ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 மே, 2010

கொள்ளையடி !


ராதேக்ருஷ்ணா


கொள்ளை !
பகல் கொள்ளை !
முகமூடிக் கொள்ளை !
நூதனக் கொள்ளை !
துணிகரக் கொள்ளை !

எத்தனை கொள்ளைகள் !
ஒவ்வொரு நாளும் உலகத்தில்
பலவிதத்தில் கொள்ளைகள்
நடக்கிறது !

நாமும் போவோம் வா !
கொள்ளையடிக்க !

இதுவரை யாரும் கொள்ளையடிக்காத
பல விலை உயர்ந்த பொருட்கள்
இந்த பூமியில் கொட்டிக்கிடக்கிறது !

புறப்படு !
முடிந்தவரை கொள்ளையடிப்போம் !

இவைகளைக் கொள்ளையடித்துவிட்டால்
பிறகு,
யாரிடமும் கெஞ்சவேண்டாம் !
எதற்கும் பயப்படவேண்டாம் !
உன் வம்சமே சௌக்கியமாயிருக்கலாம் !

ஆயுதம் வேண்டாம் !
கூட்டம் வேண்டாம் !
இருட்டு வேண்டாம் !
முகமூடி வேண்டாம் !
கத்தி வேண்டாம் !

அதோ ப்ரஹ்லாதன் !
பிடி !
ப்ரஹ்லாதனிடத்தில் தைரியத்தைக்
கொள்ளையடி !

ஆஹா! விதுரர் !
விடாதே !
விதுரரிடத்தில் வினயத்தைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! கோபிகைகள் !
சுற்றி வளை !
கோபிகைகளிடத்தில்
கொட்டிக்கிடக்கும் ப்ரேமையைக்
கொள்ளையடி !

ஜோர் ! ஜோர் ! துருவன் !
இறுக்கிப்பிடி !
துருவனிடத்தில் த்ருடத்தைக்
கொள்ளையடி !

சத்தம் போடாதே !
யசோதா மாதா தயிர் கடைகிறாள் !
பின்னே சென்று கண்ணை மூடு !
யசோதா மாதாவிடத்தில்
வாத்ஸல்யத்தைக்
கொள்ளையடி !

மரத்திலிருந்து கீழே குதி !
நாரதரை தடுத்து நிறுத்து !
நாரதரிடமிருந்து
நாம ஜபத்தைக்
கொள்ளையடி !

புதரில் ஒழிந்து கொள் !
அதோ ஒரு கிளி வருகிறது !
சுகப்ரும்ம கிளி வருகிறது !
அதன் வாயில் ஒரு பழம் இருக்கிறது !
பாகவதமாகிய பழத்தை
சுகப்ரும்மத்திடமிருந்து
கொள்ளையடி !

கையில் வில்லோடு
அர்ஜுனன் வருகிறான் !
ஒடிப் போய் பிடி !
அர்ஜுனனிடத்தில்
பகவத் கீதையைக்
கொள்ளையடி !

படுக்கையில் பீஷ்மர்
கிடக்கிறார் !
மேலே விழுந்து
விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக்
கொள்ளையடி !

தன்னை மறந்து
சந்த் துகாராம் பஜனை செய்கிறார் !
ரஹஸ்யமாக,அவருக்குத் தெரியாமல்
விட்டல் பஜனையைக்
கொள்ளையடி !

சப்தம் போடாதே !
வடுக நம்பி வருகிறார் !
ஆசார்ய கைங்கர்யத்தை
வடுகநம்பியிடமிருந்து
கொள்ளையடி !

ராஜா அம்பரீஷன் உட்கார்ந்திருக்கிறான் !
சடக்கென்று அவன்
வயிற்றைப் பிடித்து
விரதத்தைக் கொள்ளையடி !

ஜடபரதர் தனிமையிலிருக்கிறார் !
காலைப் பிடித்து
ஜடபரதரிடமிருந்து
வைராக்யத்தைக் கொள்ளையடி !

சத்ரபதி சிவாஜி வருகிறான் !
குதிரை மீதேறி அவனைத் துரத்து!
சத்ரபதி சிவாஜியிடமிருந்து
வீரத்தைக் கொள்ளையடி !

சுநீதி தேவி ப்ரார்த்தனை செய்கிறாள் !
மெதுவாகச் சென்று
துருவனின் தாயார் சுநீதி தேவியிடமிருந்து
ப்ரார்த்தனையைக் கொள்ளையடி !

நில்! கவனி ! தயாராகு !
ஏகநாதர் கோதாவரியில் குளிக்கிறார் !
உள் நீச்சல் அடித்து அவரைப் பிடி !
ஏகநாதரிடமிருந்து பொறுமையைக் கொள்ளையடி !

லக்ஷ்மணன் வில்லும் அம்புமாக அலைகிறான் !
ஜாக்கிரதையாக ஓடி அவனைக் கைது செய்!
லக்ஷ்மணனிடமிருந்து
பகவத் கைங்கர்யத்தைக் கொள்ளையடி !

கையில் கிளியோடு ஆண்டாள் சிரிக்கிறாள் !
அவள் தூங்கும்போது
அருகில் நில் !
ஆண்டாளிடமிருந்து
க்ருஷ்ண கனவைக் கொள்ளையடி !

அதோ பக்த ராஜ அனுமன் !
தனியாக காட்டில் அலைகிறார் !
அமைதியாக அவர் பக்கத்தில் செல் !
ஆஞ்சனேயரிடமிருந்து
பக்தி அனுபவத்தைக் கொள்ளையடி !

ஆழ்வார் திருநகரியில்,புளிய மர பொந்தில்
ஸ்வாமி நம்மாழ்வார் அமர்ந்திருக்கிறார் !
ஒரு குண்டுக் கல்லைத் தூக்கிக் கீழே
போட்டு, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து
தியானத்தைக் கொள்ளையடி !

கையில் த்ரிதண்டத்துடன்,
ஸ்வாமி இராமானுஜர் திருக்கோஷ்டியூர்
கோயில் கோபுரத்தில் இருக்கிறார் !
யதிராஜர் எம்பெருமானார் பவிஷ்யதாசார்யர்
ஸ்வாமி இராமானுஜரிடமிருந்து
தியாகத்தைக் கொள்ளையடி !

அதோ ஊர்ந்து ஊர்ந்து
கை காலில்லாத கூர்மதாஸர் செல்கிறார் !
அவருக்கு பணிவிடைகள் செய்து,
கூர்மதாஸரிடமிருந்து விடாமுயற்சியைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! தன்னை மறந்து
பூரி ஜகந்நாதனின் சன்னிதியில்
ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு
ப்ரேமையில் நாமஜபத்தோடு நாட்டியமாடுகிறார் !
இறுக்கி ஒரு ப்ரேமாலிங்கனம்
செய்து ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரிடமிருந்து
ப்ரேம நாட்டியத்தைக் கொள்ளையடி !

அரசவையில் சிரத்தையோடு
ஜனக மஹாராஜா உட்கார்ந்திருக்கிறார் !
அவர் அருகில் நின்று கொண்டு,
ஜனகருக்குத் தெரியாமல்
அவரிடமிருந்து கர்மயோகத்தைக் கொள்ளையடி !

திருவாலி திருநகரியில் பரிவேட்டையில்
திருமங்கையாழ்வார் தயாராயிருக்கிறார் !
அவருடைய வேலைக்காரனாக இருந்து,
திருமங்கையாழ்வாரிடமிருந்து ததியாராதனத்தைக்
கொள்ளையடித்துவிடு !

திருஅனந்தபுரத்தில் ஸ்ரீஅனந்தபத்மநாபரின்
சன்னிதியில்,ஆனந்த பாஷ்பத்தோடு,
புளகாங்கிதமாக,மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
கைகூப்பி தொழுதுகொண்டிருக்கிறார் !
அற்புதமான கவித்வத்தை
மஹாராஜா ஸ்வாதித் திருநாளிடமிருந்து
கொள்ளையடி !

பண்டரீபுரத்தில்,பாண்டுரங்கன் சன்னிதியில்,
அழகாக ஸ்ரீ நாமதேவர் பகவானுக்கு
நிவேதனம் செய்கிறார் !
அவருடன் தோழமையோடு பழகி
பகவத் நிவேதனத்தை
ஸ்ரீ நாமதேவரிடமிருந்துக் கொள்ளையடி !

குருவாயூரப்பனின் சன்னிதியில்
ஆனந்தமாக,குதூகலத்தோடு,
ஸ்ரீ நாராயண பட்டத்திரி நிற்கிறார்!
உத்தமமான ஸ்ரீமன் நாராயணீயத்தை
ஸ்ரீ நாராயண பட்டத்திரியிடமிருந்து
கொள்ளையடி !

மறைந்து கொள் !
சப்திக்கின்ற அலைகளினால் அலங்கரிக்கப்பட்ட,
கன்னியாகுமரியின் சமுத்திரத்தின் நடுவில்,
ஒரு பாறையில் சலனமில்லாத
ஒரு வீரத்துறவி உட்கார்ந்திருக்கிறார் !
அந்த வீரத்துறவியான ஸ்வாமி விவேகானந்தரின்
இரும்பு நெஞ்சத்தை வேகமாகக் கொள்ளையடி !

ஆஹா!ஐயா!ஜோர்!அற்புதம்!
ராதிகா ராணி அழகாக நிற்கிறாள் !
கண்களில் கண்ணீரோடு,
ராதையின் திருப்பாதத்தில் விழு !
ராதிகாவிடமிருந்து
க்ருஷ்ணனைக் கொள்ளையடி !

இன்னும் நிறைய கொள்ளையடிக்கலாம் !
ராத்திரி படுக்கையில் படுத்துக்கொண்டு,
நிறைய யோசனை செய் !

இன்னும் கோடி பக்தர்கள்
பூமியில் இருக்கிறார்கள் !
ஒவ்வொருவரிடமிருந்தும்
ஒவ்வொன்றைக் கொள்ளையடித்துவிடு !

உன் ஆயுள் முழுக்க இந்த சொத்து
உன்னோடிருக்கும் !

இவைகளைக் கொள்ளையடித்தால்
உனக்கு தண்டனை கிடையாது !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு வைகுந்தத்தில்
நிரந்தர வாசம் கிடைக்கும் !

நீ இந்த உடலை விட்டுச் செல்லும்போது
இவைகள் உன் வம்சத்திற்குக்
கிடைக்கும் !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு க்ருஷ்ணனின்
ஆசிர்வாதமும்,பக்தர்களின்
அனுக்ரஹமும் பூரணமாயுண்டு !

இந்தக் கொள்ளையடிக்கத்தான்
நான் பூமியில் வந்திருக்கிறேன் !

நிறைய கொள்ளையடித்து விட்டேன் !
ஆனால் போதுமென்று தோன்றவில்லை !
கொள்ளையடித்துக் கொண்டயிருக்கிறேன் !
ஆயுள் உள்ளவரை கொள்ளையடிப்பேன் !
இந்த உடல் போனபின்னும் திரும்ப
இன்னொரு உடல் என் கண்ணனிடம்
வாங்கிவருவேன் ! பிரளயத்தில் உலகம்
அழியும்வரை கொள்ளையடித்துக்கொண்டே
இருப்பேன் !

வைகுந்தம் போய் கொள்ளையடிப்பேன் !
எல்லோரிடமும் கொள்ளையடிப்பேன் !
எல்லாவற்றையும் கொள்ளையடிப்பேன் !

ஆனாலும் உனக்குச் சொல்லவேண்டுமென்று
என் கண்ணன் சொல்லிவிட்டான் !
நானும் சொல்லிவிட்டேன் !

நீயும் கொள்ளையடித்து அனுபவி !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP