ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

658. இமயமே !

இமயமே....
உன் முன்னே என் அகம்பாவம் தவிடுபொடியாகிறது !

இமயமே....
உன் முன்னே நான் சிறு பிள்ளையாய் ஆகிறேன் !

இமயமே....
உனது அளவின் முன் நான் தூசியை விட சிறியதாகிறேன் !

இமயமே....
உனது அழகில் நான்
என்னையே இழக்கிறேன் !

இமயமே....
உனது எல்லையற்ற கருணையின் முன் நான் ஊமையாகிறேன் !

இமயமே....
உனது ஒவ்வொரு மேடு பள்ளமும் என்னைப் பக்குவப்படுத்துகிறது !

இமயமே....
உன்னுள் நான் என்னைத் தேடுகிறேன் !
உன்னுள் நான் தெய்வீகத்தை உணர்கிறேன் !

இமயமே....
நீ தரும் அமைதியும்,
உற்சாகமும், பலமும் உலகில் எவருமே தரமுடியாது !

இமயமே !
நீ வாழ்விற்கு புதிய பரிமாணத்தைத் தருகிறாய் !

இமயமே !
நீ வாழ்வின் மகத்துவத்தை போதித்துக்கொண்டிருக்கிறாய் !

இமயமே !
நீ உடலின் அருமையை ஒவ்வொரு விதத்தில் உணரவைக்கிறாய் !

இமயமே !
உன் உயரமும் அளவும் எல்லையில்லாதது !
ஆயினும் உன் அன்பும் அக்கறையும் அழவைக்கிறது !

இமயமே !
நீ தேவர்களையும், மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும்,
பூச்சிகளையும்,
மரங்களையும்,
செடிகளையும், கொடிகளையும்,
நதிகளையும்,
கல்லையும்,
மண்ணையும்,
பனியையும்,
சமமாகவே வைத்திருக்கிறாய் !

இமயமே !
சாதுக்களின் புகலிடம் நீயே !

உன்னுள் எத்தனை ரகசியங்கள் !
நீ காட்டிக்கொண்டே இருக்கிறாய் !
நான் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன் !

இமயமே !
உன்னிடம் வரும்போது நான் உயர்கிறேன் !
என் மனம் உயர்கிறது !
என் உடல் புதியதாகிறது !
என் குணங்கள் உயர்கிறது !
என் எண்ணங்கள் உயர்கிறது !
என் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது !

இமயமே !
உனது தொடர்பு ஏற்பட்டபிறகே, நான் மனிதரின் குறைகளை மறந்து, குணங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் !

இமயமே !
உன் மீது நடந்தபிறகே,
உயர்ந்ததையே நினைக்கும் மனமும்,
குறைகளை கவனிக்காமல் வாழவும்,
நிகழ்காலத்தில் இருக்கவும், கற்றுக்கொண்டேன் !

இமயமே !
உன்னை முழுவதும் அனுபவிக்க எனக்கு நீண்ட ஆயுளும்,
அருமையான ஆரோக்கியமும், குறைவில்லாத நேரமும் அருள்வாய் !

இந்த வாழ்வின் முடிவில்,
உன்னோடு உன்னுள் என்னை வைத்துக்கொள் !

நீ தந்தவை எதற்கும் நான் உனக்கு பதிலுக்கு ஒன்றுமே செய்யமுடியாது !

உன்னை கைகூப்பி
வணங்கித் தொழுகிறேன் !

என் க்ருஷ்ணன் கீதையில் "அசையாதவனவற்றுள் நான் இமயம்" என்று சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் சிறிது புரிகிறது !

நீ வேறல்ல, க்ருஷ்ணன் வேறல்ல என்பதே என் அனுபவம் !

க்ருஷ்ணனாகிய இமயமே !
இந்த ஜீவனை உன் மடிமீது எப்போதும் வைத்துக்கொள் !!!!

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP