ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 மே, 2012

காத்திருப்பதே தவம் . . .

ராதேக்ருஷ்ணா
 
திருமலை . . .
 
நினைத்தபோது அழைக்கிறான்
மலையப்பன் . . .
அவன் நினைக்கும்போதெல்லாம்
என்னை அழைக்கின்றான்
மலையப்பன் . . .
 
ஒவ்வொரு முறையும்
என்னைக் காக்க வைப்பதில்
ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சந்தோஷம் . . .
எனக்கும் தான் . . .
 
வேங்கடவன் நான் அவனைத்
தரிசிக்கும் நாளுக்காகக்
காத்திருக்கும்போது,
நான் காத்திருப்பதில்
என்ன தவறு ?
 
எனக்கும் திருமலைக்குச்
சென்று வேங்கடநாதனுக்காகக்
காத்திருப்பதே தவம் . . .
 
நான் ஒன்றும் பெரிய
ஞானியோ,ரிஷியோ,
பக்தனோ இல்லை....
அதனால் நான் மலையப்பஸ்வாமிக்காகக்
காத்திருப்பதையே தவமாய் செய்கிறேன் . . .
 
ஸ்ரீசைல நாதனின் தரிசனத்திற்குக்
காத்திருப்பதைப் போல்
சுகமான ஒரு காரியம் இந்தப்
பூவுலகில் மனிதருக்கு
வேறொன்றும் சத்தியமாய் இல்லை !
 
 
நான்கு மணி நேரம் காத்திருந்து,
ஒரு நிமிஷத்திற்குள் பாலாஜியை
பாதாதி கேசம் பலமுறை
பார்த்த சுகம் இருக்கிறதே . . .
அப்பப்பா . . . இன்னும் தித்திக்கிறதே !
 
திருவடியைக் காட்டும் வலது கையும்,
தன்னைக் காட்டும் இடது கையும்,
சர்வ அலங்காரத் திருமேனியும்,
இன்னும் கண்ணில் நிற்கிறதே . . .
 
ஜனங்களுக்கும் இந்த சேஷாசல
நாதன் மேல் எத்தனை ஆசை . . .
எவ்வளவு நம்பிக்கை . . .
அம்மம்மா . . . அசந்துபோகின்றேன் !
 
மலையப்பனை ரசிக்கும் பாஷ்யகாரர் . . .
ஜனங்களுக்கு அவர் செய்யும் ஆசி . . .
எத்தனை சந்தோஷம் என் ராமானுஜனுக்கு !
 
திருமலையின் ஒவ்வொரு மரமும்,
ஒவ்வொரு பூச்சியும், ஒவ்வொரு மனிதரும்,
நிஜமாகவே பரம பாக்கியவான்கள் !
 
 ஸ்ரீ ஸ்ரீநிவாசா . . .
அத்வைதியும்,த்வைதியும்,
விசிஷ்டாத்வைதியும்,
வடக்கத்தியரும்,தெற்கத்தியரும்,
எல்லோரும் உன்னிடம் மயங்கிக்கிடக்கும்
ரஹஸ்யம்தான் என்ன ? ? ? ! ! ! ? ? ?
 
எல்லாவற்றிற்கும் அவசரப்படும்
நாங்கள் உன்னிடம் வந்தால் மட்டும்,
எப்படி பல மணி நேரம் காத்திருக்கிறோம் ? ! ?
 
இதுவே எனது கேள்வி !
இதுவே எனக்கு ஆச்சரியம் !
 
பதில் உனக்குத் தெரியும் . . .
எனக்குப் பதிலே வேண்டாம் . . .
 
உனக்காக என்னை எப்போதும்
காத்திருக்க வை . . .
 
வாழ்க்கையில் யார் யாருக்காகவோ
காத்திருந்தேன் . . .
காத்திருக்கிறேன் . . .
 
உனக்காகக் காத்திருக்காவிட்டால்
என் தாய் என்னைப் பெற்றது வீண் ...
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP