ஒன்றரை லக்ஷம் கோடி !
ராதேக்ருஷ்ணா
ஆசை . . . ஆசை . . .
பத்மநாபனின் பாதத்தில்
பாதுகையாக இருக்க ஆசை !
பத்மநாபனின் கணுக்காலில்
கொலுசாக இருக்க ஆசை !
பத்மநாபனின் இடுப்பில்
பீதாம்பரமாக இருக்க ஆசை !
பத்மநாபனின் நெஞ்சில்
கௌஸ்துபமாக இருக்க ஆசை !
பத்மநாபனின் உடம்பில்
சந்தனமாக இருக்க ஆசை !
பத்மநாபனின் தோள்களில்
தோள்வளையாக இருக்க ஆசை !
பத்மநாபனின் கைகளில்
தாமரையாக இருக்க ஆசை !
பத்மநாபனின் விரல்களில்
மோதிரமாக இருக்க ஆசை !
பத்மநாபனின் கழுத்தில்
துளசி மாலையாக இருக்க ஆசை !
பத்மநாபனின் செம்பவள உதட்டில்
அழுத்தமாய் முத்தமிட ஆசை !
பத்மநாபனின் மூக்கில்
புல்லாக்காக உரச ஆசை !
பத்மநாபனின் கண்களை
விடாமல் பார்க்க ஆசை !
பத்மநாபனின் நெற்றியில்
கஸ்தூரி திலகமாய் இருக்க ஆசை !
பத்மநாபனின் காதுகளில்
மகர குண்டலமாக தவழ ஆசை !
பத்மநாபனின் திருமுடியில்
கிரீடமாக வீற்றிருக்க ஆசை !
இது போதுமா ? ? ?
சத்தியமாய் போதவே போதாது ? ? ?
வேறு என்னவெல்லாம் ஆசைகள் ?
சொல்லட்டுமா . . .
பத்மநாபனோடு ரகசியமாய்
காதோடு பேச ஆசை !
பத்மநாபனின் காதலியாய்
ஜீவித்திருக்க எப்பொழுதும் ஆசை !
பத்மநாபனின் மனைவியாய்
நானும் இருக்க ஒரு பேராசை !
பத்மநாபனின் பிள்ளையை
என் மணி வயிற்றில் சுமக்க ஆசை !
பத்மநாபனுக்கு விதவிதமாய்
சமைத்துப் போட ஆசை !
பத்மநாபனுக்கு எண்ணை
தேய்த்துக் குளிப்பாட்டிவிட ஆசை !
பத்மநாபனின் வஸ்திரங்களை
அழகாக தோய்த்து அலச ஆசை !
பத்மநாபனை மடியில் போட்டுக்கொண்டு
தாயாக பால் கொடுக்க ஆசை !
பத்மநாபனுக்கு அறிவுரை சொல்லும்
தந்தையாக ஆட்சி செய்ய ஆசை !
பத்மநாபனை தம்பியாக பாவித்து
அண்ணனாய் பொறுப்பாக இருக்க ஆசை !
பத்மநாபனை அண்ணனாய் ஏற்று
அவன் சொல்படி நடக்க ஆசை !
பத்மநாபனுக்கு மாமனாக இருந்து
அவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர ஆசை !
பத்மநாபனுக்கு சகோதரியாய்
கார்த்திகை சீர் வாங்க ஆசை !
பத்மநாபனுக்கு பேரனாய் இருந்து
அவன் தோளில் சவாரி செய்ய ஆசை !
பத்மநாபனோடு நண்பனாக
கடற்கரை மணலில் காலாற நடக்க ஆசை !
பத்மநாபனின் மந்திரியாக
உத்தவன் போல் தூது செல்ல ஆசை !
பத்மநாபனின் சிஷ்யனாக
அர்ஜுனன் போல் கீதை கேட்க ஆசை !
பத்மநாபனின் கோயிலில் பூஜை
செய்யும் போத்தியாக ஆக ஆசை !
பத்மநாபனை தரிசிக்கும்
திருவிதாங்கூர் ராஜனாக வாழ ஆசை !
பத்மநாபனுக்கு கைங்கர்யம்
செய்யும் ஒருவனாக இருக்க ஆசை !
பத்மநாபனின் கோயிலில்
தீபமாக வெளிச்சம் தர ஆசை !
பத்மநாபா . . .
இன்னும் கோடி ஆசைகள் உண்டு !
சரியாக சொல்லப்போனால்,
ஒன்றரை லக்ஷம் கோடி ஆசைகள் !
அது இல்லாமல் இன்னமும் உண்டு !
உனக்குத்தான் தெரியுமே . . .
எனக்கு அவசரமே இல்லை !
நிதானமாக ஒவ்வொரு ஜன்மாவாகக் கொடு !
நான் இருந்து அனுபவிப்பேன் !
இப்பொழுது கோபாலவல்லியாய்
அனுபவித்துக் கொள்கிறேன் ! ! !
மற்ற ஆசைகள் ஒவ்வொரு ஜன்மாவாக !
நீ மறக்காதே !
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைத்தேன் அனந்தபுர அழகனே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக