ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, January 16, 2017

செல்வச் செல்ல மகள் !

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

வங்கக்கடல் கடைந்த
மாதவனாய் கேசவனாய்,
உன்னைச் சொல்லி
உன் நாமத்தை பறைசாற்றினவள்
எங்கள் பூமகள்,திருமகள்,
செல்வச் செல்ல மகள்...

திங்கள் திருமுக கோபியாய்
உன்னைக் கொஞ்சிக் கெஞ்சி,
எல்லோரையும் பாட வைத்து
உனக்கு பெருமை தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

உன்னிடம் பறை வாங்கியதை
உவகையுடன் சொல்லி
வில்லிபுத்தூர் பட்டர் பிரானுக்கும்
உனக்கும் ஏற்றம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

சங்கத் தமிழ் மாலை
முப்பதும் தப்பாமே
சொல்லி உன் அருளுக்கு
உலகில் மதிப்பு தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஈரிரண்டு தோள்களாகவும்,
செங்கண் திருமுகமாகவும்,
செல்வத் திருமாலாகவும்
உன்னழகைக் கொண்டாடினவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கும் திருவருள் எப்போதும்
எல்லோருக்கும் எல்லா விதத்திலும்
இன்பமும் கிடைக்கும் என்று
உனக்கு அடையாளம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஒன்றும் தெரியாத எமக்காய்
என்றோ உன்னிடம் பரிந்தாள்,
எமக்காகவே உன்னை அடைந்தாள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

பூவுலகில் இருக்கும் எம்மை
வைகுந்தம் ஏற்றிவிட திருப்பாவை
முப்பதும் சொல்லி அருள்
செய்து காவல் காக்கிறவள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கள் பூமகள் எங்கள்
தாய் !
எங்கள் திருமகள் எங்கள்
செல்வம் !
எங்கள் செல்வ மகள் எங்கள்
தெய்வம் !
எங்கள் செல்ல மகள் எங்கள்
வாழ்வு !

எங்கள் செல்ல மகளே,
உனக்காகவே நாங்கள்
பக்தி செய்வோம் !
உனக்காகவே நாங்கள்
நாமம் ஜபிப்போம் !
உனக்காகவே நாங்கள்
கண்ணனைத் தொழுவோம் !
உனக்காகவே நாங்கள்
சரணாகதி செய்வோம் !

எங்கள் செல்வ மகளே !
நீ பாவை விரதம்
இருக்கப்போவது தெரிந்தே,
அன்றே சொன்னான் மாயன்,
மாதங்களில் நான் மார்கழி என்று...

அடுத்த மார்கழி...
யாம் இருப்போமோ ?!
செல்ல மகளை அனுபவிப்போமோ ?!
அப்போதைக்கு இப்போதே
சொல்லிவைத்தோமடி...
உன் திருப்பாவை முழுதும்...

இருந்தால் இங்கே திருப்பாவை...
இல்லை என்றால் அங்கே திருப்பாவை...
நீ எங்கேயோ அங்கே...

© *குருஜீ கோபாலவல்லிதாசர்*

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP