ஒரு இடம் தருவீரா . . .
ராதேக்ருஷ்ணா
திருப்பாணரே . . .
கார்த்திகையின் ரோஹிணி பெற்ற
உத்தம நல் முத்தே . . .
காவேரியின் மடியில்,
உறையூரில் உதித்த
உன்னத மாணிக்கமே . . .
உடலால் ஒதுங்கியிருந்தாலும்,
உள்ளத்தால் ரங்கனோடு
இணைந்திருந்த அற்புதமே . . .
பணிவினாலும்,பக்தியினாலும்
பூலோக வைகுந்த ராணி
ஸ்ரீரங்கநாயகிக்கு ப்ரிய புத்ரனானவரே . . .
வீணையை மீட்டி, பக்தியைப் பாடி,
தேவாதிதேவன் ரங்கநாதனை
வசப்படுத்தின ஆழ்வாரே . . .
தீண்டத்தகாதவர் என்று உலகோர் ஒதுக்க,
ஸ்ரீரங்கனோ என் பாணன் என்று உரைக்க,
ஸ்ரீரங்கத்தில் நுழைந்த அடியவரே . . .
கல் எடுத்து அடித்த ப்ராம்மணரான
லோக சாரங்க முனிவரையே வாஹனமாக்கி
ஸ்ரீரங்கம் வந்த முனிவாஹனரே . . .
அமலனை,ஆதிபிரானை,விமலனை,
விண்ணவர் கோனை,நிமலனை,
தன்னுள் அடக்கிய வீரரே . . .
கண்ணுள் ரங்கனின் பாதத்தையும்,
சிந்தையுள் ரங்கனின் செவ்வாயையும்,
சித்தத்தில் ரங்கனின் திருக்கண்களையும்,
ரங்கனுக்குள் தன்னையும் வைத்த பாணரே !
எனக்கும் ரங்கனின் திருமேனியில்
ஒரு இடம் தருவீரா . . .
நானும் உம்மோடு பக்தி செய்ய
ஒரு இடம் தருவீரா . . .
அடியேனும் உம்மோடு வசிக்க
ஒரு இடம் தருவீரா . . .
காத்திருக்கிறேன் . . .
திருப்பாணரின் பாததூளி கோபாலவல்லி !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக