ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, October 11, 2013

ஏதேனும் ஆவேனே ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 எம்பெருமானார் இராமானுஜரின்
திருவடியில் பாதுகையாய் ஆகமாட்டேனா ! ? !


உடையவர் இராமானுஜரின்
திருக்கைகளில் த்ரிதண்டமாய் ஆகமாட்டேனா ! ? !


திருப்பாவை ஜீயர் இராமானுஜரின்
திருவரையில் காஷாய வஸ்திரமாய் ஆகமாட்டேனா ! ? !


பெரும்புதூர் மாமுனி இராமானுஜரின்
பூக்குடையாய் ஆகமாட்டேனா ! ? !


இளையாழ்வார் இராமானுஜரின்
திருமேனியைத் தீண்டும்
திருமண் கட்டியாய் ஆகமாட்டேனா ! ? !


காரேய் கருணை இராமானுஜர்
உணவருந்தும் ஒரு வாழை இலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பவிஷ்யதாசார்யன் இராமானுஜர்
கழுத்தில் ஒரு மாலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சங்காழி அளித்த பிரான் இராமானுஜர்
திருமேனியில் பூணூலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
நம் கோயில் அண்ணன் இராமானுஜர்
அமரும் பீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
யதிராஜர் இராமானுஜர் உபயோகிக்கும்
ஒரு பொன் வட்டிலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பாஷ்யகாரர் இராமானுஜர் கையில்
ஒரு எழுத்தாணியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
திருக்குறுங்குடி நம்பிக்கும் உபதேசித்த இராமானுஜரின்
ஜலபாத்திரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
இளைய பெருமாள் இராமானுஜர்
கைவிரலில் ஒரு மோதிரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
 ஆதிசேஷ அவதாரமான இராமானுஜரைச்
சுமக்கும் படுக்கையாய் ஆகமாட்டேனா ! ? !


லக்ஷ்மண முனி இராமானுஜரின் காதுகளில்
ஒரு குண்டலமாய் ஆகமாட்டேனா ! ? !


எங்கள் கதியான இராமானுஜ முனியின்
தலையில் ஒரு க்ரீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சம்பத்குமாரனின் தகப்பனார் இராமானுஜரின்
திருக்கைகளில் அக்ஷதையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தமர் உகந்த திருமேனி இராமானுஜரின்
பாதத்தில் தூசியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தாம் உகந்த திருமேனி இராமானுஜரின்
திருமேனியில் ஒரு போர்வையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தானான திருமேனி இராமானுஜரின்
அருகில் ஒரு விளக்காய் இருக்கமாட்டேனா ! ? !
 
 
 பஞ்ச ஆயுதங்களின் அவதாரமான,
நம் இராமானுஜரோடு ஏதேனும் ஆவேனே ! ! !


ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
 
 
அடியேன் இவற்றில் ஏதேனும் ஆக 
இராமானுஜரின் திருநாமங்களை
ஜபிக்கும் பாகவதர்கள் அடியேனை ஆசிர்வதியுங்கள் ! ! !


அடியேன் இவற்றில் ஒன்றேனும் ஆக
108 திவ்ய தேச எம்பெருமான்கள்
தயை கூர்ந்து அனுக்ரஹியுங்கள் ! ! !


அடியேன் இந்தப் பாக்கியத்தை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் ஆசார்யர்கள்
வெறிதே க்ருபை செய்யுங்கள் ! ! !


அடியேன் இந்த நிலையை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்கள்
வேகமாய் எனக்கு பக்குவம் தாருங்கள் ! ! !


இராமானுஜா . . . இராமானுஜா . . . இராமானுஜா....
\இந்த ஜந்துவையும் உங்களின்
சொத்தாய் வைத்துக்கொள்ளுங்கள் ! ! !


இந்த 500வது ஆனந்தவேதம் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இதுவரை எழுதியதும் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இனி எழுதுவதெல்லாம் உம் ஒருவருக்கே சமர்ப்பணம் ! ! !


அடியேன் இராமானுஜ தாசன் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP