ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, August 21, 2017

கண்ணா ! தூது செல் !

ராதே...
வருவாயா...
உன் தாசி
கெஞ்சுகிறேன் !

ராதே...
தருவாயா...
உன் தாசி
காத்திருக்கிறேன் !

ராதே...
அருள்வாயா...
உன் தாசி
யாசிக்கிறேன் !

ராதே...
உன் தாசியின்
இதயத்தை
உனக்குப் பிடித்த
நிதிவனமாய்
மாற்றிவிடு !

ராதே...
உன் தாசியின்
மனதை
நீயும் கண்ணனும்
விளையாடும்
மெத்தையாய்
மாற்றிவிடு !

ராதே...
உனக்கும்,
உன் கண்ணனுக்கும்,
அந்தரங்க
கைங்கரியம்
செய்ய உன் தாசிக்கு
வாய்ப்பு கொடு !

ராதே...
தகுதியில்லாத
உன் தாசியை
உன் திருவடியில்
என்றுமே
வைத்துக்கொள் !

க்ருஷ்ணா !
உன்னிடம்
கெஞ்சுகிறேன் !
எனக்காக
ராதிகாவிடம்
தூது செல் !

என் மனதை
உன் ராணியிடம்
சொல் !

என் தேவையை
உன் அழகியிடம்
சொல் !

என் தாபத்தை
உன் செல்லத்திடம்
சொல் !

என் அவசரத்தை
உன் தேவதையிடம்
சொல் !

காத்திருக்கிறேன்
கண்ணா !
உன் காதலியின்
ஒரு வார்த்தைக்காய் !

Read more...

Sunday, August 20, 2017

யாரோ...இந்த பிள்ளை...

முச்சந்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அரச மரம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

ஆத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குளத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

மஞ்சள் பொடி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

களிமண் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கண் திருஷ்டி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கருப்பு எரும்பு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கன்னி மூலை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அருகம்புல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

எருக்கம்பூ என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

தேங்காய் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மாம்பழம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கொழுக்கட்டை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

சுண்டல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

அப்பம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கரும்பு என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மஹாபாரதம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யானை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சதுர்த்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குடை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மூஞ்சூறு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

பசுஞ்சாணம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

வெள்ளெருக்கு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சுழி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யாரோ !?!
இந்த பிள்ளை
யாரோ !?!

இவரே பிள்ளையாரோ !!!

சங்கடங்கள் நீக்க
சதுர்த்தியில்
வந்த பிள்ளையே !!!

சிவனையும் எதிர்த்து,
தாய் சொல்லைக் காக்க
வந்த பிள்ளையே !!!

அம்மையப்பனே உலகம்
என எல்லோருக்கும் சொல்ல
வந்த பிள்ளையே !

எல்லோருக்கும் பிள்ளையே !!!
சமத்துப்பிள்ளையே !!!
கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!!
கொழுக்கட்டை பிள்ளையே !!!

ஊரும் உலகமும்
கொண்டாடும் பிள்ளையே !!!

தொந்திப்பிள்ளையே !!!
தந்தப்பிள்ளையே !
பிள்ளைகள் கொண்டாடும்
பிள்ளையே !!!

வா !
வா !
உனக்காகவே
நாங்கள்
ஆசை ஆசையாய்
காத்திருக்கிறோம் !

அப்பம், பழம், கரும்பு...
கூடவே எங்கள் அன்பும்...
உனக்காகவே....

Read more...

Saturday, August 19, 2017

வாழு ! வாழு ! வாழு !

ஹே மனிதா !!!!

கொஞ்சம் உலகை
ஒழுங்காய் பார் !
நீ பெரியோன்
என்பதை மறந்து,
சீடனாய் உலகைப் பார் !

இருப்பிடத்தை விட்டு,
இடம் பெயர்த்தாலும்,
புதிய இடத்தில்,
இயலாமையால்
புலம்பாமல்,
உறுதியாய் வாழும்
செடிகளைப் பார் !

கடல் கடந்து,
ஒவ்வொரு வருடமும்,
இடம் பெயர்ந்து,
ஆகாயமார்க்கமாய்
பல நாடுகளுக்குச்
சென்று அங்கு வாழ்ந்து,
மீண்டும் தன் குஞ்சுகளோடு,
தன் பழைய இடம் வரும்
பறவைகளைப் பார் !

தாயிடமிருந்து பிரிந்து,
மண்ணில் புதைத்த,
முட்டைகளிலிருந்து,
முட்டி மோதி வெளிவந்து,
கடற்கரை மணலிலிருந்து,
வெளிவந்து கடலுக்கு,
பயப்படாமல் செல்லும்,
ஆமைக்குஞ்சுகளைப் பார் !

ஆழத்தில் மனிதர்
புதைத்த பிறகும் கூட,
தானே மண்ணைக் கிளறி,
தானே உயர்ந்து,
தானே நிமிர்ந்து,
முளை விடும் விதைகளைப் பார் !

பறவைகளின் எச்சங்களில்,
இருந்து வெளிவந்து,
எங்கோ கட்டடத்தின்
மூலையில் விழுந்து,
ஒரு நாள் மழைத்துளியில்,
ஒய்யாரமாய் வளரும்,
சின்னஞ்சிறிய செடிகளைப் பார் !

புயல் காற்றில்,
சரிந்த பின்னும், மனிதர்
மறந்து போன பின்னும்,
புதிய எழுச்சியோடு,
மீண்டும் வான் நோக்கி,
வளரும் மரங்களின்
கிளைகளைப் பார் !

தழுவிக்கொள்ள,
மேலேற்றிவிட ஒரு
கொம்பு இல்லாத போதும்,
மேலே படர எல்லா
வழிகளிலும் ஆசையாய்
முயற்சிக்கும்,
உடலில் பலமில்லா,
ஊக்கத்தில் குறையில்லா,
கொடிகளைப் பார் !

மனிதர்கள் ஆசையாய்,
நடந்து, கையால் கிள்ளி,
கத்தரிக்கோலால்
வெட்டிய பின்னும்,
மீண்டும், மீண்டும்
முயற்சியோடு
துளிர்க்கும் புல்லைப் பார் !

இப்படி இருந்தால்
எனக்குப் பிடிக்கும்,
என்று மனிதர் தன இஷ்டப்படியெல்லாம்,
வெட்டி, வளைத்தாலும்,
புதியதாய் ஒவ்வொரு
நாளும் வாழும்,
க்ரோட்டன் செடிகளைப் பார் !

செடியிலிருந்துப் பறித்து,
பலர் கை மாறி,
நாரில் தொடுத்த பிறகும்,
வாடும் வரை,
ஆனந்தமாய் வாசம்
வீசும் மல்லிகையைப் பார் !

கண்ட இடங்களில்,
கொண்டவர் போட்டுச்
சென்றாலும், கண்டதை
மிதித்தாலும்,
காலுக்கு நன்மை
செய்யும் செருப்பைப் பார் !

யாருமே கவனிக்கவில்லை
என்றாலும், தினமும்,
துடைத்து அழகாய்,
வைக்கா விட்டாலும்,
தன் கடமையை
இருந்த இடத்தில்
இருந்து செய்யும்,
கடிகாரங்களைப் பார் !

உன்னோடு கூடவே,
நீயே கொண்டாடும்,
நீயே அதிசயிக்கும்,
நீயே தூக்கி எறியப்போகும்,
தினமும் தன்
கடமையிலிருந்து தவறா,
உன் கைப்பேசியைப் பார் !

இன்னும் ஓராயிரம்...
இல்லையில்லை...
இன்னும் பலகோடி...

உன்னைச் சுற்றி...
வாழு...வாழு...வாழு...
நிம்மதியாய் வாழு...
புலம்பாமல் வாழு...
ஆனந்தமாய் வாழு...
அழகாய் வாழு...
முயற்சியோடு வாழு...
புதியதாய் வாழு...
உற்சாகமாய் வாழு...
உனக்காக வாழு...
உறுதியாய் வாழு...
என்று கூவிக்கொண்டே
இருக்கும் இந்தக்
கடவுளின் தூதுவர்களைக்
கண் திறந்து பார் !!!

கடவுளின் தரிசனம் புரியும் !
கடவுளின் கோட்பாடு புரியும் !
கடவுளின் ஆசிர்வாதம் புரியும் !

Read more...

Monday, August 7, 2017

க்ரஹண புண்ணிய காலம் !

மதமாற்றம் என்ற
அசிங்கம் அழியட்டும் !
தன் மதம் என்னும்
புண்ணியம் சேரட்டும் !

தீவிரவாதம் என்னும்
கெடுதல் அழியட்டும் !
ஒற்றுமை என்னும்
புண்ணியம் சேரட்டும் !

வியாதிகள் என்னும்
கெடுதல்கள் அழியட்டும் !
ஆரோக்கியம் என்னும்
புண்ணியம் சேரட்டும் !

முதியோர் கஷ்டங்கள்
என்னும் அவலங்கள் அழியட்டும் !
முதியோர் நிம்மதி என்னும்
புண்ணியம் சேரட்டும் !

விவாகரத்து என்னும்
முட்டாள்தனங்கள் அழியட்டும் !
விவாகத்தின் மகத்துவம் என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

பிளாஸ்டிக் என்னும்
அசுரன் அழியட்டும் !
விவசாயம் என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

வறட்சி என்னும்
கொடுமை அழியட்டும் !
மழை என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

வறுமை என்னும்
பாபம் அழியட்டும் !
வளமை என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

கோபம் என்னும்
கொடுமை அழியட்டும் !
குணம் என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

லஞ்சம் என்னும்
வயிற்றெரிச்சல் அழியட்டும் !
நேர்மை என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

குப்பை என்னும்
அதர்மம் அழியட்டும் !
சுத்தம் என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

பகைமை என்னும்
பகட்டு அழியட்டும் !
பக்தி என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

வம்பு என்னும்
கொடுமை அழியட்டும் !
நாமஜபம் என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

கெட்ட வார்த்தைகள்
என்னும் கேடு அழியட்டும் !
அர்ச்சனை என்னும்
புண்ணியம் பெருகட்டும் !

பெண்ணுடல் மோகம்
என்னும் பேய் அழியட்டும் !
பெண்ணுடல் தெய்வீகம்
என்னும் புண்ணியம் பெருகட்டும் !

வாருங்கள் !
பிரார்த்திப்போம் !
நிச்சயமாக நடக்கும் !
நல்லதே நடக்கும் !
நல்லதே பெருகும் !
நல்லதே வாழும் !

இந்த சூடாமணி
சந்திர க்ரஹண
புண்ணிய காலத்தில்
நாம் பிரார்த்திப்போம் !

கண்ணன் அருள்கிறான் !
முழுவதுமாக வாங்கிக்கொள்வோம் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🏼🌱 *ஆனந்தவேதம்*🍃🖋

Read more...

Sunday, August 6, 2017

தோழா ! தோழி !

என்னை அறிந்த தோழன்/தோழி...

நானே என்னை
மறந்தாலும்,
என்னை மறக்காத
தோழன்/தோழி...

என்னை எல்லோரும்
வெறுத்து ஒதுக்கினாலும்,
என்னை விட்டு
நீங்காத தோழன்/தோழி !

என்னால் ஒரு
பலனும் இல்லை
என்றாலும் என்னை
வெறுக்காத தோழன்/தோழி !

என்னுடைய தேவைகளை
சொல்லாமலே
அறிந்த தோழன்/தோழி !

என் மீது கொண்ட
அன்பை எக்காலத்திலும்
விடாத தோழன்/தோழி !

என் மீது பூரணமான
நம்பிக்கை வைத்த
உண்மையான தோழன்/தோழி !

என்னை உள்ளபடி
அறிந்தும், புரிந்தும்,
என்னோடு வாழும்
அன்பான தோழன்/தோழி !

என் குற்றங்களை
சரிசெய்யும், என்
தவறுகளை சுட்டிக்காட்டும்
தைரியமான தோழன்/தோழி !

என்னை எனக்கே
பிடிக்கவில்லை
என்றாலும், என்னை
ரசிக்கும் தோழன்/தோழி !

இப்படி ஒரு தோழன்/தோழி....
உனக்கும் உண்டே...

அதான் நம் கண்ணன்/கண்ணம்மா...

Read more...

Saturday, August 5, 2017

ஆளவந்தீரோ !!!

எம்மை ஆளவந்தீரோ !!!

ஆண்டாளின் ஆடியில்,
அவதரித்து எம்மை
ஆளவந்தீரோ !

உத்திராட நக்ஷத்திரத்தில்,
உலகம் முழுவதும்
ஆளவந்தீரோ !

காட்டுமன்னார்கோயிலில்
வந்து பகவானைக் காட்டி
ஆளவந்தீரோ !

நாதமுனிகளின்
பக்த சாம்ராஜ்ஜியத்தை
ஆளவந்தீரோ !

ஆக்கியாழ்வானின்
அட்டகாசத்தை அடக்கி,
ஆளவந்தீரோ !

ராணியின் பதிவிரதா
மஹிமையை நிரூபித்து
ஆளவந்தீரோ !

தூதுவளைக் கீரைக்கு
ஆட்பட்டு மணக்கால் நம்பியால்
ஆள வந்தீரோ !

பகவத்கீதையைக் கேட்டு உருகி,
அழகன் அரங்கன்
ஆள வந்தீரோ !

அரங்கனின் காதலில்,
அரங்கநாயகியின் அன்பில்,
காவியை ஆள வந்தீரோ !

நடமினோ அனந்தபுரம் என்ற
அரையரின் வார்த்தைக்கு,
அனந்தபத்மநாபனை ஆளவந்தீரோ !

ஆம் முதல்வன் இவன்
என்று எங்கள் யதிராஜனை
ஆளவந்தீரோ !

பெரியநம்பி,
திருக்கோஷ்டியூர் நம்பி,
திருமாலையாண்டான்,
திருவரங்கப் பெருமாள் அரையர்,
பெரிய திருமலை நம்பி,
போன்ற சிஷ்யரைக் கொண்டு,
ஸ்ரீவைஷ்ணவ சாம்ராஜ்யத்தை
என்றுமே ஆளவந்தீரோ !

மாறனேர் நம்பியைக் கொண்டு,
சாத்தாத முதலிகளையும்
ஆள வந்தீரோ !

ஆளவந்தாரே !
இன்று உமது திருநக்ஷத்திரம் !
ஒரு வரம் தாருங்கள் !

இதுவரை காமம் எங்களை ஆள்கின்றது !
கோபம் ஆள்கின்றது !
பயம் ஆள்கின்றது !
குழப்பம் ஆள்கின்றது !
கர்மவினை ஆள்கின்றது !

இனியாவது நீங்கள் மட்டுமே
எங்களை ஆள,
பூரணமாய் அருளுங்கள் !

ஆளவந்தாரே !
எம்மையும் ஆள்வீர் !
எம் வம்சத்தையும் ஆள்வீர் !

Read more...

Thursday, August 3, 2017

ஆடிப்பெருக்கு !

ஆடிப்பெருக்கு...
காவிரி பெருக அருள் செய் ரங்கா...

ஆடிப்பெருக்கு...
யாரிடம் கெஞ்சவேண்டும்
என்கிறாய்...
மற்றவரிடமா...
உன்னிடமா...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களுக்குத் தான்
பொறுப்பில்லை...
அக்கரையுமில்லை...
உனக்குண்டே...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரி காய்ந்தால்
யாருக்கு அவமானம்...
எங்களுக்கா ?!?
உனக்கா ?!?
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
நாங்கள் வந்தோம்...
போய்விடுவோம்...
நீ தான் இங்கே நிரந்தரம்...
உனக்குத்தான் காவிரி...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களைவிட
காவிரியை
அனுபவித்தவன்,
அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்போகிறன்...
நீயே...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
ஆழ்வார்கள் சொல்..
மறந்ததோ...
திருப்பாணன் பாடல்
மறந்ததோ...
காவிரி மஹிமை...
மறந்தனையோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஆளவந்தார் குளித்ததும்
பொய்யோ...
எங்கள் யதிராசன்
தவராசன் படித்துறையும் பொய்தானோ...
மௌனமேன்...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரியின் அலைக்கை
வருடல் கசந்ததோ...
மணல் கை வருடல்
சுகமானதோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஸ்ரீரங்கம் பூலோக
வைகுண்டமாமே...
காவிரி விரஜா
நதியாமே...
விரஜையில் மண்தான்
இருக்குமோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
சித்திரான்னம் போதுமோ...
வயல் விளைய
வேண்டாமோ...
உன் நெல் உண்டியல்
நிரம்பவேண்டாமா...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
உனக்கே அக்கறையில்லை
என்றால்,,,
என்ன செய்ய...
யாரிடம் சொல்ல...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
இந்த ஆடிப்பெருக்கில்,
எங்கள் கண்ணீரே,,,
பெருகுகிறது...
இனிவரும் காலமெல்லாம்...
காவிரி பெருகட்டும்...
மனம் குளிர...
வயிறு குளிர...
மண் குளிர...
ஆழ்வார் குளிர...
பெருகட்டும்....
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
அடி ரங்கநாயகி...
உன் கணவனிடம்...
ஏதேதோ, வாயில்
வந்தபடியெல்லாம்...
பேசிவிட்டேன்...
நீதான் அரங்கனுக்கு
எடுத்துச் சொல்லி...
அவர் பெயரைக்
காப்பாற்றிக்கொள்...

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP