ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, February 4, 2017

பீஷ்மா ! ஆயிரத்தில் ஒருவனல்ல !

பீஷ்மா !

கங்கையின் புனிதத்தை தாய்மையை,
காலமெல்லாம் எல்லோரும் நினைக்க,
உலகில் நிரூபிக்க வந்தாயோ !?!

பிள்ளை தந்தைக்குச் செய்யும்,
கடமையை புலம்பாமல் செய்யவேண்டும்,
என்று பறைசாற்ற வந்தாயோ !?!

இளமையின் பலன் காமமல்ல,
இளமையின் அடையாளம் வைராக்கியமே
எனக் காட்ட வந்தாயோ !?!

ராஜகுமாரன் என்றால் ஆள்பவனல்ல,
தேசத்திற்கு உழைப்பவன்
என்று சொல்ல வந்தாயோ !?!

சூழ்நிலைகளில் தப்பு செய்பவன் மனிதனல்ல,
சூழ்நிலைகளை ஜெயிப்பவனே மனிதன்,
என பாடம் நடத்த வந்தாயோ !?!

எங்கிருந்தாலும் கண்ணனை
நீங்காமல் நினைக்க முடியும்
என்று உறுதி தர வந்தாயோ !?!

பக்தன் சொன்னால்
பக்தவத்சலன் கேட்பான்,
என்று எமக்கு புரிய வைக்க வந்தாயோ !?!

அம்புகள் துளைத்தாலும்,
அம்பிலே படுத்தாலும்,
அன்பிலே கண்ணனை ஈர்க்க முடியும் என்று பக்தியைக் காட்டிடவே வந்தாயோ !?!

உடலெல்லாம் புண்ணானாலும்,
உதடு நிறைய நாமம் சொல்லென
உண்மையை இயம்ப வந்தாயோ !?!

ஆயிரம் அவமானங்கள் பட்டாலும்,
ஆயிரம் நாமம் சொல்லி பக்தி செய்யென
ஆறுதல் தர வந்தாயா !?!

மரணத்தை கண்டு நடுங்காதே,
மரணம் உடலுக்குத்தான் நமக்கல்ல,
சரணம் தர கண்ணனுண்டு என்று
வரம் தர வந்தாயோ !?!

எல்லோரும் நம்மை விட்டாலும்,
எப்போதும் கண்ணன் விடமாட்டான்,
முப்போதும் அவனை நம்பு என்று
செப்ப வந்தாயோ !?!

அஷ்டமி கண்ணன் வந்தான்,
அஷ்டமி நீ மோக்ஷம் அடைந்தாய்,
அஷ்டமி நல்லதே என நாங்கள்
இஷ்டமாய் ஏற்றோம் பீஷ்மா !!!

கஷ்டமெல்லாம் தீரும் என
அஷ்டமியை நீ உரிமையோடு
இஷ்டப்படுவாய் என்பதால் கண்ணனும்
அஷ்டமியில் வந்தானோ !?!

பீஷ்மா ! பீஷ்மா ! பீஷ்மா !
ஆயிரம் எண்ணங்கள் வேண்டாம் !
ஆயிரம் உறவுகள் வேண்டாம் !
ஆயிரம் ஆசைகள் வேண்டாம் !
ஆயிரம் பெருமைகள் வேண்டாம் !
ஆயிரம் லாபங்கள் வேண்டாம் !
ஆயிரம் நாமங்கள் போதும் !
நீ சொன்ன ஆயிரம் நாமங்களே போதும் !

ஆயிரம் பிறவிகள் எடுத்து,
ஆயிரம் நாமங்கள் சொல்ல,
இந்த ஏழைக்கு அருள் செய்...

ஆயிரம் கண்ணனை பார்த்த பீஷ்மா !
ஆயிரம் கோடி வந்தனங்கள் உனக்கு !
ஆயிரத்தில் ஒருவனல்ல நீ !
ஆயிரமாயிரம் கோடிகளில் ஒருவன் நீ !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP