ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, January 2, 2017

கள்ளனின் கண்ணம்மா !

உந்து மதமுடைய
யானையை உடையவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


ஓடாத தோள் உடையவன்
யானையும் அடக்குபவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


நந்தகோபன் மருமகளாய்
வாழ பாக்கியம் செய்தவள்
நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


வாசம் வீசும் குழலாள்,
கண்ணனின் வாசம்
வீசும் நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


கண்ணனைத் தர
கதவைத் திற, அதற்கு நீ
மனதைத் திற நப்பின்னாய்
என்றாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


வந்த கோழிகளும்
சொந்தமான கண்ணனை
சந்தமாய் அழைப்பதை
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


மாதவிப் பந்தலில்,
காதலில் கூவும் குயில்களின்,
நாதத்தில் கண்ணனை
அனுபவித்தாயே,
கள்ளனின் கண்ணம்மா !


பந்தை விரல்களில்
பந்தமாய் கொண்டு
காந்தமாய் கண்ணனை
கொண்டவளை சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !


மைத்துனனோடு மிதுனமான
மைத்தடம் கண்ணழகியிடம்
பைத்தியமாய் அவன்
நாமம் சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !


செந்தாமரை கையினால்,
பாந்தமான வளையல்களோடு,
வந்து திறக்கக்
கெஞ்சினாயே,
கள்ளனின் கண்ணம்மா !


மகிழ்ச்சி நீ தருவாய்
முகிழ்த்த நீ வருவாய்
நெகிழ்வு நீ அருளாய்
திகழ வைப்பாய் என்றாயே
கள்ளனின் கண்ணம்மா !


உடையவர் ராமானுஜரும்
உடையவன் கண்ணனை
உடையவள் நப்பின்னையை,
உன்னுடை அருளால் கண்டாரே,
கள்ளனின் கண்ணம்மா !


கண்ணம்மா ! கண்ணம்மா !
கள்ளனின் கண்ணம்மா !
பாரதத்தின் கண்ணம்மா !
காதலின் கண்ணம்மா !
பக்தியின் கண்ணம்மா !
நீயே கண் அம்மா !


கள்ளனின் கண்ணம்மா !
கள்ளமெல்லாம் எமைவிட்டொழிய,
உள்ளமெல்லாம் உனைநினைத்து,
துள்ளும் இளமையெலாம்,
கள்ளனுக்காய் தர நீ
கண் பாராய் கண்ணம்மா !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP