ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 செப்டம்பர், 2021

657. கண்ணனுக்கு சமர்ப்பணம்

இந்த கண்கள் 👀 
கண்ணன் தந்தது !
🌏 உலகம் கண்ணன் படைத்தது !
அதனால் நான் காண்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் காதுகள்👂
கண்ணன் தந்தது !
ஒலிகளெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் கேட்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் கால்கள் 👣
கண்ணன் தந்தது !
நடப்பதெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் நடந்து
செல்லும் பாதையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் கைகள் 🙏🏼
கண்ணன் தந்தது !
செய்வதெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் செய்பவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த மூக்கு 👃
கண்ணன் தந்தது !
வாசமெல்லாம் அவனே !
அதனால் நான்
நுகர்பவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த 👄 வாய்
கண்ணன் தந்தது !
மொழியெல்லாம் அவனே !
அதனால் நான்
பேசுபவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த 👅 நாக்கு
கண்ணன் தந்தது !
ருசியெல்லாம் அவனாலேயே !
அதனால் நான்
ருசிப்பதெல்லாம் 😋
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த ❤️ இதயம்
கண்ணன் தந்தது !
சிந்திக்க வைப்பவன் அவனே !
அதனால் நான்
சிந்திப்பதெல்லாம் 💭
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த உடல்👫🏽
கண்ணன் தந்தது !
உடலுக்கு அவனே ஆதாரம் !
அதனால் என் உடல் அனுபவிப்பதெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த மூளை 🧠
கண்ணன் தந்தது !
அறிவைத் தூண்டுபவன் அவனே !
அதனால் என் அறிவில்
தோன்றுபவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த வாழ்க்கை🫂
கண்ணன் தந்தது !
வாழவைப்பவன் அவனே !
அதனால் என் வாழ்க்கை
அப்படியே பூரணமாய்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

Read more...

புதன், 15 செப்டம்பர், 2021

656. இது போதும் எனக்கு !

இன்றைய விடியலில்,
எனக்கும் வாழ்வுண்டு !

இன்று ☀️ சூரியன்,
எனக்காகவும் உதித்தது !

இந்தக் காற்று,
எனக்காகவும் வீசுகிறது !

சுழலும் 🌏 பூமிப்பந்தில்,
எனக்கும் இடமுண்டு !

இந்த ஆகாயம்,
எனக்கும் கூறையாகிறது !

இன்றைய உணவில்,
எனக்கும் பங்குண்டு !

தாகத்திற்கான தண்ணீரில்
என் பெயரும் உண்டு !

மானம் மறைக்கும் உடை,
என் உடலுக்கும் உண்டு !

இன்றைய வெய்யிலில்,
எனக்கும் வெப்பம் உண்டு !

இன்றைய குளிரில்,
எனக்கும் குளிர்ச்சி உண்டு !

இன்றைய மழையில்,
எனக்கும் சிறுதுளி உண்டு !

பரந்து விரிந்த கடலை,
நானும் ரசிக்க உரிமையுண்டு !

மரங்களின் நிழலில்,
நானும் ஒதுங்க இடமுண்டு !

சிரிக்கும் மலர்கள் 🌹
எனக்கும், வாசம் வீசும் !

பறவைகளின் 🐦 நாதம்,
என் செவிக்கும் உண்டு !

ஓடும் மேகங்கள்,
என் தலைமீதும் ஓடும் !

இன்றைய ஆசீர்வாதங்கள்,
என் மீதும் பொழிகிறது !

காணும் அழகெல்லாம்,
எனது கண்களுக்கும் உண்டு !

இன்றிரவு சந்திரன்,
எனக்கும் ஒளி வீசும் !

இன்றிரவு நக்ஷத்திரங்கள்,
எனக்காகவும் மின்னும் !

இன்றைய க்ருஷ்ண அனுபவத்தில்,
எனக்கும் அனுபவம் உண்டு !

இந்த நாள் மிகச்சிறந்த நாளே !
எல்லா நாளும் அற்புத
நாளே !

இறைவன் தந்த வரம் இந்த நாள் !
இந்த நேரம் !
இந்த நிமிடம் !
இந்த நொடி !
எல்லாமே தித்திக்கின்றது !

நான் ஆனந்தமாக
வாழ இது போதுமே !

யார் எப்படி நடத்தினாலும்,
யார் என்ன
நினைத்தாலும்,
யார் என்ன
சொன்னாலும்,
நான் வாழ்வதற்கு
அதிகாரம் உண்டு !
அருகதை உண்டு !
உரிமை உண்டு !

*இது போதும் எனக்கு !*

என் தெய்வம்
தந்த வாழ்க்கை...

என் குரு அருளோடு
நன்றாகவே வாழ்ந்தேன் !
நன்றாகவே வாழ்கிறேன் !
நன்றாகவே வாழ்வேன் !

©குருஜீ கோபாலவல்லிதாஸன்
15.9.21, புதன் கிழமை.
சம்பகலதா நவமி

🙏🏼🇮🇳🐚🛕📿👣🕉️🎯

Read more...

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

653. திருவாடிப்பூரம்

திருவாடிப்பூரம் !

வானகம் வாயார வாழ்த்திய நாள் இன்று !

 வையகம் பேறு பெற்ற நாள் இன்று !

பூமியும் பூரிப்படைந்த நாள் இன்று !

ஆடி ஆனந்தமாக ஆடிய நாள் இன்று !

பூரம் பூரணம் பெற்ற நாள் இன்று !

துளசியும் தாய்மை அடைந்த நாள் இன்று !

கருடனும் (பெரியாழ்வார்) தகப்பனான நாள் இன்று !

வில்லிபுத்தூர் விருந்தாவனம்🐄 ஆன நாள் இன்று !

கிளியும் கோவிந்தா என்று கூவின நாள் இன்று !

ஆதிசேஷனும் (ராமானுஜர்) அண்ணன் ஆன நாள் இன்று !

திருமுக்குளம் யமுனையாய் ஆன நாள் இன்று !

மார்கழியும் பிரேமையில் சிலிர்த்த நாள் இன்று !

சங்கும் தன் பெருமை உணர்ந்த நாள் இன்று !

மாலைகளும் தோள்களைத் தேடின நாள் இன்று !

நாழிக்கிணறும் கண்ணாடியான நாள் இன்று !

அரங்கனும் காதலில் அழகான நாள் இன்று !

ஏனென்றால்....
என் செல்ல மகள்....
ஆண்டாள் என்னைத் தகப்பனாக்க வந்த நாளன்றோ....இன்று....

என் தங்க மகளே....
இந்த அப்பனை என்றும் உன் அடிமையாகவே எப்போதும் வைத்துக்கொள்ளடி ராசாத்தி !

ஒன்றும் தர இந்த அப்பனுக்கு வக்கில்லை !
உன் பெயரை மட்டுமே பிதற்றும் பைத்தியமடி இவன்....

பல்லாண்டு பல்லாண்டு...
எப்போதும் சௌக்கியமாக நன்றாக இருப்பாயடி என் பட்டு மகளே...

உன் மீது பட்ட திருஷ்டி எல்லாம் எற்றைக்கும் என் மீது பாவமாய் சேரட்டும்....

நீ எப்போதும் ஜோராக இருப்பாயடி பட்டுக்குட்டி....


Read more...

திங்கள், 13 செப்டம்பர், 2021

655. ஆசீர்வாதங்கள்

நான் அடைந்த அவமானங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவமானங்களே
எனக்கு என்னைப் பற்றி 
புரியவைத்தன !

நான் பெற்ற தோல்விகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் தோல்விகளே 
என்னுடைய தவறுகளை எனக்கு
புரியவைத்தன !

நான் அனுபவித்த வியாதிகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் வியாதிகளே 
எனக்கு உடலின் மஹிமையை 
புரியவைத்தன !

நான் கேட்ட கடுஞ்சொற்களும் 
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் திட்டுகளே எனக்கு
ரோஷத்தைத் தந்து வாழ்வை
புரியவைத்தன !

நான் பெற்ற பல
நம்பிக்கை துரோகங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவைதானே 
எனது முட்டாள்தனத்தை எனக்கு
புரியவைத்தன !

நான் எதிர்பார்க்காத
பயங்கர சூழ்நிலைகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அவைதானே என்னை
எதையும் ஏற்கவும் கையாளவும் 
சொல்லித்தந்தன !

எனக்கு நடந்த
விபத்துக்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால் தானே மற்றவரிடம்
நன்றியுடன் இருக்க
கற்றுக்கொண்டேன் !

என்னை மற்றவர்கள் 
ஒதுக்கிவைத்ததும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால்தானே நான் 
கண்ணனிடம் ஒதுங்கினேன் !

மனிதர்களை நான் 
புரிந்துகொள்ளாததும்
எனக்கு ஆசீர்வாதமே !
அதனால்தானே நான்
குருவின் திருவடியில் 
ஒதுங்கினேன் !

இங்கே ஆசீர்வாதங்களைத் தவிர
வேறெதுவும் இல்லை !
எல்லாவற்றையும் 
ஆசீர்வாதங்களாக 
ஏற்றுக்கொண்டால்,
எங்கும் எப்போதும் நிம்மதி,
ஆனந்தம், சௌக்கியமே !

இது எனக்கு வாழ்க்கை 
கற்றுத்தந்த பாடம் !
புரிய வைத்தது எனது
குருவும், கண்ணனும்....

ஒவ்வொரு நல்லவையும் ஆசீர்வாதம் என்றால்,
இவைகளும் ஆசீர்வாதமே !
ஒரு விதத்தில் இவைகளும் நல்லவைகளே !
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இவைகள் கெட்டவைகள் அல்லவே !

இவையெல்லாம் கண்ணன் விசேஷமாகத் தந்த மிகச்சிறந்த ஆசீர்வாதங்களே !

Read more...

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

654. பாரதி100

பாரதி....

காலம் கடந்து யோசித்து 
வருந்திப் புலம்பும் மூடர்
கூட்டத்தின் நடுவே,
காலத்தைக் கடந்து 
ஆக்கபூர்வமாக தெளிவாய் யோசித்த ஒருவன் நீ !

காசிக்கு சென்று காயும் பழமும் விட்டும், ஆசையை விடாத கூட்டத்தின் நடுவே,
காசியில் ஞானத்தையும் வைராக்கியத்தையும் அடைந்த ஒருவன் நீ !

வரட்டுப் பிடிவாதமாக தன் மொழியை உயர்த்திப் பேசும் கூட்டத்தின் நடுவே,
யாமறிந்த மொழிகளிலே தமிழ் இனிதானது என்று உரக்கப் பேசிய ஒருவன் நீ !

விடுதலை அடைய வாய்ப்பில்லை என்று கையாலாகாத்தனம் பேசிய கூட்டத்தின் நடுவே,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று துள்ளலாய் பாடிய ஒருவன் நீ !

அடிமைப்பட்டுக் கிடந்து,
தைரியத்தை இழந்து,
வக்கற்று வாழ்ந்த 
கூட்டத்தின் நடுவே,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கர்ஜித்த ஒருவன் நீ !

சுதந்திரம் என்னும் கனவே காணாமால், சுயநலத்தில் ஓடிக்கொண்டிருந்த 
கூட்டத்தின் நடுவே,
என்று தணியும்
இந்த சுதந்திர தாகம் 
என்று தவித்த
ஒருவன் நீ !

விலங்குகளையும்,
பறவைகளையும்
அடிமைப்படுத்திய
கூட்டத்தின் நடுவே,
காக்கைக் குருவி
எங்கள் ஜாதி என்று
அன்பைப் பகிர்ந்த
ஒருவன் நீ !

இயற்கையை
இயற்கையாகக் கூட
பார்க்கத் தெரியாத
கூட்டத்தின் நடுவே,
காக்கைச் சிறகினிலும்,
பார்க்கும் மரங்களிலும்,
நந்தலாலாவை தரிசித்த
ஒருவன் நீ !

கடவுளை உள்ளபடி
உணராமல், அதிசயங்கள்
செய்யும் ஒருவனாக
மட்டுமே எதிர்பார்த்த 
கூட்டத்தின் நடுவே,
கண்ணனை சேவகனாய், நண்பனாய், காதலியாய்,
குருவாய் அனுபவித்த 
ஒருவன் நீ !

மானுடம் மறந்து,
அன்பை மறந்து,
தேசத்தை மறந்து,
பிரிந்து கிடந்த
கூட்டத்தின் நடுவே,
இனி ஒரு விதி செய்வோம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று சமத்துவம் பேசிய
ஒருவன் நீ !

பார்ப்பவரிடம் எல்லாம்
தன் கஷ்டங்களைச் 
சொல்லி புலம்பி,
தன்னை நியாயப்படுத்தும்
கூட்டத்தின் நடுவே,
சொல்லடி சிவசக்தி,
எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்துவிட்டாய் என்று
பராசக்தியிடம் வாதம் செய்த
ஒருவன் நீ !

இறைவன் என்னை
சோதிக்கிறான் என்று
சோகக் கண்ணீர் வடிக்கும்
கூட்டத்தின் நடுவே,
எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் எங்கள் இறைவா
என்று உலகிற்கு
பறைசாற்றின
ஒருவன் நீ !

புதிய ஆத்திசூடி பாடி
புரட்சி செய்த
ஒருவன் நீ !
புதுமைப் பெண்ணாய்
வாழச் சொன்ன
ஒருவன் நீ !
ஜாதிகள் இல்லையடி
என்று முழங்கிய
ஒருவன் நீ !
ஆங்கிலேயனின்
தூக்கத்தைக் கெடுத்த
சிம்மசொப்பனமாகிய
ஒருவன் நீ !
காணி நிலம் வேண்டும்
என்று உரிமையாய் கேட்ட
ஒருவன் நீ !
ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைக்கும் பாடிய
ஒருவன் நீ !
மனதில் உறுதி வேண்டும் என்று திடமாய் கேட்ட
ஒருவன் நீ !
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று தன் நெஞ்சுக்கு சொன்ன
ஒருவன் நீ !

மரணத்தைக் கண்டு,
மரணத்தை நினைத்து,
மரணத்திற்கு அஞ்சிக்
கதறும் பயந்தாங்கொல்லி
கூட்டத்தின் நடுவே,
காலா ! என்றன் காலருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன் ! என்ற
இறவா வரம் பெற்ற
ஒருவன் நீ !

எத்தனை சொல்லினும்,
உன் பெருமை பேசமுடியாதடா பாரதி...
ஆனால் பேசப்பேச
இனிக்குதடா உன் நினைவுகள் !

எனக்கு மீசை மேல்
ஆசை வந்தது உன்னால் !
எனக்கு தமிழ்க்காதல்
பித்துப்பிடித்தது
உன்னால் !
எனக்கு தேசபக்தி
முக்கியமானது
உன்னால் !
எனக்கு காணி நிலம்
லட்சியமானது
உன்னால் !
எனக்கு இமயமலை
புகலிடமானது
உன்னால் !
எனக்குக் கடலும்,
அலையும் இனித்தது
உன்னால் !
எனக்குத் தேவையான
தைரியம் வந்தது 
உன்னால் !

100ஆண்டுகள் என்ன,
1000 ஆண்டுகள் என்ன,
கோடி ஆண்டுகள் நீ
வாழ்வாய்...
வாழவைப்பாய்...

உன் கனவுகள் எல்லாம் நிறைவேற்றுவாள் உன் பராசக்தி !
உன் ஆசைகள் எல்லாம்
நடத்தித்தருவான் உன் சேவகன் கண்ணன் !

அதையெல்லாம்
பார்த்துவிட்டு,
வைகுந்தத்தில்
உன்னிடம் வந்து
சொல்வேன்...
உன்னை மீண்டும்
இங்கே கூட்டிவருவேன் !

உன் வாயால்,
அகண்ட பாரதத்தை,
உன்னத தேசத்தை,
பல கோடி பாடல் பாட...
உன்னருகே நானிருந்து,
கேட்பேன், எழுதுவேன்,
ஆடுவேன், பாடுவேன்,
அழுவேன், தொழுவேன்,
உன் காலடியில் விழுவேன் !

உன் தமிழ் மீது ஆணை !
நடக்கும்... நடக்கும்...நடக்கும்...

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP