ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, July 27, 2017

நீ பிறந்த திருவாடிப்பூரம் !

தூது சொல்லடி !
என்னை உன் கிளியாக்கி,
தூது சொல்லடி...
ரங்கனின் உயர் கன்னி ஆண்டாளே !

காதல் சொல்லடி !
என்னை உன் மாலையாக்கி,
காதல் சொல்லடி...
சூடிக் கொடுத்த சுடர்கொடியே !

ஆசை சொல்லடி !
என்னை உன் ஆடையாக்கி,
ஆசை சொல்லடி...
அஞ்சுக்குடிக்கொரு சந்ததியானவளே !

பாசுரம் சொல்லடி !
என்னை உன் தோழியாக்கி,
பாசுரம் சொல்லடி...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையே !

கண்ணாடி காணடி !
என்னை உன் கண் மையாயிட்டு,
கண்ணாடி காணடி...
பிஞ்சாய் பழுத்தவளே !

புலம்பல் செய்யடி !
என்னை உன் மூக்குத்தியாக்கி,
புலம்பல் செய்யடி...
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாளே !

கைத்தலம் பற்றடி !
என்னை உன்கை மருதாணியாக்கி,
கைத்தலம் பற்றடி...
திருப்பாவை பாடிய செல்வியே !

அம்மி மிதிப்பாயடி !
என்னை உன் பாத மெட்டியாக்கி,
அம்மி மிதிப்பாயடி...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாளே !

அழைத்துச் செல்லடி !
என்னை உன் கோபாலசுந்தரியாக்கி,
அழைத்துச் செல்லடி...
ஸ்ரீவில்லிபுத்தூர் நாயகியே !

உன்னிடமே வைத்துக்கொள்ளடி !
என்னை உன் திருமுலையாக்கி,
உன்னிடமே வைத்துக்கொள்ளடி...
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாளே !

இவையெல்லாம் தருவாயடி !
இன்று நீ பிறந்த திருவாடிப்பூரம் !
தகுதியில்லை என்றாலும்,
உன்னிடமுள்ள உரிமையில் கேட்டுவிட்டேன் !
ஆகையால்தருவாயடி !
மன்னித்து அருள்வாயடி !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP