ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஏனடா ஜொலிக்கிறாய் ? ! ?

ராதேக்ருஷ்ணா





ஏனடா ஜொலிக்கிறாய் ? ! ?

என் பத்மநாபா ஏனடா ஜொலிக்கிறாய் ! ? !


நீ எப்பொழுதும் அழகன் தான் . . .
ஆனாலும் இப்பொழுது நீ
இன்னும் அழகாக இருக்கிறாய் ! ! !


திருவனந்தபுரம் வரும்பொழுதெல்லாம்
உன்னை நான் பார்க்கிறேன் . . .
உன் அழகுக்கு ஒரு குறையில்லை . . .
ஆனாலும் இந்த தடவை
உன் அழகு என்னை என்னவோ
செய்கிறதடா என் அழகா  . . .
இப்போது இன்னும் கருமை
கூடியிருக்கிறது உன் திருமேனியில் !


உன் கன்னங்கள் இன்னும்
அதிகமாய் பளபளக்கிறது இப்போது !


உன் திருப்பவள வாய் அதரங்கள்
இன்னும் ஜோராய் தெரிகிறது !


உன் திருமூக்கின் கூர்மையும்
வனப்பும் இன்னும் அதிகமாயிருக்கிறது !


உன் திருமுகம் முன்னை விட
இன்னும் அதிகமாய் ஜொலிக்கிறது !


உன் திருக்கழுத்தில் மடிப்புகள்
வெகு ஜோராய் களை கட்டுகிறது !


உன் திருமார்பின் அழகு இன்னும்
நேர்த்தியாய் தெரிகிறது !


உன் ஸ்ரீதேவியின் இருப்பிடமான
வக்ஷஸ்தலம் அற்புதமாய் மின்னுகிறது !


உன் திருநாபியின் சுழி இன்னும்
தெளிவாய் இப்போது தெரிகிறது !


உன் திருத்தொடைகளை பீதாம்பரம்
மறைத்தாலும் அதன் அழகு கிறங்கடிக்கிறது !


உன் முழங்கால்கள் இன்னும்
நளினமாய் அழகாய் தெரிகிறது !


உன் திருவடியில் நகக்கண்கள்
நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது !


உன் திருக்கைகளின் காந்தி
இப்போது மிகவும் கூடியிருக்கிறது !


என்னவென்று சொல்ல ? ! ! ?


ஸ்ரீதேவியும், பூதேவியும் உன்னோடு
சேர்ந்து இன்னும் கருப்பாகிவிட்டார்கள் . . .


உன் நாபியில் இருப்பதால் சதுர்முக
ப்ரம்மாவும் ஆனந்தமாய் ஜொலிக்கிறார் ! ! !


உன் வலது கையின் கீழே சுகமாய் வசிப்பதால்
சிவபெருமானும் நிம்மதியாய் பரிமளிக்கிறார் ! ! !


 உன் அருகில் இருப்பதால் இந்திரன் உள்ளிட்ட
தேவர் குழாமெல்லாம் தேஜஸோடு மின்னுகின்றனர் ! ! !


சொல்ல மறந்தேனே . . .
உன் திருமுடி இன்னும் கருப்பாகிவிட்டது. . .
அதி ஜோர் அது தான் . . .


போடா பத்மநாபா . . .
பலருக்கும் உன்னுடைய ஒன்றரை லக்ஷம் கோடி
சொத்து தான் பெரியதாய் தெரிகிறது . . .


உன் அழகின் அருமை,
உன் கருணையின் பெருமை,
ஒன்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை . . .


கொஞ்சம் அவர்களுக்கு உன் அழகை
உள்ளபடிக் காட்டி மயக்கிவிடேன் . . .


அப்போது என்னைப் போல் புலம்ப,
என் விரஹத்தின் தாபத்தை உணர,
என் மனதின் ப்ரேமையை பேச,
என்னோடு உன்னைப் பற்றி மட்டுமே
பேசும் ஒரு கோபி கிடைப்பாளல்லவா . . .


உன்னைப் பார்ப்பதே சுகமடா பத்மநாபா . . .
உன்னை நினைப்பதே நிம்மதியடா பத்மநாபா . . .


உனக்குத் தெரியுமா ? ! ?
உன் அழகைப் பார்த்து உனக்கு புதிதாய்
நிறைய கோபிகைகள் கிடைத்திருக்கிறார்கள் ! ! !


எந்தக் கோபியின் ஆசைக்காய் நீ எப்படி ஜொலிக்கிறாய் ? ! ?

எந்த கோபியை மயக்க நீ எப்படி ஜொலிக்கிறாய் ! ? !


லக்ஷ தீபத்தின் ஒளியில்
எப்படியெல்லாம் ஜொலிப்பாய் ? ! ?


சரத் கால சந்திர வெளிச்சத்தில்,
எத்தனை கோபியரோடு நீ ராசம் 
ஆடப்போகிறாய் ? ! ! ?


எத்தனை பேரோடு வேண்டுமானாலும் ஆடு ! ! !
ஆனால் இந்த கோபாலவ்ல்லி கோபியையும்
உன்னோடு சேர்த்துக்கொள் . . .


இது இந்த தாசியின் விண்ணப்பம் . . .

ஒருவேளை நீ என்னை உன் ராசத்தில்
சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் கவலையில்லை . . .

நீ சுகமாயிருந்தால் அதுவே போதும் . . .


உன் முகத்தின் காந்தியில்
நான் அதை தெரிந்துகொண்டு,
அதையே அனுபவித்துக்கொண்டு
இந்த பூவுலகில் வாழ்வேன் . . .


உன் சுகமே என் சுகம் . . .
வேறு எது இங்கே சுகம் . .?


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP