ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

654. பாரதி100

பாரதி....

காலம் கடந்து யோசித்து 
வருந்திப் புலம்பும் மூடர்
கூட்டத்தின் நடுவே,
காலத்தைக் கடந்து 
ஆக்கபூர்வமாக தெளிவாய் யோசித்த ஒருவன் நீ !

காசிக்கு சென்று காயும் பழமும் விட்டும், ஆசையை விடாத கூட்டத்தின் நடுவே,
காசியில் ஞானத்தையும் வைராக்கியத்தையும் அடைந்த ஒருவன் நீ !

வரட்டுப் பிடிவாதமாக தன் மொழியை உயர்த்திப் பேசும் கூட்டத்தின் நடுவே,
யாமறிந்த மொழிகளிலே தமிழ் இனிதானது என்று உரக்கப் பேசிய ஒருவன் நீ !

விடுதலை அடைய வாய்ப்பில்லை என்று கையாலாகாத்தனம் பேசிய கூட்டத்தின் நடுவே,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று துள்ளலாய் பாடிய ஒருவன் நீ !

அடிமைப்பட்டுக் கிடந்து,
தைரியத்தை இழந்து,
வக்கற்று வாழ்ந்த 
கூட்டத்தின் நடுவே,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கர்ஜித்த ஒருவன் நீ !

சுதந்திரம் என்னும் கனவே காணாமால், சுயநலத்தில் ஓடிக்கொண்டிருந்த 
கூட்டத்தின் நடுவே,
என்று தணியும்
இந்த சுதந்திர தாகம் 
என்று தவித்த
ஒருவன் நீ !

விலங்குகளையும்,
பறவைகளையும்
அடிமைப்படுத்திய
கூட்டத்தின் நடுவே,
காக்கைக் குருவி
எங்கள் ஜாதி என்று
அன்பைப் பகிர்ந்த
ஒருவன் நீ !

இயற்கையை
இயற்கையாகக் கூட
பார்க்கத் தெரியாத
கூட்டத்தின் நடுவே,
காக்கைச் சிறகினிலும்,
பார்க்கும் மரங்களிலும்,
நந்தலாலாவை தரிசித்த
ஒருவன் நீ !

கடவுளை உள்ளபடி
உணராமல், அதிசயங்கள்
செய்யும் ஒருவனாக
மட்டுமே எதிர்பார்த்த 
கூட்டத்தின் நடுவே,
கண்ணனை சேவகனாய், நண்பனாய், காதலியாய்,
குருவாய் அனுபவித்த 
ஒருவன் நீ !

மானுடம் மறந்து,
அன்பை மறந்து,
தேசத்தை மறந்து,
பிரிந்து கிடந்த
கூட்டத்தின் நடுவே,
இனி ஒரு விதி செய்வோம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று சமத்துவம் பேசிய
ஒருவன் நீ !

பார்ப்பவரிடம் எல்லாம்
தன் கஷ்டங்களைச் 
சொல்லி புலம்பி,
தன்னை நியாயப்படுத்தும்
கூட்டத்தின் நடுவே,
சொல்லடி சிவசக்தி,
எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்துவிட்டாய் என்று
பராசக்தியிடம் வாதம் செய்த
ஒருவன் நீ !

இறைவன் என்னை
சோதிக்கிறான் என்று
சோகக் கண்ணீர் வடிக்கும்
கூட்டத்தின் நடுவே,
எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் எங்கள் இறைவா
என்று உலகிற்கு
பறைசாற்றின
ஒருவன் நீ !

புதிய ஆத்திசூடி பாடி
புரட்சி செய்த
ஒருவன் நீ !
புதுமைப் பெண்ணாய்
வாழச் சொன்ன
ஒருவன் நீ !
ஜாதிகள் இல்லையடி
என்று முழங்கிய
ஒருவன் நீ !
ஆங்கிலேயனின்
தூக்கத்தைக் கெடுத்த
சிம்மசொப்பனமாகிய
ஒருவன் நீ !
காணி நிலம் வேண்டும்
என்று உரிமையாய் கேட்ட
ஒருவன் நீ !
ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைக்கும் பாடிய
ஒருவன் நீ !
மனதில் உறுதி வேண்டும் என்று திடமாய் கேட்ட
ஒருவன் நீ !
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று தன் நெஞ்சுக்கு சொன்ன
ஒருவன் நீ !

மரணத்தைக் கண்டு,
மரணத்தை நினைத்து,
மரணத்திற்கு அஞ்சிக்
கதறும் பயந்தாங்கொல்லி
கூட்டத்தின் நடுவே,
காலா ! என்றன் காலருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன் ! என்ற
இறவா வரம் பெற்ற
ஒருவன் நீ !

எத்தனை சொல்லினும்,
உன் பெருமை பேசமுடியாதடா பாரதி...
ஆனால் பேசப்பேச
இனிக்குதடா உன் நினைவுகள் !

எனக்கு மீசை மேல்
ஆசை வந்தது உன்னால் !
எனக்கு தமிழ்க்காதல்
பித்துப்பிடித்தது
உன்னால் !
எனக்கு தேசபக்தி
முக்கியமானது
உன்னால் !
எனக்கு காணி நிலம்
லட்சியமானது
உன்னால் !
எனக்கு இமயமலை
புகலிடமானது
உன்னால் !
எனக்குக் கடலும்,
அலையும் இனித்தது
உன்னால் !
எனக்குத் தேவையான
தைரியம் வந்தது 
உன்னால் !

100ஆண்டுகள் என்ன,
1000 ஆண்டுகள் என்ன,
கோடி ஆண்டுகள் நீ
வாழ்வாய்...
வாழவைப்பாய்...

உன் கனவுகள் எல்லாம் நிறைவேற்றுவாள் உன் பராசக்தி !
உன் ஆசைகள் எல்லாம்
நடத்தித்தருவான் உன் சேவகன் கண்ணன் !

அதையெல்லாம்
பார்த்துவிட்டு,
வைகுந்தத்தில்
உன்னிடம் வந்து
சொல்வேன்...
உன்னை மீண்டும்
இங்கே கூட்டிவருவேன் !

உன் வாயால்,
அகண்ட பாரதத்தை,
உன்னத தேசத்தை,
பல கோடி பாடல் பாட...
உன்னருகே நானிருந்து,
கேட்பேன், எழுதுவேன்,
ஆடுவேன், பாடுவேன்,
அழுவேன், தொழுவேன்,
உன் காலடியில் விழுவேன் !

உன் தமிழ் மீது ஆணை !
நடக்கும்... நடக்கும்...நடக்கும்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP