிய சிங்காசனம் தந்து
காரியம் கேள் என
பரிவுடன் சொன்ன
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


புரியாமல் கேட்பதை
அறிந்து ஆராய்ந்து
தெரியாமல் தருவாய் என
பரிவுடன் சொன்ன
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


அறிவே இல்லாத எமக்கு
அரியைத் தர வந்த
மரிக்கொழுந்தே,
உரிமையாய் எம்மிடம்
பரிவாய் உள்ளவளே !
வைகுண்டம் நீயே எமக்கு !


அரியின் கோல மயிலே,
புரியும் காலமெல்லாம்,
தெரியாமல் வீணடித்து,
பெரியோர் ஆனபின்,
குறியில்லாமல் ஓடும்,
தரிகெட்ட எம்மை
பிரியாமல் காப்பாய் !

Read more...

தங்க நங்கை ஆண்டாளே !

அங்கண் மா ஞாலத்து
செங்கோல் அரசரெல்லாம்
தங்கள் அபிமானம்
பங்கமாக வந்தாரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...


சங்கமாக தேவரும்
ரங்கனின் பள்ளிக்கட்டிற்கு
சங்கு முழங்காமல்
சங்கோஜமாய் வந்தனரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...


பங்கஜக் கண்ணனை
சங்கோஜமில்லாமல் அடைய
பொங்கும் பக்தியோடு
மங்கையரும் வந்தனரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே....கிங்கிணி வாய் போல்
செங்கண் எம்மேல்
பங்கமில்லாமல் நோக்க
சிங்காரமாய் விழித்ததோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே....


கொங்கையில் மயங்கித்
தங்கும் பங்கஜக்கண்கள்,
திங்களாய் சூரியனாய்
எங்கள் மேல் நோக்கியதே...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...


அங்கண் நோக்கியதால்
எங்கள் சாபம் இழியவில்லை...
எங்கள் செல்லம் உன்
செங்கண் நோக்கியே
எங்கள் சாபம் மாறியதே...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...


எங்கும் சுத்தி
ரங்கம் தங்கும்,
ரங்கனும் உன்னிடம்
தங்க காத்திருக்கிறான்...
எங்களுக்கும் திருவடியில்
தங்க ஒரு வரம் அருளே...
தங்க நங்கை ஆண்டாளே...

Read more...

Thursday, January 5, 2017

தமிழ் குலக்கொழுந்தே !

ஏற்ற கலங்கள் நிரம்பி
முற்றிலும் வழிகிறதே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !

மாற்றாதே பால் தரும் பசுக்கள்
நிறைந்து மேய்கிறதே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஆற்றப்படைத்தவன்
மாற்றமில்லா நந்தகோபனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !

ஏற்றமுடை நந்தகோபனின்
ஒற்றை மகன் கண்ணனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஏற்றம் தரும் கண்ணனை
அறிவுற்று உறவாட வா...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஊற்று போல் பொங்கும்
ஆற்றல் உடையவன் கண்ணனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


நாற்றமிலா தேவரும்
நாற்றமுடை மனிதரும்
போற்றும் பெரியோனே..
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


தோற்றம் இலாத சுடரே
தோற்றமாய் நின்ற சுடரே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


குற்றம் நிறை உலகில்
குற்றம் தீர்க்க துயிலெழாய்...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


மாற்றாரும் வலி தொலைய
மற்றாரும் அடி பணிய வந்தவனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


போற்றுவார் போற்றினாலும்
தூற்றுவார் தூற்றினாலும்
ஆற்றாது அடி பணிய வைப்பவனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


பெற்றோரையும் விட்டு
உற்றோரையும் மறந்து
போற்றி யாம் வந்தொம்
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !பொற்றாமரைப் பாதங்கள்
சிற்றாமரை விரல்கள் கொண்ட
குற்றமிலா பாவையே !
ஊற்றமுடை நெஞ்சும்,
ஏற்றமுடை பக்தியும்,
மாற்றமிலாமல் தா நீயே !


குற்றமுடை எமக்கு
சீற்றமுடை நாயகனை விட
சீற்றமிலாத நாயகியே
சுற்றமும், மற்றுமும் !


பற்றுடை எமக்கு
ஆற்று நீராய் பாசுரங்கள்
ஊற்று நீராய் அனுபவங்கள்
பற்றோடு தரும் பாவையே !
வெற்றியே உனக்கு !
நற்றுணையே நீ எமக்கு !

Read more...

Wednesday, January 4, 2017

மார்கழி நாயகி நீயே !

முப்பத்து மூவருக்கும்
முதல்வன் நீயே !
முன் சென்று எல்லாம்
தீர்ப்பவன் நீயே !
என்று சொன்னாயே ,
மார்கழி நாயகி நீயே !

தேவைக்காக வரும்
தேவருக்காக பரிபவன் நீயே !
தேவையை தெளிவாய்
தெரிந்தவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

கலியின் கொடுமை தீர்
கலியே நீயே !
துளியும் யோசிக்காமல்
துயிலெழாய் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

பக்தரைக் காப்பதில்
வல்லவன் நீயே !
பக்தரின் விரோதியை
அழிப்பவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

தப்பே செய்பவருக்கு
வெப்பம் தந்து,
தப்பில்லாமல் தட்டிக் கேட்டு
தப்பைத் திருத்துபவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

அமலனும் நீயே !
நிமலனும் நீயே !
விமலனும் நீயே !
கமலனும் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

மென் முலையாள் நீயே !
மெல்லிடையாள் நீயே !
செவ்வாயினாள் நீயே !
செல்வி நீயே நப்பின்னாய் !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

திருவுக்கும் திரு நீயே !
தரும் தெய்வம் நீயே !
துயிலெழுவாய் நீயே !
நப்பின்னாய் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

உக்கமான விசிறியை
ஊக்கமாக தந்து,
தட்டொளியான கண்ணாடியை,
சட்டெனவே தந்து,
பட்டென அருள் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

உன் மணாளனும் நீயும்,
நின் அடிமையான எமக்கு,
நீர் ஆடி ஆடி வந்து,
நீராட்ட வேண்டுமே,
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

மார்கழியில் நாள் கழிய,
மார்கழியில் பாவம் கழிய,
மார்கழியில் வினை கழிய,
மார்கழியில் அகம் கழிய,
மார்கழியில் பாவை சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !

மார்கழிக்கும் நாயகி நீயே !
மாறாதவனுக்கும் நாயகி நீயே !
மாறாத நாயகியும் நீயே !
மாற்றம் தரும் நாயகியும் நீயே !
மார் தட்டி சொல்லுவோம் நாமே !
மார்கழியில் உன் நாமமே !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP