ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, January 3, 2017

பாவை பாடும் பூமகளே !

குத்து விளக்கெரிய
குதூகலமாய் கண்ணனை
மொத்தமாய் அனுபவிக்கும்
உத்தமி நப்பின்னையை
சத்தமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


தந்தக்கால் கட்டிலில்,
காந்தமாய் கண்ணனை
ஏகாந்தமாய் அனுபவிக்கும்
காந்திமதி நப்பின்னையை
வந்தனமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


மெத்தென உடலையும்,
மெத்தென மனதையும்,
மெத்தையாய் கண்ணனுக்கு
சுத்தமாய் தந்த நப்பின்னையை
வித்தகமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


பஞ்ச சயனத்தின் மேல்
பாஞ்சசன்னிய நாயகனை
கொஞ்சிக்குலாவும்
வஞ்சகமில்லா நப்பின்னையை
தஞ்சமடைந்து எழுப்பும்,
பாவை பாடும் பூமகளே !


நங்கையர் திலகத்தின்
கொங்கையின் மேல்
நீங்காமல் கிடக்கும்
பங்கயக் கண்ணனைப்
பாங்குடன் பேசச் சொன்ன,
பாவை பாடும் பூமகளே !


மைத்தடங்கண்ணியாள்
மைத்துனனை பிரியா,
மையலில் மயங்கின,
தையலாள் நப்பின்னையை
தாயாய் அருளச் சொன்ன
பாவை பாடும் பூமகளே !


சத்துவமான கண்ணனை
முத்தத்தால் முந்தானையில்
சத்தமில்லாமல் முடிந்தது
தத்துவமல்ல எனப் புலம்பிய
பாவை பாடும் பூமகளே !


பாவியான எம்மை
பாவமில்லாமல் ஆக்க
பாவை பாடிப் பாடி
பாவ மன்னிப்பு தந்த
பாவை பாடும் பூமகளே !


பூவான இதயத்தை,
காயாமல் கண்ணனுக்கு,
நோவாமல் கொடுக்க,
நாவால் நாமம் சொல்ல
பாவை பாடும் பூமகளே !


பூமகளே...
புத்தூர் மகளே...
சித்தனின் மகளே...
சித்தம் உன் திருவடியில்
பூவாய் இருக்க அருளே !!!

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP