ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, January 10, 2017

அழகிய கோபியே !

மாலே மணிவண்ணா !
மார்கழி விரதத்திற்கு
பெரியோர்கள் சொன்ன
விதம் கேட்பாயடா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனை
ஆசையாய் சொன்ன
கள்ளழகனை கவர்ந்த
அழகியகோபியே !

பால் போல் வண்ணமும்,
ஞாலம் நடுங்க ஒலிப்பவையுமான,
பாஞ்சசன்னிய சங்கமே தா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனை கவர்ந்த
அழகிய கோபியே !

ஊரெல்லாம் அறிய
உலகெல்லாம் தொழ
எல்லோரும் சிலிர்க்கும்
பெரும் பறையே தா,
என்று கண்ணனை,
கள்ளனை, காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனை கவர்ந்த
அழகிய கோபியே !

பல்லாண்டு பாட
பன்னெடுங்காலமாக
பரந்தாமனின் அடிபிடித்த
பல்லாண்டு இசைப்பாரைத்
தா என்று கண்ணனை
கள்ளனைக் காதலனைப்
பார்த்து கொஞ்சினவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

கள்ளனின் முகத்தை
கள்ளத்தனமாய் அனுபவிக்கும்
கள்ளனைக் காட்டித்தரும்,
கோல விளக்கை தா,
என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து சொன்னவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

உள்ளமெல்லாம் ஜோராய்
கொள்ளையடிக்கும் கள்ளனின்
துள்ளும் கொடியான கருடனைத்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து உத்தரவிட்டவளே !
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

ஆதிமூலமானவனுக்கு
ஆதியோடு அந்தமாய்
பாதுகையாய், படுக்கையாய்
விதானமான அனந்தனைத்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்துக் கேட்டவளே,
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

ஆலமாமரத்தின் இலையில்
பாலகனாய் கிடந்து
ஞாலமெல்லாம் உண்ட
கோல மணிவண்ணனாய் அருள்
தா என்று கண்ணனை
கள்ளனை காதலனைப்
பார்த்து மொழிந்தவளே,
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

கள்ளமே உள்ளமாய்,
கள்ளமே வாழ்வாய்,
கள்ளமே மூச்சான,
கள்ளர்களான எங்களைக்
கள்ளனின் திருவடியில்
கள்ளமில்லாமல் சேர்க்கும்
கள்ளழகனைக் கவர்ந்த
அழகிய கோபியே !

எங்களைக் கவர்ந்து
மங்களம் அருளும்
திங்கள் முக கோபியே,
கள்ளமில்லாத உன்னிடம்
கள்ளன் பேரைச் சொல்லும்
செல்லக் கிளியாய் எம்மை ஏற்பாயா ?!?

© *குருஜி கோபாலவல்லிதாசர்*

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP