உறையூர் . . .
ராதேக்ருஷ்ணா
உள்ளத்தே உறையும் மாலை உணர,
கமலவல்லி நாச்சியார் உறையும்
உறையூருக்குப் போனேன் . . .
உள்ளுவார் உள்ளே இருப்பவனை
தன்னுள்ளே அனுபவித்த திருப்பாணாழ்வாரின்
உறையூருக்குப் போனேன் . . .
அமலன், விமலன், நிமலன்,
அமுதன் அரங்கன் அழகிய மணவாளனாய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .
சோழனின் பெருமையைப் பேசும்,
கோழியும் யானையைத் துரத்திய வீரம்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .
காவேரியின் ஒரு மடியில் பள்ளிகொண்ட அரங்கன்,
இன்னோரு மடியில் அழகிய மணவாளனாய்,
நின்று உறையும் உறையூருக்குப் போனேன் . . .
பக்தரை ரக்ஷிக்க சீறிப் பாயக் காத்திருக்கும்,
ப்ரயோகச் சக்கரத்தோடு மால் உறையும்,
உறையூருக்குப் போனேன் . . .
கமலவல்லித் தாயார் அமர்ந்திருக்க,
அழகிய மணவாளர் நின்றிருக்க,
ஸ்ரீரங்கம் நம்பெருமாளே உற்சவராய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .
என்னுள்ளே உறையும் நான் என்னும்
அகந்தை அழிந்து உத்தமன் என்னுள்ளே
உறைய திருப்பாணரே ஆசிர்வதியும்...
என்னுள்ளே ஊறிக்கிடக்கும் காமங்கள்
உருத்தெரியாமல் அழிய கமலவல்லி நாச்சியாரே,
உள்ளே நீ வந்து உறைவாய்....
அழகிய மணவாளா...
என்னையும் நீ உறையும்,
உறையூராய் மாற்ற அருள் செய் இப்போதே ! ! !
நீயே அழைத்தாய் . . .
நீயே தரிசனம் தந்தாய் . . .
நீயே அருள் செய்தாய் . ..
பாரமாய பழவினைப் பற்றறுத்து,
என்னையும் தன் உறையூராய் மாற்றின,
கமலவல்லித்தாயாரின் கருணை
ஐயோ நிறைந்தது என் நெங்சினிலே . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக