அனுபவிப்போம் வா . . .
ராதேக்ருஷ்ணா
ஸ்ரீநிவாசா . . . கோவிந்தா !
இப்பொழுது திருமலைக்குச்
செல்லப்போகிறேன் . . .
நேற்று என் தாயார்
அலர்மேல்மங்காவை
சுகமாய் தரிசித்தேன் !
நிஜமாகவே என் தாயாரைப்
பார்த்தபிறகு என் மனம்
நிறைவாய் உள்ளது . . .
இதன் பிறகு ஸ்ரீநிவாசனைப்
பார்க்க அவசியமே இல்லை . . .
ஆயினும் எங்கள் குலசேகர
ஆழ்வார் ஏதேனும்
ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட
திருமலையில் சிறிது நேரம்
நிற்க எனக்கு ஆசை . . .
படியாய் கிடந்து உன் பவளவாய்
காண்பேன் என்று குலசேகரர் புலம்பிய
திருமலையப்பனை
பார்த்தால் சுகம்தானே . . .
எங்கள் திருமலை அனந்தாழ்வானிடம்
தாடையில் கடப்பாறையால்
அடிவாங்கினவனைப் பார்த்தால்
பரமசுகம்தானே . . .
வகுளமாலிகாவின் ஸ்வீகார
புத்திரனை, திருமலையில் வாடகைக்கு
சுகமாய் நிற்பவனைப் பார்த்தால்
எல்லையில்லா சுகம்தானே . . .
எங்கள் இராமானுஜர் சங்கும்,சக்கரமும்
தர அதை சுகமாய் சுமப்பவனை
பார்த்தால் சொல்லமுடியாத
தொல்லை இன்பம் தானே . . .
திருமலை நம்பிகளின்
தீர்த்த பாத்திரத்தில் துளையிட்டு
தாகம் தீர நீரருந்தி,அவரை
அப்பா என்றழைத்தவனை
பார்த்தால் மோக்ஷம் தானே . . .
ஹாத்தி ராம் பாவாஜீயோடு
நித்தியம் சொக்கட்டான்
ஆடி பொழுது போக்குகின்றவனைப்
பார்த்தால் படு குஷி தானே . . .
என் அலர்மேல்மங்கையின்
கணவனைப் பார்க்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .
திருமலைக்குச் சொந்தக்காரரான
லக்ஷ்மி வராஹரைத் தரிசிக்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .
வா . . .போய் அனுபவிப்போம் வா . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக