650. ப்ரியதர்ஷினி
🇮🇳📿🐘🐚🏹🛕🕉️🙏🏼
🌱✒️ *ஆனந்தவேதம்*💧🔥
*650. ப்ரியதர்ஷினி !*
போய் வா பிரியதர்ஷினியே !!!!
உன்னுடைய பிரிய தர்சனம் இனி இந்தப் பூமியில் எனக்கில்லை !
பேரிகை சுமந்து நீ
என் பத்மநாபன் முன்
ஆடி ஆடி வரும்போது
நான் உள்ளே குதூகலித்தது நீ அறிவாயே...
உன் முதுகில் அமர்ந்து பத்மநாபனுக்கு பேரிகை
வாசிக்க நான்
ஆசைப்பட்டது நீ அறிவாயே...
வேட்டை ஆராட்டு சமயத்தில், நீ வெளிவரும் அழகைப் பார்த்தபோது நான்
குழந்தையாய் ஆனது நீ அறிவாயே...
உன்னை நான் சேவித்தபோதெல்லாம்
என்னை நீ அழகாய்
ஆசீர்வதிப்பாயே...
உன் முகத்தில்
முத்துச்சட்டையாய்,
ஒரு ஜன்மாவில் நீ என்னை வைத்துக்கொள்வாய்...
உன்னை எல்லோரும் பார்த்தனர். உன்னை பத்மநாபன் ரசித்ததை
நான் பார்த்தேன்...
நீ பத்மநாபனுக்கு
ப்ரியதர்ஷினி...
நீ குழந்தைகளுக்கு
ப்ரியதர்ஷினி...
நீ தேவர்களுக்கு
ப்ரியதர்ஷினி...
நான் கஜேந்திரன் கதை படித்திருக்கிறேன் ; கேட்டிருக்கிறேன் ; சொல்லியிருக்கிறேன்.
ஆனால் நான் பார்த்த பக்தப்ரிய கஜராணி
நீ மட்டுமே....
எத்தனை உற்சவத்தில் பத்மநாபனின் பேரிகை
சுமந்திருப்பாய்....
எத்தனை வேட்டை,
எத்தனை ஆராட்டு,
எத்தனை லக்ஷதீபம்
பார்த்திருப்பாய்...
நீயல்லவோ பத்மநாபனின் சொத்து...
நீ பத்மநாபன் கோயிலில் பிரசாதம் சாப்பிடும் அழகை அனந்தபத்மநாபன் எப்படியெல்லாம் ரசித்தான் !!!
பத்மநாபன் கோயிலில்,
நான் வலம் வரும்போதெல்லாம்,
தென்மேற்கு திசையில்,
உன்னைத் தானே நினைப்பேன்...
திசையில்லா வைகுண்டத்திலும்,
தென்மேற்கு திசையில்,
அனந்தபத்மநாபனின்
உற்சவத்திற்காக இனி நிற்பாயோ ?!?
அங்கும் பேரிகையை
சுமப்பாயா ?!
அங்கும் உன்னைப் பார்த்து, வைகுண்டவாசிகள் "ஹொய் ஹொய்...ஹொய் ஹொய் ஹொய்..." என்று குழந்தைகளாய் குதிப்பரோ...
இனி வைகுண்டம் பாக்கியம் பெற்றது...
ஒரு நாள் நானும் வருவேன் வைகுண்டம்...
அங்கே வந்து உன்னை
மீண்டும் இங்கே,
திருவனந்தபுரம்
அழைத்துவருவேன்...
அதுவரை...
இந்த பத்மநாபதாசனை மறவாதே...
நான் என்ன பத்மநாபதாசன்...
நீ தான் பத்மநாபதாசி...
எதோ ஒரு கண்ணனின் கோபிதான் நீ...
இல்லையென்றால் இத்தனை வருடம் அனந்தபத்மநாபன் தன்னருகே யாரை இப்படி வைத்திருந்தான்...?!
ஹே கஜராணி...
ஹே பத்மநாப ப்ரியே...
போய் வா...
சீக்கிரம் வா...
நீயில்லாமல்
நம் பத்மநாபன் இளைத்துவிடுவான்...
அதனால் உடனேயே
நம் திருவனந்தபுரத்திற்கு,
உன் பத்மநாபனுக்காக
வந்துவிடு...
உனக்காக
பத்மநாபனோடு
தென்மேற்கு மூலையில்
நான் காத்திருக்கிறேன்...
©குருஜீ கோபாலவல்லிதாசன்...
30.5.21, ஞாயிறு
🙏🏼🕉️🛕🏹🐚📿🇮🇳🐘
0 கருத்துகள்:
கருத்துரையிடுக