ஸ்ரீ அனந்தபத்மநாபரின் ஆராட்டு!
ராதேக்ருஷ்ணா
நாம் உலகில் வந்த காரணம்,
பகவானைப் புரிந்துகொண்டு,
நம்முடைய பாபங்களைத் தொலைத்து,
புத்தியை நல்வழிப்படுத்தவே !
புத்தி சாதாரணமாகவே
கெட்ட விஷயங்களில் தானாக
ஈடுபட்டுவிடும் !
புத்தி கெட்ட வழியில் பயணப்பட்டால்
வாழ்வில் நிரந்தரமான பயம் உண்டு !
புத்தியை நல்லவழியில்
செயல்படுத்தினால்தான் வாழ்வில்
எப்பொழுதும் நிம்மதியாக வாழமுடியும் !
புத்தியை நாமாக நல்ல வழியில்
செயல்படுத்துவது என்பது
மிகவும் கடினமான காரியம் !
புத்தியை கடிவாளம் போட்டு
அடக்கக்கூடிய பலம் பகவானுக்குத்தான்
பூரணமாக இருக்கிறது !
அதற்காகவே பகவான் கோயில்களில்
அர்ச்சாவதார மூர்த்தியாக,
எழுந்தருளியிருக்கிறான் !
அர்ச்சாவதார மூர்த்தியாக கோயில்களில்
இருந்தாலும்,பக்தர்கள் சுகமாக அனுபவிக்க,
சுலபமான உற்சவமூர்த்தியானான் !
உற்சவமூர்த்தியான காரணமே பக்தர்கள்,
தன்னை சுதந்திரமாக அனுபவித்துத்
திளைக்கவேண்டுமென்பதற்காகத்தான் !
உலகோரை உய்விக்கவே,
உற்சவமூர்த்தியாய் உற்சவங்களை,எம்பெருமான்
அனுபவிக்கிறான் !
ஒவ்வொரு கோயிலிலும் உற்சவம் உண்டு !
ஒவ்வொரு உற்சவத்திற்கும் மஹிமை உண்டு !
ஒவ்வொரு மஹிமையும் மனிதரைத் திருத்தும் !
பாரதபூமியில் கோயில்களுக்கும் குறைவில்லை !
கோயில்களில் உற்சவங்களுக்கும் குறைவில்லை !
உற்சவங்களில் பக்திக்கும் குறைவில்லை !
பக்தியில் ஆனந்தத்திற்கும் குறைவில்லை !
எத்தனை கோயில்கள் இருந்தாலும்,
ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமானமும்,
மரியாதையும்,அன்பும்,ஆசையும்,
ஏதோ ஒரு கோயிலிலும்,அந்தக் கோயிலின்
தெய்வத்திடமும் விசேஷமான ப்ரீதியிருக்கும் !
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு பூரி ஜகந்நாதனிடம்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீமதி ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கராஜனிடம்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீ கனகதாஸருக்கு உடுப்பி க்ருஷ்ணனிடம்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீ பூந்தானத்திற்கு குருவாயூரப்பனிடம்தான்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீ சந்த் துகாராமிற்கு பாண்டுரங்கனிடம்தான்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீ ராமானுஜருக்கு காஞ்சி வரதராஜனிடம்
விசேஷ ப்ரீதி !
ஸ்ரீ அன்னமாச்சார்யாருக்கு திருமலையப்பனிடம்
விசேஷ ப்ரீதி !
சொல்லும் தகுதியில்லை !
இருந்தாலும் ஆசை விடவில்லை !
இந்த ராமானுஜரின் குழந்தை
கோபாலவல்லிதாஸனுக்கும்
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமியிடம்
ஒரு விசேஷே ப்ரீதி !
ஸ்ரீ அனந்தபத்மநாபனின்
திருவனந்தபுரமே பூலோக வைகுந்தம் !
அப்படித்தான் மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
தன்னுடைய ஸ்லோகங்களில் சொல்கிறார்!
ஸ்வாமி நம்மாழ்வாரும் "இன்று போய்
புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா"
என்று "திருவனந்தபுரத்தில் இன்று நுழைந்தால்
என்றுமே தொல்லையில்லை" என்று
திருவாய்மொழியில் சொல்கிறார்!
அடியேனுக்கும் பூலோக வைகுந்தமும்,
தொல்லை நீக்கும் தெய்வமும்,
திருவனந்தபுர செல்வன்,
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியே !
தினமும் உடலை குளிப்பாட்டுகிறோம் !
ஆனால் பாபம் ஒன்றும் தொலைவதாய்
தெரிவதில்லை !
முன் ஜன்ம கர்ம வினைகள் நம்மை
நீங்கினதாய் தெரிவதில்லை !
ஆனால் அதே குளியலை தெய்வத்தோடு
சேர்ந்து குளித்தால்,பாபமும்,கர்ம வினையும்,
மனதின் அழுக்குகளும் நீங்கிவிடும் !
அதற்க்காகத்தான் அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்,
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியாக
வருடத்திற்கு இரு முறை,
பக்த ஜனங்களோடு
தீர்த்தவாரி கண்டருளுகின்றான் !
அந்த தீர்த்தவாரியைத்தான்
திரு அனந்தபுரியில்
"ஆராட்டு" என்று கொண்டாடுகின்றனர் !
சரி இனி குள்ளக்குளிர நீராட
பத்மநாபனோடு புறப்படுவோமா !
ஸ்ரீ அனந்தபத்மநாபன்
வேட்டைக்குச் சென்றதைப்போலே
ஆராட்டிற்க்கும் பச்சைவண்ண
ஆடை உடுத்தி பவனி வந்தான் !
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியோடு
சங்குமுகம் கடலில் ஆராட்டிற்க்காக
அனந்த புரி ஈஸ்வரன்
அழகாக சப்பரத்தில் பவனி வந்தான் !
நான்கு திருக்கைகளில்,
சங்கு,சக்கரம்,கதை,தாமரை ஏந்தி,
காமனுக்கும் உடல் தந்த
மணிவண்ணன் பவனி வந்தான் !
தங்கக் கருடாழ்வாரின் மேல்,
சர்வ அலங்காரத்தோடு மல்லிகை,
அரளி,கொடி சம்பங்கி,ரோஜா,
ஜாதிமல்லி,தாமரை,இருவாட்சி,
ஜவ்வந்தி மலர்களோடு,
துளசி மாலை அணிந்தபடி,
சர்வலோகத்திற்க்கும் ப்ரபுவானவன்
பவனி வந்தான் !
கிழக்கு நடையில் காத்திருந்த
பக்தர்களின் பரவச ஒலியில்,
தக தகவென ஜொலிக்கும் மின்னொளியில்,
மாதர்களில் குலவை சப்தத்தில்,
ஸ்ரீ நரசிம்மரோடு அற்புதமாக,
கற்பூர ஆரத்தியை அனுபவித்து,
ப்ரதக்ஷிணமாக ஸ்ரீவேலி ப்ரகாரத்தில்
புராணபுருஷன் பவனி வந்தான் !
அழுக்கு உடம்பு,எச்சில் வாய்,
மல மூத்திர மாமிச பிண்டங்கள்,
அகம்பாவ,மமகார மூடர்கள்,
ஆனாலும் பத்மநாபனை நம்புபவர்கள்
முன்னே செல்ல,எங்கள்
கருணா சாகரன் பத்மநாபன்
ஆடி ஆடி பவனி வந்தான் !
மேற்கு நடையில் யுவராஜன் க்ருஷ்ணன்,
அழகாக பார்த்தசாரதியாக கையில் சாட்டையோடு,
விளையாட்டாய் வந்து சேர,
பக்தர்களும் "க்ருஷ்ண க்ருஷ்ணா" என்று
தன்னை மறந்து கூச்சலிட,
லக்ஷ்மி நரசிம்மருக்கு வலப்பக்கத்தைத் தந்தவன்,
ராதிகா ரமணனுக்கு இடப்பக்கத்தைத் தந்து,
அங்கும் ஒரு ஆரத்தியை அனுபவித்து,
ஆனந்தமாய் ஓடி பவனி வந்தான் !
கஜராணி ப்ரியதர்ஷினியும் காலில் சலங்கைகட்டி,
கழுத்தில் பட்டத்தின் பதக்கத்தை மாட்டிக்கொண்டு,
முத்துச்சட்டையை முகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,
ஆடலரசனான அனந்த பத்ம நாபனுக்கு முன்னே,
குழந்தைகளோடு தானும் பரவசத்தில் துள்ளிக்கொண்டு,
பறை சப்தத்தோடு அசைந்து செல்ல,
எங்கள் அழகுராஜன் அனந்தபத்மநாபன் பவனி வந்தான் !
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின்
உள்ளும்,புறமும் காத்திருக்க,
பலர் வழி நெடுகிலும் காத்திருக்க,
ஸ்ரீ வராஹமூர்த்தியும் வந்து தவமிருக்க,
ஸ்ரீ அனந்தபத்மநாபன் கொஞ்சம்
எல்லோரையும் காக்கவைப்பதில்
ப்ரியமேற்பட,அனைவரும் அவன் அன்பில்
நனைந்து,நேரத்தை மறந்து காத்திருந்தோம் !
பத்மநாபனின் தாஸர் வரும்வரையில்
ஸ்ரீவேலி ப்ரகாரத்தில் 3 ப்ரதக்ஷிணங்கள்
செய்த சர்வ லோக ரக்ஷகன்,
பத்மநாபதாஸர் பாக்கியவான்
ஸ்ரீ உத்தராடம் திருநாள் வரவும்,
அவரோடு மேற்கு நடைக்கு வந்து,
அனைவரும் வழி மேல் விழி வைத்து
ஏங்கி இளைத்துக் காத்திருக்க,
சர்வ ஜீவர்களுக்கும் அந்தர்மியான,
ஸ்ரீ அனந்தபத்மநாபன் ஆராட்டிற்க்காக
தன் கோயிலை விட்டு வெளியில் வந்தான் !
ஸ்ரீ அனந்த பத்ம நாபனோடு,
ஸ்ரீ நரசிம்மர்,ஸ்ரீ க்ருஷ்ணன்,ஸ்ரீ வராஹமூர்த்தி,
ஆகியோரும் கோயிலைவிட்டு வெளியில் வர,
பத்மநாபதாஸரின் வம்சத்தவரும் தங்கள்
பாரம்பரிய உடையில்,தலையில் தொப்பியுடனும்,
கைகளில் கத்தியும்,தோள்களில் தொங்கும்
கேடயத்தோடும் வரிசையில் முன்னே காத்திருக்க,
அரசாங்க காவலர்களும் துப்பாக்கியை
உயர்த்திப்பிடித்து மரியாதை செய்ய,
சர்வலோக சரண்யன் வெளியில் வந்தான் !
கடற்கரையின் வெள்ளை நுண் மணலை
ராஜாதி ராஜன் வெளி வரும் மேற்குவாயிலில்
2 வயது அழகு செல்லம்,சமத்துக்குழந்தை
ஸ்ரீ அனந்த பத்ம நாபனின் ம்ருதுவான
பாதங்கள் நோகாதிருக்க அழகாக இறைத்து,
வாயிலின் மேற்புறமும்,இரு புறமும்,
வண்ணத்தோரணங்களாலும்,பூக்களாலும்
அலங்கரித்திருக்க,கலியுகத்தின் கோரத்தில்,
மாயையில் பிடியில் மாட்டிக்கொண்டுப்
பரிதவிக்கும் ஜனங்கள் காத்திருக்க,
அவர்களின் துக்கத்தை நாசம் செய்து,
"பயம் வேண்டாம்!நான் இருக்கிறேன்!"
என்று சொல்லிக்கொண்டு எல்லோருக்கும்
ஆசிர்வாதம் செய்ய கருணைக்கடல்
வெளியில் வந்து நின்றான் !
பத்ம நாப தாஸர் பாக்கியவான்
ஸ்ரீமான் உத்திராடம் திருநாள்,
பரம்பரை வாளை கையில் ஏந்தி,
முன்னே செல்ல,ராஜ வம்சத்தினரும்,
மற்றவரும் உடன் செல்ல,
கைங்கர்யபரர்கள் எல்லோரையும்
நெறிபடுத்தி கூட்டத்தை விலக்கி,
எல்லோருக்கும் மோக்ஷத்திற்கு வழிகாட்டி
அழைத்துச் செல்லும் ஸ்ரீ அனந்த பத்ம நாபனுக்கே,
வழி ஏற்படுத்திக்கொடுக்க,
ஆடி ஆடி,அசைந்து,மெதுவாக,
குதூகலத்தோடு,ஸ்ரீ நரசிம்மரின் தோளை
சில சமயம் உரசிக்கொண்டு,
ஏகாதசியில் மோஹினி வேஷமிடும் திருடனான
ராதிகா ரமணன் ஸ்ரீ க்ருஷ்ணனின் தோள்களில்
ஒரு கையைப் போட்டுக்கொண்டு,
தேவாதி தேவன்,பரந்தாமன்
ஸ்ரீ அனந்த பத்ம நாபன் வீதிகளில் சென்றான் !
எது நடந்தாலும் வேடிக்கைபார்க்கும்
சிலரும்,கோயில் பக்கமே போகும் வழக்கமில்லாத
சோம்பேறிகளும்,பணத்தை மட்டுமே கணக்குப்
பார்த்துக்கொண்டிருக்கும் வியாபாரிகளும்,
கோயிலுக்கு வரமுடியாத நிலையிலிருப்பவரும்,
கண் பெற்ற ஒரு காரணத்தினால்,
பூமியில்,பாரத தேசத்தில்,திருவனந்தபுரத்தில்,
அன்று இருக்கும் பாக்கியம் அடைந்ததால்,
சாக்ஷாத் மன்மத மன்மதனான,
புராண புருஷன் ஸ்ரீ அனந்தபத்மநாபனின்
ராஜ பவனியைக் கண்டார்கள் !
பல பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலுக்கே
வரும் சுந்தரவதனன் ஸ்ரீ அனந்த பத்ம நாபனை
வரவேற்க,வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்திருக்க,
அதையும் ஏற்றுக்கொண்ட என் சௌலப்யமூர்த்தி,
காவலர்களும் வாத்தியம் இசைக்க,
ஆங்காங்கே ஓடி,பக்தர்களையும் ஓடவைத்து,
சில இடங்களில் திடீரென்று நின்று,
பக்தர்களையும் இளைப்பாற வைத்து,
மாயாதிபதி விளையாட்டாக வீதியாற வந்தான் !
பலரும் தன் மனதில் பத்மநாபனை படம்பிடிக்க,
சிலர் விஞ்ஞான உபகரணங்களால் படம்பிடிக்க,
யார் பிடிக்கும் அடங்காத,பிடியில் சிக்காத,
யோகிகளும் ஆயிரமாயிரம் வருடங்கள் தவமிருந்தும்,
கண்ணாலும் காண முடியாத வேதப்பொருள்,
எல்லோருக்கும் கண்ணிலும்,மனதிலும்,உபகரணங்களிலும்,
அழகாக,சுலபமாக பிடிபட்டு பவனி வந்தான் !
கடவுளுக்கு உருவம் இல்லை என்று
திடமாக நம்புபவர்கள் கூட எங்கள்
திருவனந்தபுரத்து அழகனின் வீதி உலாவை ரசிக்க,
தலையில் தொப்பியோடும்,குழந்தைகளோடும்
தங்களின் பள்ளிவாசல் முன் காத்திருந்து,
ராஜாதிராஜனுக்கு தலை கவிழ்த்து மரியாதை செய்ய,
என் ப்ரபு அவர்களையும் தன் குழந்தைகளாக
ஏற்றுக்கொண்டு,அனுக்ரஹம் செய்தான் !
உருவம் இல்லாத தெய்வத்தை மட்டுமே
ப்ரார்த்தனை செய்யும் பெண்களும்,
தங்கள் வீட்டு வேலைகளையும் விட்டு,
வீட்டை விட்டு வெளியில் வந்து தவமிருக்க,
அந்த பீவி நாச்சியார்களின் ஆறு மாத தாபம் தீர,
ப்ரும்மதேவனின் தகப்பன்,அவர்கள் முகம் சிவக்க,
அழகாக நடை பயின்று வந்தான் !
மேற்கத்திய நாகரீக மோகத்தில் மயங்கிக்கிடக்கும்
இள வட்டங்களும்,எங்கள் பத்மநாபனின்
பகட்டையும்,அழகையும் பார்த்து,
தங்களின் கர்வம் அழிந்ததை உணர்ந்து,
அவன் திருவடிகளில் சரணாகதி செய்ய,
காமனை மயக்கும் புவனசுந்தரன் பவனி வந்தான் !
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் மயங்கி அதையே
கொண்டாடும் மாயையில் மயங்கிய அதம ஜீவர்களின்
வானூர்திகளையும் நிறுத்தி,தன் வழியில்
தானே செல்லும் சிங்கம் போலே,
எங்கள் திருப்பாற்கடல் நாதன் ஆகாய விமான நிலையத்தில்,
தன் மண்டபத்திற்கு அமைதியாக வந்து நின்றான் !
களைப்பே இல்லாதவன்,களைத்தவன் போலே,
பக்தர்களின் பக்திக்கு இணங்கி,பக்தர்கள்
இளைப்பாறுவதற்காக,தன் மண்டபத்தில்,
சிறிது நேரம் இளைப்பாறுதல் செய்து,
சம்சார தாபத்தை நாசம் செய்பவன்,
இளநீரை ஒய்யாரமாகப் பருகி,
அமைதியாக பவனி வந்தான் !
காமனுக்கும் தகப்பனான அனந்தபத்மநாபனின்
செவ்விதழ் கொண்ட திருமுகத்தைக் கண்டு,
அந்தி வானமும் வெட்கத்தோடு ஆனந்தத்தில் சிவக்க,
சூரிய தேவன் தன் கிரணங்களால்,
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் திருவடி முதல் திருமுடி
வரைத் தழுவி ஆனந்ததில் சிலிர்க்க,
வானூர்தியின் ராஜபாட்டையில்,
ஸ்வாதித் திருநாளின் தெய்வம் ஓடி ஓடி வந்தான் !
புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்யாவிற்கு
பறந்து சென்றவன்,விமான நிலையத்தின் மற்றோர்
வாயிலுக்கு வர, காத்திருந்த பத்மநாபதாஸர்களின்
குலதாசன் மஹாராஜா உத்தராடம் திருநாளும்,
பக்த ஜனங்களோடு தன் தாயுமானவனை வரவேற்க,
எல்லோர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிய,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
சங்கு முகக் கடற்கரையில் துள்ளித் துள்ளி வந்தான் !
கடற்கரையில் தனக்கென உரிய மண்டபத்தில்,
ஸ்ரீ நரசிம்மரோடும்,ஸ்ரீ க்ருஷ்ணரோடும்,
ஆனந்தமாய் வந்து அமர்ந்த பக்தப்ரியன்,
சமுத்திர ராஜனை தன் அழகான சிரிப்பால்
கொள்ளை கொண்டு,"என்ன! சமுத்திர ராஜா!
சுகம்தானே" என்று கேட்க,அவனும்
"அடியேன்!தேவரீர் க்ருபையால் பரம சுகமே"
என்று தன் அலைக்கைகளால் சேவித்து,
துள்ளி எழுந்து,நெடுஞ்சாண்கிடையாக,
ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் திருவடியில் விழ,
சூரியனும் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை தர,
சந்திரனும் ஆகாயத்தில் தண்ணொளியால்
நிறைத்துக்கொண்டு வந்து நிற்க,
த்வாரகா நாதன் அமைதியாகச் சிரித்தான் !
கூட வந்தவர்களும்,மற்றவர்களும்,
பத்மநாப தாஸர்களின் வம்சத்தவர்களும்,
கைங்கர்ய பரர்களும் இளைத்துக் களைப்பாற,
சிலர் பஜனை செய்ய,சிலர் நடனமாட,
சிலர் ப்ரார்த்தனை செய்ய,சிலர் சேவிக்க,
சிலர் வேடிக்கைப் பார்க்க,சிலர் பக்தியில் திளைக்க,
சிலர் ஆனந்தத்தில் மயங்கியிருக்க,
அனந்தனின் மேல் அறிதுயில் செய்கிறவன்,
அன்போடு இருளரசன் வரக்காத்திருந்தான் !
பகலவன் தன் பணியை முடித்துச் செல்ல,
இருளரசன் தன் பணியைத் தொடங்க,
தாந்த்ரீகரும் பூஜைக்கு ஆயத்தமாக,
உலகை ஸ்ருஷ்டித்தவனுக்கு விண்ணுலக
தேவர்கள் சாமரம் வீச,குடை பிடிக்க,
மேகங்களும் ஆனந்தத்தில் தன்னை மறந்து நிற்க,
வாயு தேவன் தன்னிஷ்டப்படி குஷியாக,
விதம் விதமாக பாடி பத்மநாபனை சேவிக்க,
ப்ரபுவும் அவன் பாடலுக்கு தன் மாலைகளையும்,
வஸ்திரத்திரத்தையும் அசைத்து சன்மானம் செய்ய,
அச்யுதன் மஞ்சனமாடத் தயாரானான் !
திருப்பாற்கடலைக் கடைந்தவன்,
ஈரடியால் உலகை அளந்தவன்,
பரசுராமனாய் அக்கிரமக்காரர்களை அழித்தவன்,
ராமனாய் வாழ்ந்து காட்டியவன்,
க்ருஷ்ணனாய் கருணை பொழிந்தவன்,
கல்கியாய் அவதரிக்கப்போகிறவன்,
பக்தர்களோடு உப்புத் தண்ணீரில் குளிக்க,
உளமார சம்மதம் தெரிவித்தான் !
ஸர்வ சுகந்தமாயிருப்பவன் மஞ்சனமாட மணலில் நடந்தான் !
ஸர்வ ரசமாயிருப்பவன் மஞ்சனமாட மணலில் நடந்தான் !
லோக நாதன் மஞ்சனமாட மணலில் நடந்தான் !
ராசலீலா நாயகன் மஞ்சனமாட மணலில் நடந்தான் !
யோக நரசிம்மரோடு மஞ்சனமாட மணலில் நடந்தான் !
ராதிகா க்ருஷ்ணனோடு மஞ்சனமாட மணலில் நடந்தான் !
விண்ணவரும்,மண்ணவரும் மகிழ மஞ்சனமாட மணலில் நடந்தான் !
6 மாதமாக தவமிருந்த கடலரசன்,
ப்ரபுவை தன் அலைக்கைகளால் வருக வருக என அழைக்க,
அனந்த பத்ம நாப ப்ரபுவும்,அவனருகே சென்றான் !
ஏங்கி,இளைத்துத் தவித்திருந்த கடலரசன்,
துள்ளி எழுந்து பத்மநாபனையும்,பக்தர்களையும்
ஜலப்ரவாஹத்தால் நனைக்க,
பக்தர்களின் "ஜெய் ஸ்ரீ பத்மநாபா" என கோஷமிட,
நாங்களும் அவனோடு மஞ்சனமாடினோம் !
அகன்றன எங்கள் பாவம் எங்களைவிட்டு !
ஸ்ரீ பத்மநாபன் மஞ்சனமாடிக் கரையேற,
ஸ்ரீ நரசிம்மர் கர்ஜனையோடு கடலரசனிடம் வர,
அவனோ 4 முறை அவரைப் பணிந்து,விண்ணப்பித்து,
சிரத்தையோடு ப்ரார்த்திக்க,
ஸ்ரீ நரசிம்மரும் சம்மதிக்க,கடலரசன்
தன் அலைக்கைகளை சிறிது உயர்த்தி,
நரசிம்மரை உச்சி முதல் பாதம் வரை அணைத்து,
தன் தாபத்தைத் தீர்த்துக்கொள்ள,
பக்தர்களும் ப்ரஹ்லாத வரதனோடு மஞ்சனமாட,
நாங்களும் அவரோடு கைகோர்த்து மஞ்சனமாடினோம் !
ஒழிந்தன எங்கள் கர்மவினைகள் எங்களைவிட்டு !
ஸ்ரீ நரசிம்மரும் மஞ்சனமாடிக் கரையேற,
கோபிகா ரமணன்,அர்ஜுன சகா,பார்த்த சாரதி,
ப்ரேமையில் திளைத்து ஜலக்ரீடைக்கு வர,
கடலரசனே ஒரு துள்ளலில் அவன் மேல் வந்து
கட்டி அணைக்க,அனைவரும் அதை
எதிர்ப்பார்க்காமல் ஆனந்தகோஷம் செய்திட,
நாங்களும் ப்ரேமராஜன் ராதாக்ருஷ்ணனோடு மஞ்சனமாடினோம் !
வந்துசேர்ந்தன எங்கள் ப்ரேமஸ்வரூபனின் ஆசிர்வாதங்கள் !
இவர்களோடு தன் பக்த கோஷ்டியோடு,
ஸ்ரீ லக்ஷ்மி வராஹரும் ஆனந்தமாக கடலில் இறங்க,
அவரையும் மரியாதையோடு கடலரசன் மஞ்சனமாட்ட,
அந்த ஆனந்தத்தில் பக்தர்களும் மேனி சிலிர்க்க,
பூவராஹரும் புன்னகையோடு மஞ்சனமாடினார் !
அந்தர்யாமியான ஸ்ரீ அனந்த பத்ம நாபன்,
மஞ்சள் அபிஷேகம் செய்து கொண்டு,
பூஜைகளையும் அனுபவித்து,
கடலரசனுக்கு ஆசிர்வாதம் செய்து,
தன் குழந்தைகளோடு தீர்த்தமாடின
ஆனந்தத்தோடு,ஆரத்தியையும் ஏற்றுக்கொண்டு,
மீண்டும் தன் கோயிலுக்குக் கிளம்பினான் !
பறை ஒலிக்க,பக்தர்களின் நாம கோஷத்தோடு,
வாயுதேவனின் இதமான தென்றல் சாமரமாக வீச,
சங்குமுகக் கடற்கரையில் விளையாடின
தனி முதல்வன்,தன் பக்தர்களோடு,
ஒரு வட்டம் அடித்துக் கிளம்பினான் !
ஸ்வர்ண ரூபன் விளக்கொளியில்,
தகதகவென ஜொலிக்க,ஓட்டமும் நடையுமாக,
பக்தர்கள் என்னும் குழந்தைகளோடு,
தாயாகவும்,தந்தையாகவும்,நண்பனாகவும்,குருவாகவும்
விளையாடிக்கொண்டு,தான் வந்த வழியே
காத்திருந்த முகம்மதியருக்கும் கருணைமழை பொழிந்து,
தன் சங்குமுகக் கடற்கரையில்,தன் குழந்தைகள்
மீனவருக்கும் அனுக்ரஹம் செய்தவன்,
மீண்டும் தன் கோயிலேறச் சென்றான் !
மஞ்சனமாடச் சென்ற அழகைப் பார்க்காதவர்கள்,
மஞ்சனமாடி வந்த அழகைக் காண,
திரள் திரளாகக் காத்திருக்க,
பக்தர்களின் ஆரத்தியை அனுபவித்துக்கொண்டு,
குழந்தையாக,தந்தையாக,காக்கும் கடவுளாக,
என் ஸ்ரீ அனந்த பத்ம நாபன் மஞ்சனமாடி வந்தான் !
மகா பாக்கியவான் மஹாராஜா பத்ம நாப தாஸர்
உத்திராடம் திருநாளும் மேற்குக்கோட்டையைத் தாண்டி,
தன் இருப்பிடத்தில் காத்திருக்க,
தங்கக்குடத்தில் பக்தர்களின் காணிக்கையை ஏற்ற ப்ரபு,
தீப்பந்தங்களின் ஒளியில் வைகுந்தவாசன்,
மஞ்சனமாடி வந்தான் !
மேற்கு வாயிலின் வழியாக ப்ரபு தன் கோயிலில்
ப்ரவேசிக்க,பல ஜனங்கள் மீண்டும் அடுத்த ஆராட்டு
சீக்கிரம் வர ப்ரார்த்திக்க,அதுவரை சரீரத்தில் உயிரிருக்க
அனுக்ரஹிக்கவேண்டுமென்று கை கூப்பித் தொழ,
அவனோடு மஞ்சனமாடாதவர்கள்,
அவனை தரிசனம் செய்ததே பாக்கியம் என சிலிர்க்க,
ராமானுஜரின் ப்ரிய ஸ்வாமி கோயிலில் ப்ரதக்ஷிணம் செய்தான் !
எல்லோர் கண் த்ருஷ்டியும் பட மஞ்சனமாடி வந்தவனை,
கோபிகைகளும் தன் மனதால் த்ருஷ்டி சுத்திப்போட,
தந்த்ரியும் புணர் பூஜை செய்ய,
ப்ரபுவும்,ஸ்ரீ நரசிம்மரும்,ஸ்ரீ க்ருஷ்ணனும்
ஸ்ரீபலி ப்ரகாரத்தைப் ப்ரதக்ஷிணம் செய்ய,
பார்த்தசாரதியான நம் க்ருஷ்ணனும் தூக்கத்தில்,
தள்ளாடித் தள்ளாடி, நின்று, மயங்கி,
சொப்புவாய் திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டு,
தூங்கி வழிந்துகொண்டே அசைந்தாடி வந்தான் !
அனைவரும் இந்த ஆனந்தத்தில் தங்களை மறந்திருக்க,
பார்த்தசாரதியும் தன் அரண்மனைக்குள் நுழைய,
ஸ்ரீ நரசிம்மரோடு,என் ஸ்ரீ அனந்தபத்மநாபன்,
தன் அரண்மனைக்குள் ப்ரவேசிக்க,
என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிய,
என்னை நானே இது சத்தியம்தானா என கேட்க,
அடியேனும் ப்ரபுவின் ஆராட்டில் கலந்ததை நினைக்க,
என் ஸ்வாமி ஆமாம் என்று தலையாட்டி,
அங்கு ஓர் ஆரத்தியை ஏற்றுக்கொண்டு,
ப்ரியாவிடைகொண்டு உள் சென்றான் !
என்னுள் சென்றான் !
என் ஆத்மாவில் சென்றான் !
என் உடலுக்குள் சென்றான் !
என் உயிரில் கலந்துவிட்டான் !
ஆராட்டு முடிந்துவிட்டது !
உற்சவம் தீர்ந்துவிட்டது !
ஆனாலும் ஆயுசும்,ஆசையும் தீரவில்லையே !
ஹே பத்மநாப ப்ரபு!
முந்தின ஆராட்டில் விலகி இருந்தேன் !
இந்த ஆராட்டில் நெருங்கி நின்றேன் !
அடுத்த ஆராட்டில் ? ? ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக