ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜனவரி, 2017

பாவை பாடும் பூமகளே !

குத்து விளக்கெரிய
குதூகலமாய் கண்ணனை
மொத்தமாய் அனுபவிக்கும்
உத்தமி நப்பின்னையை
சத்தமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


தந்தக்கால் கட்டிலில்,
காந்தமாய் கண்ணனை
ஏகாந்தமாய் அனுபவிக்கும்
காந்திமதி நப்பின்னையை
வந்தனமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


மெத்தென உடலையும்,
மெத்தென மனதையும்,
மெத்தையாய் கண்ணனுக்கு
சுத்தமாய் தந்த நப்பின்னையை
வித்தகமாய் எழுப்பும்
பாவை பாடும் பூமகளே !


பஞ்ச சயனத்தின் மேல்
பாஞ்சசன்னிய நாயகனை
கொஞ்சிக்குலாவும்
வஞ்சகமில்லா நப்பின்னையை
தஞ்சமடைந்து எழுப்பும்,
பாவை பாடும் பூமகளே !


நங்கையர் திலகத்தின்
கொங்கையின் மேல்
நீங்காமல் கிடக்கும்
பங்கயக் கண்ணனைப்
பாங்குடன் பேசச் சொன்ன,
பாவை பாடும் பூமகளே !


மைத்தடங்கண்ணியாள்
மைத்துனனை பிரியா,
மையலில் மயங்கின,
தையலாள் நப்பின்னையை
தாயாய் அருளச் சொன்ன
பாவை பாடும் பூமகளே !


சத்துவமான கண்ணனை
முத்தத்தால் முந்தானையில்
சத்தமில்லாமல் முடிந்தது
தத்துவமல்ல எனப் புலம்பிய
பாவை பாடும் பூமகளே !


பாவியான எம்மை
பாவமில்லாமல் ஆக்க
பாவை பாடிப் பாடி
பாவ மன்னிப்பு தந்த
பாவை பாடும் பூமகளே !


பூவான இதயத்தை,
காயாமல் கண்ணனுக்கு,
நோவாமல் கொடுக்க,
நாவால் நாமம் சொல்ல
பாவை பாடும் பூமகளே !


பூமகளே...
புத்தூர் மகளே...
சித்தனின் மகளே...
சித்தம் உன் திருவடியில்
பூவாய் இருக்க அருளே !!!

Read more...

திங்கள், 2 ஜனவரி, 2017

கள்ளனின் கண்ணம்மா !

உந்து மதமுடைய
யானையை உடையவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


ஓடாத தோள் உடையவன்
யானையும் அடக்குபவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


நந்தகோபன் மருமகளாய்
வாழ பாக்கியம் செய்தவள்
நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


வாசம் வீசும் குழலாள்,
கண்ணனின் வாசம்
வீசும் நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


கண்ணனைத் தர
கதவைத் திற, அதற்கு நீ
மனதைத் திற நப்பின்னாய்
என்றாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


வந்த கோழிகளும்
சொந்தமான கண்ணனை
சந்தமாய் அழைப்பதை
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !


மாதவிப் பந்தலில்,
காதலில் கூவும் குயில்களின்,
நாதத்தில் கண்ணனை
அனுபவித்தாயே,
கள்ளனின் கண்ணம்மா !


பந்தை விரல்களில்
பந்தமாய் கொண்டு
காந்தமாய் கண்ணனை
கொண்டவளை சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !


மைத்துனனோடு மிதுனமான
மைத்தடம் கண்ணழகியிடம்
பைத்தியமாய் அவன்
நாமம் சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !


செந்தாமரை கையினால்,
பாந்தமான வளையல்களோடு,
வந்து திறக்கக்
கெஞ்சினாயே,
கள்ளனின் கண்ணம்மா !


மகிழ்ச்சி நீ தருவாய்
முகிழ்த்த நீ வருவாய்
நெகிழ்வு நீ அருளாய்
திகழ வைப்பாய் என்றாயே
கள்ளனின் கண்ணம்மா !


உடையவர் ராமானுஜரும்
உடையவன் கண்ணனை
உடையவள் நப்பின்னையை,
உன்னுடை அருளால் கண்டாரே,
கள்ளனின் கண்ணம்மா !


கண்ணம்மா ! கண்ணம்மா !
கள்ளனின் கண்ணம்மா !
பாரதத்தின் கண்ணம்மா !
காதலின் கண்ணம்மா !
பக்தியின் கண்ணம்மா !
நீயே கண் அம்மா !


கள்ளனின் கண்ணம்மா !
கள்ளமெல்லாம் எமைவிட்டொழிய,
உள்ளமெல்லாம் உனைநினைத்து,
துள்ளும் இளமையெலாம்,
கள்ளனுக்காய் தர நீ
கண் பாராய் கண்ணம்மா !

Read more...

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திருப்பாவை பாடிய செல்வியே !

உண்ணும் சோறு, பருகும் நீர்,
உடுக்கும் ஆடையுமாய் ஆன
எம்பெருமானின் எம்பெருமான்
நந்தகோபாலனை
எழுப்பிய
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !

பெண்களின் கொழுந்து,
ஆயர் குல விளக்கு,
கண்ணனைக் கட்டிய
எம்பெருமாட்டி யசோதையை
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆகாசம் தாண்டி நீண்டு,
ஓங்கி உலகளந்த,
தேவாதி தேவனான,
யாவருக்கும் கோமானை,
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


கண்ணனுக்கு முன்னே
வந்த பொன்னடியான்,
கைங்கர்ய செல்வனான
பலதேவனை
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


இத்தனை பேரையும்
எழுப்பி, எமக்கு அருள,
இளங்காலை எழும்
வில்லிபுத்தூர் செல்லமே,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


எங்களுக்காய் நீ எழுவதால்,
நாங்கள் வீழோம்,
நாங்கள் தாழோம்,
உன்னையே தொழுவோம்,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


எங்களுக்காய் நீ வாழ்வதால்,
நாங்கள் எழுவோம்,
நாங்கள் வாழ்வோம்,
உன்னையே புகழ்வோம்,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !


செல்வியே நீயே செல்வம்,
செல்வியே நீயே செல்லம்,
செல்வியே நீயே எல்லாம்,
செல்வியே உன் செவ்வடி
செவ்வித் திருக்காப்பு !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP