ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 மே, 2010

உனக்குத் தெரியுமா ? ! ?



ராதேக்ருஷ்ணா
 உனக்குத் தெரியுமா ? ! ?
நீ யாரென்று உள்ளபடி தெரியுமா ? ! ?

உன் தாயோ,தந்தையோ,உற்றாரோ,
மற்றவரோ உனக்குச் சொன்னதுண்டா ? ! ?

இப்பொழுது நான் சொல்கிறேன் !
உன்னை யாரென்று உனக்கு
அறிமுகப்படுத்துகிறேன் !

உனக்குத் தெரியாத உன்னை
அடையாளம் காட்டுகிறேன் !

கொஞ்சம் ஏற்றுக்கொள்ள
கடினமான விஷயம்தான்  . . .
உண்மை கசக்கத்தானே செய்யும் !
இருந்தாலும் உண்மை நிரந்தரமானது !
எத்தனை நாள்தான் உன்னை
நீயே ஏமாற்றிக்கொள்வாய் . . .
கொஞ்சம் உன் மனதைத் திற !
உண்மையை அதில் விதைப்போம் !
அது வளர்ந்து உனக்கு உன்னைப்
புரியவைக்கும் !

அதன்பிறகு நீதான் பயனாளி !
விதைப்பவன் கண்ணன் !
விளைச்சலின் பயன் உனக்குத்தான் !
நான் உனக்கு உதுவுபவன் !அவ்வளவுதான் ! 
 
 முதலில் உன் கடந்த காலம் !
  
நீ கொசுவாக ரத்தம் குடித்திருக்கிறாய் !
நீ ஈயாக அலைந்திருக்கிறாய் !
நீ புழுவாக நெளிந்திருக்கிறாய் !
நீ மூட்டைப் பூச்சியாய் நோகடித்திருக்கிறாய் !
நீ எறும்பாக மனிதர்களை கடித்திருக்கிறாய் !
நீ வெட்டுக்கிளியாய் செடிகளை தின்றிருக்கிறாய் !
நீ மின்மினிப் பூச்சியாய் திரிந்திருக்கிறாய் !
நீ விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுந்திருக்கிறாய் !
நீ கரப்பான்பூச்சியாய் வீட்டில் சுற்றியிருக்கிறாய் !
நீ சிலந்தியாய் வலை பின்னியிருக்கிறாய் !
நீ பட்டுப்பூச்சியாய் வலையில் இருந்திருக்கிறாய் ! 
நீ அட்டையாய் ரத்தத்தை உறிஞ்சிருக்கிறாய் ! 
நீ பல்லியாய் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தாய் !
  
நீ நாயாய் நன்றியுடன் இருந்திருக்கிறாய் !
நீ பன்றியாய் சாக்கடையில் சுகித்திருந்தாய்!
நீ மாடாய் புல்லை மேய்ந்திருக்கிறாய் !
நீ சிங்கமாய் மான் மீது பாய்ந்திருக்கிறாய் !
நீ மானாய் பயந்து நடுங்கியிருக்கிறாய் !
நீ நரியாய் தந்திரம் செய்திருக்கிறாய் !
 நீ யானையாய் குளத்தில் குளித்திருக்கிறாய் !
நீ எருமையாய் சேற்றில் திளைத்திருக்கிறாய் !
நீ பாம்பாய் விஷத்தைக் கக்கியிருக்கிறாய் !
நீ முதலையாய் மாமிசத்தை ரசித்திருக்கிறாய் !
நீ குரங்காய் மரம் மரமாக தாவியிருக்கிறாய் !
நீ அணிலாய் விடாமல் கத்தியிருக்கிறாய் !
நீ கழுதையாய் பொதி சுமந்திருக்கிறாய் !
நீ ஒட்டகமாய் பாலைவனத்தில் வாழ்ந்திருக்கிறாய் !
நீ குதிரையாய் வேகமாக ஓடியிருக்கிறாய் !
நீ புலியாகப் பதுங்கியிருக்கிறாய் ! 

நீ கிளியாக பழங்களைத் தின்றிருக்கிறாய் !
நீ குயிலாக அழகாக பாடியிருக்கிறாய் !
நீ காகமாக கண்டதையும் ருசித்திருக்கிறாய் !
நீ மயிலாக அற்புதமாக ஆடியிருக்கிறாய் !
நீ சிட்டுக்குருவியாக பறந்திருக்கிறாய் !
நீ கழுகாகக் கோழியை கொன்றிருக்கிறாய் !
நீ மீன்கொத்தியாக மீனைப் பிடித்திருக்கிறாய் !
நீ மரங்கொத்தியாக மரத்தைத் துளைத்திருக்கிறாய் !

நீ செடியாக வளர்ந்திருக்கிறாய் !
நீ ரோஜாச்செடியாகப் பூத்திருக்கிறாய் !
நீ தாமரையாய் சேற்றில் சுகித்திருந்தாய் ! 
நீ கொடியாய் படர்ந்திருக்கிறாய் !
நீ மரமாய் நிழல் தந்திருக்கிறாய் !
நீ மாமரமாய் கல்லடி வாங்கியிருக்கிறாய் !
நீ தேக்குமரமாய் நிற்க வெட்டப்பட்டிருக்கிறாய் !
நீ முள்மரமாய் வேலியாய் நின்றிருக்கிறாய் !
நீ சந்தனமரமாய் மணம் வீசியிருக்கின்றாய் !
நீ ஆலமரமாய் விழுது விட்டிருக்கிறாய் !
நீ வேப்பமரமாய் நின்று கசந்திருக்கிறாய் !

நீ மீனாக வலையில் சிக்கியிருக்கிறாய் !
நீ திமிங்கலமாக படகைக் கவிழ்த்திருக்கிறாய் !
நீ ஆமையாக நிதானமாக ஊர்ந்திருக்கிறாய் !
நீ தவளையாய் பாம்பின் வாயில் அகப்பட்டிருக்கிறாய் !
நீ தட்டாம்பூச்சியாகப் பறந்திருக்கிறாய் !
நீ கோழியாக முட்டை இட்டிருக்கிறாய் !
நீ சேவலாய் விடியலில் கத்தியிருக்கிறாய் !
நீ தேளாக அடிபட்டிருக்கிறாய் !
நீ கரையானாக மரத்தை அரித்திருக்கிறாய் !

நீ கிருமியாய் பறவை உடலில் இருந்திருக்கிறாய் !
நீ நோய் கிருமியாக மனிதரின் உடலில் இருந்திருக்கிறாய்!
நீ மிருகங்களின் உடலில் கிருமியாய் வாழ்ந்திருக்கிறாய் !

நீ கந்தர்வனாக பறந்திருக்கிறாய் !
நீ குபேர பட்டணத்தில் வசித்திருக்கிறாய் !
நீ சந்திரலோகத்தில் சல்லாபம் செய்திருக்கிறாய் !
நீ அப்சரஸ் ஸ்த்ரீயாக நாட்டியமாடியிருக்கிறாய் !
நீ இந்திரலோகத்தில் சுகமாக காலம் கடத்தியிருக்கிறாய் !

நீ ராகஷசனாக ரத்தம் அருந்தியிருக்கிறாய் !
நீ அரக்கியாக காமத்தில் அலைந்திருக்கிறாய் !
நீ பேயாக பலரை பயமுறுத்தியிருக்கிறாய் !
நீ கொலைகாரனாகக் கொலை செய்திருக்கிறாய் !
நீ திருடியாகக் கொள்ளையடித்திருக்கிறாய் !
நீ அரசனாக இருந்திருக்கிறாய் !
நீ ஏழையாய் பாடுபட்டிருக்கிறாய் !
நீ இளவரசியாகப் பலரை ஏவியிருக்கிறாய் !

நீ உழைப்பாளியாய் உண்மையாய் உழைத்திருக்கிறாய் !
 நீ நாஸ்தீகனாய் உளரியிருக்கிறாய் !
நீ பைத்தியமாய் திரிந்திருக்கிறாய் !
நீ மூளை வளர்ச்சியில்லாமல் இருந்திருக்கிறாய் !
நீ ஊனத்தில் நொந்து போயிருக்கிறாய் !
நீ வேசியாய் உடலை விற்றிருக்கிறாய் !
 நீ உடல் சுகத்திற்காக பிசாசாக அலைந்திருக்கிறாய் !
 நீ அலியாய் வாழ்ந்து அழுதிருக்கிறாய் !


இப்படி எல்லாம் ஜனனம்,மரணம் என்று
பல பிறவிகள் சுழன்றடித்தாய் நீ . . .

இத்தனை உடம்புகளில்
சுற்றித்திரிந்த
ஆத்மா நீ . . .
நீ உடலைக்கடந்த ஆத்மா . . .
நீ உடலில் மாட்டிக்கொண்ட ஆத்மா . . .
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் ஆத்மா . . .
ஜோதி ஸ்வரூபனான ஆத்மா . . .
அழிக்கமுடியாத ஆத்மா . . .
அழியாத ஆத்மா . . . 
  
இப்பொழுது உன் நிகழ் காலம் . . .
இந்த ஜன்மாவில் உன் நிலைமை . . . 

க்ருஷ்ண க்ருபையால்
பூமியில் மனித ஜன்மாவில்
ஆணாகவோ,பெண்ணாகவோ,அலியாகவோ
மீண்டும் பிறந்திருக்கிறாய் ! ! !
இப்பொழுது மனித உடலில்
இருக்கும் அதே பழைய ஆத்மாவே நீ . . .
உடல்தான் மாறியிருக்கிறது !
உன்னுள் எதுவும் மாறவில்லை !
பசி,கோபம்,மயக்கம்,காமம்,களைப்பு,
என்று எதுவுமே மாறவில்லை . . .
நீ உன்னை உணர்ந்தால்
எல்லாம் மாறும் . . . 

நீ அனுபவிப்பதற்கு ஒன்றும்
பாக்கியில்லை !
ஒன்றே ஒன்றைத் தவிர . . .
அந்த ஒன்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே !

ஒரு வேளை நீ இந்த ஜன்மாவை
வீணடித்துவிட்டால்
மீண்டும் இத்தனை பிறவி
சுழல வேண்டும் . . .
நான் உனக்குச் சொன்னது
மிகக் குறைவே !
மொத்தம் 84 லக்ஷம் உடல்கள் உண்டு !

84 லக்ஷம்...எத்தனைக் கஷ்டம் தெரியுமா . . .

பட்டுப்பூச்சியானால் கொதிக்கிற
வென்னீரில் உன்னைக் கொல்வார் . . .

மானானால் சிங்கம் உன்னை
பாய்ந்துக் கொல்லும் . . .

பாம்பானால் உன்னை உலகமே
அடித்துக்கொல்லும் . . .

சந்தனமரமானால் உன்னை உலகம்
வெட்டி,தேய்த்து விடும் . . .

குரங்கானால் உன்னை வைத்து
வித்தை காட்டுவார் . . .

வேசியானால் உன் உடலை
அனுபவித்து உன்னை துடிக்கவைப்பர் . . .

அரசனானால் உன்னைக் கொல்ல
உன் வேலையாளே முயற்சிப்பர் . . .

இப்படியே பல கோடி
வருஷங்கள்
சுற்றுவாய் . . .
மீண்டும் இது போல் 
ஒரு
மனிதஜன்மா கிடைக்கும் . . .

மீண்டும் கர்ப்பவாசம் . . .
மீண்டும் ஜனனம் . . .
மீண்டும் தாய்,தந்தை,சொந்தம் . . .
மீண்டும் கணவன்,மனைவி,குழந்தைகள் . . .
மீண்டும் சொந்தங்கள்,நண்பர்கள்,விரோதிகள் . . .
மீண்டும் வெயில், பனி, மழை . . .
மீண்டும் வியாதி,வைத்தியம்,வைத்தியன் . . .
மீண்டும் பசி,தூக்கம்,களைப்பு . . .
மீண்டும் பயம்,துன்பம்,மன உளைச்சல் . . .
மீண்டும் சந்தேகம்,குழப்பம்,அழுகை . . . 
 மீண்டும் மரணம் . . .
மீண்டும் ஒரு ஜனனம் . . .

போதாதோ . . ?
இன்னும் தேவையோ . . ?





இதிலிருந்து தப்பிக்கவேண்டாமா . . ?

ஓடு . . .தப்பித்துக்கொள் . . . காப்பாற்றிக்கொள் !

உடனே "க்ருஷ்ணா" என்று சொல் !
இப்பொழுதே க்ருஷ்ணனின் திருவடியைப் பிடி !
இன்றே சத்சங்கத்தில் ஈடுபடு !
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடு !
உன்னை குருவிடம் ஒப்படைத்துவிடு !

விட்டுவிடாதே !
ஜாக்கிரதை . . .வாழ்கை உன் வசத்திலில்லை !
நிகழ்வுகள் உன் இஷ்டத்திலில்லை !
காலத்தின் பிடியில் நீ இருக்கிறாய் . . .ஜாக்கிரதை . . .

இப்பொழுதே உன் எதிர்காலத்தை
சரியாக்கிக்கொள் . . .

சரியாக்கிக்கொண்டபின்
உன் எதிர்காலம்
எப்படியிருக்குமென்று சொல்கிறேன் . . .
அதையும் தெரிந்துகொள் !

மனதில் நிம்மதியிருக்கும் !
புத்தியில் தெளிவு பிறக்கும் !
சிந்தனையில் ஒரு நேர்த்தி இருக்கும் !
வாழ்க்கையின் யதார்த்தம் புரியும் !
உடல் உன் சொல்படி கேட்கும் !
இந்திரியங்கள் உன் இஷ்டப்படி நடக்கும் !
நல்லவைகள் உனக்கு வசப்படும் !
தீயவைகள் பயந்து விலகும் !
ஆனந்தம் உன்னை தோளில் சுமக்கும் !
பக்தி உன்னைக் கொஞ்சும் !
ஞானம் உனக்கு விசிறி வீசும் !
வைராக்கியம் உன் கைகோர்த்து நடக்கும் !
விதி உனக்கு அடிபணிந்து கிடக்கும் !
மரணம் உன்னிடம் பயப்படும் !

இந்த சரீரத்தின் முடிவில்

ஸ்ரீ க்ருஷ்ணன் உனக்கு நித்யமான,
சுகமான,கவலையில்லாத,துர்நாற்றமில்லாத,
திவ்யமான சரீரம் தருவான் . . .  

எமதர்மன் உனக்கு வேலைக்காரனாவான் !
விஷ்ணுதூதர்கள் உன் ஏவலுக்கு காத்திருப்பார்கள் !
மஹாத்மாக்கள் உன்னைக் கொண்டாடுவார்கள் !
வைகுந்தம் உனக்காகத் திறக்கும் !

அங்கே உனக்கு. . .
 நான் ஏன் சொல்ல வேண்டும் . . ?
நீயே போய் தெரிந்து கொள் ! ! !







0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP