வையத்து வாழ்வீர்காள் !
ராதேக்ருஷ்ணா
வையத்து வாழ்வீர்காள் !
நாராயணனே நமக்கே எல்லாம் தருவான் !
அதற்கு நாம் ...
பாற்கடலுள் பையத் துயின்ற
பரமனடி பாடுவோம் !
ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர் பாடுவோம் !
தாயைக் குடல் விளக்கம்
செய்த தாமோதரனை
வாயினால் பாடுவோம் !
உள்ளத்துக் கொண்டு ஹரி
என்று உரக்கப் பாடுவோம் !
நாராயணன் மூர்த்தி கேசவனை
சுகமாய் பாடுவோம் !
தேவாதி தேவனை, கோயிலில் சென்று
நாம் சேவித்துப் பாடுவோம் !
மாமாயன் மாதவன் வைகுந்தன்
என்றென்று நாமம் பலவும் பாடுவோம் !
நாற்றத் துழாய் முடி நாராயணனை
நாம் போற்றிப் பாடுவோம் !
சுற்றத்து தோழிமார் எல்லோரும்
முகில் வண்ணன் பேர் பாடுவோம் !
தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடுவோம் !
புள்ளின் வாய் கீண்டானை,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானின்
கீர்த்தியைப் பாடுவோம் !
சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடுவோம் !
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை
மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடுவோம் !
மாயன் மணிவண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான்,
நென்னலே வாய் நேர்ந்தான்,
தூயோமாய் சென்று துயிலெழப் பாடுவோம் !
நந்தகோபனும்,யசோதையும்,பலதேவனும்,
நம் காதாலன் கண்ணனும் துயிலெழப் பாடுவோம் !
பல்கால் குயிலினங்கள் கூவ,
பந்தார் விரலியின் மைத்துனன் பேர் பாடுவோம் !
கொத்தலர் பூங்குழல் நப்பின்னையையும்,
அவள் மணாளனையும் பாடுவோம் !
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனையும்,
நப்பின்னை நங்கை திருவையும் பாடுவோம் !
ஊற்றம் உடையானை,பெரியானை
அடி பணிந்து போற்றி யாம் பாடுவோம் !
செங்கண்ணன் அங்கண் இரண்டும்
கொண்டு நோக்கும்படி பாடுவோம் !
சீரிய சிங்கன் சீரிய சிங்காசனத்தில்
இருக்க நாம் காரியமாய்ப் பாடுவோம் !
என்றென்றும் கண்ணன் சேவகம் கிடைக்க
இன்று நாம் உருகிப் பாடுவோம் !
நெடுமாலின் திருத்தக்க செல்வமும்,
சேவகமும் அடையப் பாடுவோம் !
மாலே மணிவண்ணா ஆலினிலையாய்
என்று அருளப் பாடுவோம் !
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனோடு
கூடியிருந்துக் குளிரப் பாடுவோம் !
குறையொன்றுமில்லாத கோவிந்தனை,
அறியாத பிள்ளைகளாய் அன்பினால் பாடுவோம் !
சிற்றஞ்சிறுகாலே சென்று சேவித்து,
மற்றை நம் காமம் மாற்றப் பாடுவோம் !
பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
எங்கும் திருவருள் பெற்று
இன்புறப் பாடுவோம் !
மார்கழித் திங்கள் மதி நிறைந்த
நன்னாளாகப் இப்பொழுதே பாடுவோம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக