ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 பிப்ரவரி, 2010

தியாகம் . . .


 
ராதேக்ருஷ்ணா

தியாகம் என்பதுதான்
உலகை வெல்லும் ரஹஸ்யம் !

தியாகமில்லை என்றால்
உலகில் பல அற்புதங்கள்
சத்தியமாக நடந்திருக்காது !

தியாகத்தினால் உலகையே வெல்லலாம் !

தொட்டதற்கெல்லாம் மனித சமுதாயம்
உச்சரிக்கும் ஒரு வார்த்தை "தியாகம்" !

இன்று தியாகம் என்கிற வார்த்தையின்
உண்மையான அர்த்தம்
தெரியாமல் பலர் உளருகின்றார்கள் !

அல்ப விஷயங்களை எல்லாம்
தியாகம் என்றும்,
சுயநலவாதிகளை தியாகிகள்
என்றும் பேசுகின்றார்கள் !

இன்று உலகில் சாதாரணமாக
சொல்லப்படும் பல தியாகங்கள்
சத்தியமாக தியாகமில்லை !

அதைப் புரிந்துகொண்டாலே
எது தியாகம் என்பது
தெளிவாகத்தெரிந்துவிடும் !

எது தியாகமில்லை என்பதைச்
சொல்கிறேன் !
கொஞ்சம் கவனி !

தன்னுடைய இளமையின் தேவைக்காக
யாரோ ஒருவரைக் காதலித்து, அதற்காக
பெற்றோரையும்,மற்றோரையும் தள்ளிவிட்டால்
அது தியாகமில்லை !

பிள்ளைகளின் ஆசைகளுக்கு அடிமையாகி,
அதற்கு தடை போட முடியாமல்,
பெற்றோர்கள் தங்கள் கொள்கைகளை விட்டால்
அது தியாகமில்லை !

உடல் பலஹீனமான நோயாளிகளைக்
கவனிப்பதற்காகச் சில இரவுகள்
அறைகுறையாகத் தூங்கி,விழித்திருந்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய குடும்பத்தை ஒழுங்காக
நடத்துவதற்காக தனத்தைச் சேகரிக்க,
ஓடித் திரிந்துச் சம்பாதித்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய எதிர்காலம் நன்றாயிருக்க,
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற,
தொலைக்காட்சியையும்,திரைப்படத்தையும்
தவிர்த்தால் அது தியாகமில்லை !

மனைவியை இழந்தபிறகு, தன்னுடைய
குழந்தைகளின் நலத்திற்காக இன்னொரு
கல்யாணம் செய்துகொள்ளாமலிருந்தால்
அது தியாகமில்லை !

முதியோருக்கும்,உடல் ஊனமுற்றோருக்கும்
பேருந்திலோ,ரயிலிலோ உட்காரத் தன்னுடைய
இருக்கையைக் கொடுத்தால்
அது தியாகமில்லை !

சிறு குழந்தைகளை வளர்ப்பதற்காக,
தாய்மார்கள் இரவுகளில் கண் விழித்தால்
அது தியாகமில்லை !

தன்னுடைய ஏழ்மை நிலை மாற,
அல்லும் பகலும் அயராது உழைத்தால்,
அதன் பெயர் தியாகமில்லை !

வயதானவர்களைக் கவனித்துக்கொள்ள,
இளையவர்கள் தங்கள் உடல் உறவு
சுகத்தைத் தள்ளிவைத்தால்,
அதற்குப் பெயர் தியாகமில்லை !

கணவனை இழந்த பிறகு,
கடமைக்காகவும்,குடும்பத்திற்காகவும்,
தன் ஆசைகளை விட்டு வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

பாடுபட்டுச் சம்பாதித்தப் பணத்தை,
தன் குடும்பத்தினரின் மருத்துவத்திற்காகச்
செலவு செய்தால் அது தியாகமில்லை !

வெறுப்பினாலும்,குழப்பத்தினாலும்,
நடக்காததாலும்,கல்யாணமே
செய்துகொள்ளாமல் வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

தனக்குக் குழந்தை பாக்கியம்
இல்லையென்று தெரிந்தவுடன்
ஒரு அனாதைக் குழந்தையைத்
தத்து எடுத்துக்கொண்டால் அது தியாகமில்லை !

தான் பெற்ற பெண்ணின் கல்யாணத்தை,
நன்றாகச் செலவு செய்து நடத்தினால்,
அதற்கு தியாகம் என்று பெயரில்லை !

வேலை நிமித்தமாகத் தன்னுடையக்
குடும்பத்தை விட்டு,வெளியூரோ,
வெளிநாடோ சென்றால் அது தியாகமில்லை !

சொந்தப் பிள்ளைகளோடு வாழ,
தன் சொந்த வீட்டையோ,சொந்தபந்தங்களையோ,
சொந்த ஊரையோ விட்டுச்சென்றால்
அது தியாகமில்லை !

பயத்தினாலும்,இயலாமையினாலும்,
பல விஷயங்களில்,பல சந்தர்ப்பங்களில்,
மௌனமாக இருந்து,வருவதை ஏற்றுக்கொண்டால்,
அது தியாகமில்லை !

குடும்பத்தின் அவசரத் தேவைக்காகத்
தன்னுடைய நகைகளை அடகுவைத்தாலோ,
விற்றாலோ அதன் பெயர் தியாகமில்லை !

தான் ஆசைப்பட்டப் பொருளோ,
வாழ்க்கையோ கிடைக்காமல் போனால்,
கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்தால்
அது தியாகமில்லை !

ப்ராரப்தத்திற்கு தகுந்தாற் போல்,
மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள்
பிறக்க,அதைச் சிரமப்பட்டு வளர்த்தால்
அது தியாகமில்லை !



 தன் குடும்பத்திலிருக்கும் உடல் ஊனமுற்ற 
ஒருவரைக் காப்பாற்ற தன்னால்
முடிந்த சரீர,பண உதவிகளைச் செய்வதும்
தியாகத்தில் சேர்த்தியில்லை !

இன்னும் இது போலே பல அல்ப
விஷயங்கள் எல்லாம் தியாகத்தில்
சேர்த்தியில்லை !

உன் மனதை நீ ஆராய்ந்து பார் !
ஆராய்ந்து பார்த்தால் உன்னால்
ஜீரணமே செய்யமுடியாத பல
உண்மைகள் உன்னைப்பற்றியும்,
அடுத்தவரைப்பற்றியும்,
உலகைப்பற்றியும்,
 உனக்கே புரியும் !


எது தியாகமில்லை என்பதைப்
பார்த்தாய் !

இப்பொழுது எது தியாகம் என்பதையும்,
யார் தியாகி என்பதையும்,
கொஞ்சம் சொல்கிறேன் !
சிரத்தையுடன் கேள் !

தன்னுடைய தந்தை சந்தனுவின் சுகத்திற்காக,
தன்னுடைய இள வயதில்,
திருமணமே செய்துகொள்ளாமல்,
யுவராஜ பதவியையும் வீசி எறிந்த,
பீஷ்மர் உத்தமமான தியாகி!

பகவான் ஸ்ரீ ராமனின் அவதார காரியத்திற்காக
அவனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டு,
உலகில் தனக்கு ஏற்பட்டக் கேவலத்தையும்,
தன் பிள்ளை பரதனுக்கேற்பட்ட பழியையும்,
துச்சமாக மதித்த கைகேயி மாதா தியாகிதான் !

தன் தந்தையான யயாதிக்கு இளமையின் சுகத்தில்
தீராத ஆசை இருப்பதைக் கண்டு, தன்னுடைய
உத்தமமான இளமையை அவனுக்குத் தந்து,
அவனுடைய முதுமைத்தனத்தைத் தான்
வாங்கிக்கொண்ட பூரு மஹாராஜன் செய்தது தியாகமே !

ஸ்ரீ ராமன் வனவாசம் செல்கிறான் என்றவுடன்,
"காட்டில் வாழத்தான் உன்னைப் பெற்றேன்"
என்று சொல்லித் தன் பிள்ளை லக்ஷ்மணனுக்கு
ஆசி கூறி அவனை அனுப்பின
தெய்வத்தாய் சுமத்ராதேவி தியாகிதான் !

வரமாகத் தாய் வாங்கி வைத்திருந்தபோதும்,
பகவான் ஸ்ரீ ராமனே ராஜ்ய பரிபாலனம் செய்
என்று சொல்லிய போதும், ராஜ பதவியை
ஏற்காமல்,ஸ்ரீ ராமனின் பாதுகைக்கு
பட்டாபிஷேகம் செய்த பரதன் தியாகராஜன் தான்!

பகவான் ராமனும்,சீதையும் வனவாசம் செல்ல,
தன் மனைவியையும்,மற்றவரையும் விட்டு,
அவர்களுக்குச் சேவை செய்ய காட்டிற்கு சென்று,
14 வருஷம் சகலவிதமான கைங்கர்யங்களையும்
செய்த லக்ஷ்மணன் தியாக சிகாமணிதான் !

11 வருஷங்கள் பல விதமான லீலைகள்
செய்து பரவசப்படுத்திய பகவான் க்ருஷ்ணனை,
தேவகி வசுதேவரின் குழந்தை என்று அறிந்தவுடன்,
விட்டுக்கொடுத்த யசோதை, நந்தகோபர்
செய்தது உலகின் மிகப்பெரிய தியாகம்தான் !

தன் கணவர் கர்தமரின் தவத்திற்கு இடையூறு
நேராதவண்ணம் தன் இளமையையும் மறந்து
அவருக்குக் கைங்கர்யம் செய்த இளவரசி தேவஹூதி
செய்தது அற்புதமான தியாகம்தான் !

தான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை,
பல ஜீவர்கள் மோக்ஷம் அடைந்தால்போதுமென்று,
திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்திலேறி,
 ரஹஸ்ய மந்திரத்தை பலருக்கும் சொல்லிக்கொடுத்த காரேய் கருணை 

ஸ்வாமி ராமானுஜர் செய்ததுதான் தியாகம் !

தன் குருவின் படுக்கையில் ஒரு தொந்தரவும்
இருக்கக்கூடாதென்று,தனக்கு நரகம்
வாய்த்தாலும் தவறில்லையென்று, அந்தப்
படுக்கையை விரித்துத் தான் அதில் உறங்கிச்
சரிபார்த்த எம்பார் கோவிந்தர் தியாகமணி தான் !

தீப்பிடித்து எரிகின்ற கோயிலிலிருந்த
பெருமாளுக்கு,ஒரு தீங்கும் நேரா வண்ணம்,
அவரைக் கட்டிக்கொண்டு தன் உடலையும்,
உயிரையும் விட்ட பிள்ளை திருநறையூர் அரையர்,
சத்தியமாக தியாகச்செம்மல்தான் !

தான் தங்கியிருக்கும் மரத்தடிக்கு,
மழையில் ஒதுங்க வந்த,தன் ஜோடியைப் பிடித்த
வேடனுக்குக் குளிர் காய சருகையும்,
அவன் பசி தீர பழங்களையும்,தன் உடலை
அக்னியிலிட்டு,தன் மாமிசத்தையும் தந்த புறா,
ஸ்ரீ ராமன் சொன்னபடி தியாகிதான் !

பசியில் குடும்பமே 48 நாட்கள் வாடி
இளைத்திருந்தாலும்,தனக்குக் கிடைத்த,
அறுசுவை ஆகாரத்தையும்,தண்ணீரையும்,
பசி,தாகத்தோடு வந்த மூவருக்குத் தந்த
ராஜா ரந்திதேவனின்
தியாகம் உலகைவிடப் பெரியதே!

மாயையில் மயங்கிக் கிடக்கும் ஜீவர்களைக்
கரையேற்ற 24 வயதில் சன்னியாசியாக
ஆசைப்பட்ட ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரை,
தடுத்து நிறுத்தாத அவரின் பத்தினி
18 வயதான ஸ்ரீ மதி விஷ்ணுப்ரியாதேவியின்
 தியாகத்திற்கு மோக்ஷமும் சமமில்லை !


பாண்டுரங்கனின் பக்தர்களுக்கு

ஆகாரம் தருவதற்காக மளிகைக்
கடையிலிருந்துச் சாமான் எடுத்த
தன்னைக் கடைக்காரன் பிடிக்க,தந்தையைத்
தன்னுடையத் தலையை வெட்டி எடுக்கச்
சொன்ன கபீர்தாஸரின் பிள்ளை 
கமாலின் தியாகத்திற்கு முன்
 பெருங்கடலும் குட்டையே!

தரித்ரத்திலிருக்கும் தன் வீட்டிற்கு
வந்த ஸ்வாமி ராமானுஜருக்கும்,
அவரது சிஷ்யர்களுக்கும் உணவு
ஏற்பாடு செய்ய, ஒரு வியாபாரியின்
ஆசைக்காக தன் உடலைத் தரச்
சம்மதித்த லக்ஷ்மி அம்மாளும்,அதற்குச்
சம்மதித்த அவள் கணவர்
வரதாசார்யரும் தியாகசிகரங்கள்தான் !

பல பிள்ளைகளை இழந்தபிறகும்,
தன்னுடைய மூத்த பிள்ளை சன்னியாசியான
பிறகும்,வயதான காலத்தில்,
இளைய பிள்ளை நிமாயி சன்னியாசியாக
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரானதை ஏற்ற
சசீமாதாவின் தியாகத்திற்கு உலகமே
நன்றிக்கடன்பட்டிருக்கிறது !

 தன்னுடைய குருவின் உடலில்
ஒரு கஷ்டம் இல்லாமலிருக்க,
அவருடைய ராஜ பிளவை நோயைத்
தான் ஏற்ற ஸ்வாமி ஆளவந்தாரின்
சிஷ்யர் ஸ்ரீ மாறனேரி நம்பி,
தியாகம் என்ற வார்த்தையின்
உண்மையான அர்த்தம்தான் !

தன்னுடைய குரு ஸ்வாமி ராமானுஜருக்கு
ஒரு கஷ்டமும் வரக்கூடாதென்று,
ராஜ சபைக்கு அவரைப்போல் வேடமிட்டுச்
சென்றுத் தன் கண்ணையும் இழந்த
ஸ்ரீ கூரத்தாழ்வானின் தியாகத்திற்கு
உலகமே தலை வணங்கவேண்டும் !

 பிறந்த பிள்ளை தங்களைக்
கொண்டாடவுமில்லை,ஞாபகம்
வைத்துக்கொள்ளவுமில்லை என்ற
போதும்,அந்தக் குழந்தையை 16
வருடங்கள் கண்ணின் மணியாகக்
கவனித்து உலகிற்கு அந்தக் குழந்தையைத்
தந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் பெற்றோர்,
காரி,உடையநங்கை ஆகியோரின் தியாகம்
ப்ரபஞ்சத்தைக்காட்டிலும் ஸ்ரேஷ்டமானது !

இன்னும் கோடிபேரை சொல்லவா . . .

நீ மாறவேண்டும் . . .
 யார் எப்படி வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும் . . .
நீ உன்னை மாற்றிக்கொள்  . . .

இதுவரை தியாகம் என்று
தற்பெருமை பேசினது போதும் !

தியாகம் செய்கிறாயோ இல்லையோ
ஒன்றும் இல்லாத விஷயத்தை
இனியாவது தியாகம் என்று
உளராமல் இருந்தால் சரி !

இனியாவது தியாகத்தைச்
சரியாகப் புரிந்துகொள் !

கொஞ்சம் வெளியில் வந்து
புதிய கண்ணோட்டத்துடன்
உலகைப் பார் !

கொஞ்சம் சுயநலத்திலிருந்து
வெளியில் வந்து வாழ்வைப்
புரிந்துகொள் !

நம்முடைய மூதாதையர்களின்
தியாகத்தைக் கொண்டாடு !

நம்முடைய சுயநலத்தைச்
சுட்டுப் பொசுக்கு !

வா! உலகை சுத்தம் செய்வோம் !

பொய்த்தனத்திலிருந்து
விடுதலை அடையவேண்டிய
நேரமிது !

இனி ஒரு சுதந்திரம் !

இனி ஒரு சத்தியம் !

இனி ஒரு வேஷமில்லாத வாழ்க்கை !

இனி ஒரு தியாக வாழ்க்கை !

வாழ்ந்து பார்ப்போமா . . .

தியாகத்திற்கு எல்லையில்லை . . .
 தியாகத்திற்கு சமமில்லை . . .
தியாகத்திற்கு அழிவில்லை . . .

தியாகம் இல்லையென்றால் நான்
இன்று சுதந்திரமாக இதைச்
சொல்ல முடியாது . . .
நீயும் சுதந்திரமாக இதை
வாசிக்க முடியாது . . .

இந்த சுதந்திரத்தை நாம் அடைய
நம்முடைய மூதாதையர்கள்,
தங்கள் வாழ்வையே தியாகம்
செய்தார்கள் ! ! !

இதை ஒரு நாளும் மறவாதே . . .

வா . . .நாளை சுத்தமான
ஒரு சமுதாயம் உருவாக
நாமும் ஒரு சிறு தியாகமாவது
செய்வோம் . . .

தியாகத்தின் நிழலில் வாழக்
கற்றுக்கொண்டுவிட்டோம் . . .
இனி தியாக நிழலில் மற்றவர்
இளைப்பாற தயாராவோம் . . .

மனதில் ஒரு ப்ரார்த்தனை செய் . . .

"க்ருஷ்ணா !எதை நான் தியாகம் செய்தால்
உனக்குப் பிடிக்கும்" என்று உன் க்ருஷ்ணனிடம்
கேள் !

உன் க்ருஷ்ணன் சொல்வதைக் கேள் ! 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP