ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, October 1, 2012

ஆடுகிறான் கண்ணன் !

ராதேக்ருஷ்ணா


நர்த்தனம் . . .
நாட்டியமே அழகு தான் !


அதிலும் ஒரு சிறு பயல்
ஆடினால் கேட்கணுமா ?அதிலும் மிக அழகான
ஒரு பயல் ஆடினால் சொல்லணுமா ?


த்வாபர யுகத்தில்
தூய யமுனா நதியில்
கோபிகள் பார்க்க ஆடினான் கண்ணன் !


ப்ருந்தாவனமதில்
காளிய நாகத்தின் தலை மீதில்
ஆனந்தமாய் ஆடினான் கண்ணன் !


கந்தர்வர்கள் பாட,
தேவர்கள் சிலிர்க்க, தேவதைகள் மயங்க
ஜோராக ஆடினான் கண்ணன் !


நடராஜரும் தன் ஆடலை மறக்க,
சரஸ்வதியின் வீணை கை நழுவ,
குதித்து ஆடினான் கண்ணன் !


காளியனின் பத்தினிகளும் ரசிக்க,
கோபர்களும் தன்னை மறந்தாட,
கோலாகலமாய் ஆடினான் கண்ணன் !


ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளும் ஆட,
ஸ்ரீதேவியும் மோஹத்தில் மயங்கியாட,
பிசகாமல் ஆடினான் கண்ணன் !


 யமுனா தேவியும் அலையாட,
வாயு தேவனும் தென்றலாய் ஆட,
தாவித் தாவி ஆடினான் கண்ணன் !


 இறுக்கிக் கட்டின பீதாம்பரமாட,
கால் சதங்கையாட, காது குண்டலமாட,
அட்டகாசமாய் ஆடினான் கண்ணன் !


முத்து மணி மாலை ஆட,
தலை மீது மயில் பீலி ஆட,
கண்களாட ஆடினான் கண்ணன் !


நாரதரும் சுகமாய் தாளமிட,
தும்புருவும் வீணை வாசிக்க,
துடிப்பாக ஆடினான் கண்ணன் !


மரங்கள் தன்னை மறந்தாட,
மாடுகளும் மயக்கத்தில ஆட,
பம்பரமாய் சுழன்றாடினான் கண்ணன் !


எத்தனை அழகல்லவா காளிய நர்தனம் !


ஐயோ . . . இழந்தோமே . . .
என்று புலம்புகிறாயா ?


அவசியமில்லை . . .
இன்றும் நீ காணலாம் . . .
காளிய நர்த்தனத்தை . . .


புஷ்பவனம் என்னும் ஊத்துக்காட்டில்
காமதேனுவின் குழந்தைகள்
பட்டியும்,  நந்தினியும் கேட்க
நாரதர் காளிய நர்த்தன வைபவம் சொன்னார் !


கேட்ட குழந்தைகள் பகவானை
காளியன் கடித்திருப்பானே என்று
கவலைப்பட்டு தன்னிலை மறந்தனரே !


காமதேனுவும் தன் குழந்தைகள் தாபம் தீர
வைகுந்தம் சென்று நாராயணனிடம்
அழுது புலம்பினாளே !


நாராயணனும் பக்தர்களின் துயர் தீர்க்க
வேகமாய் கலியுகத்தில் கண்ணனாக
மீண்டும் ஆட வந்தானே !


நந்தினியும், பட்டியும் காண,
நாரதரும் பாட, காமதேனுவும் நெகிழ,
குளத்தில் நர்த்தனம் ஆடினானே !


த்வாபர யுகத்தில் ஆடினாற் போலே
காளியன் தலையில் மீண்டும்
உற்சாகமாய் ஆடிக் காட்டினானே !


குழந்தைகள் ஆஹா இது
இவனுக்கு இது ஒரு விளையாட்டு
என்று அறிந்து மகிழ்ந்தனரே !


நாரதரும் கண்ணனிடம் இங்கேயே
எப்போதும் இப்படியே அழகாய்
ஆடிக் கொண்டிரு என்றாரே !

  
பக்தனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு
இன்றும் ஊத்துக்காட்டில் நாம் காண
ஆடுகிறான் கண்ணன் !


நாரதரே மீண்டும் வேங்கட கவியாக
வந்து விதவிதமாய் பாட
ஆடுகிறான் கண்ணன் !


இடது கால் காளியன் தலை மேலிருக்க,
இடது கையில் காளியன் வாலிருக்க,
ஆடுகிறான் கண்ணன் !


வலது கால் அழகாக மடங்கியிருக்க,
வலது கை அபய முத்திரை பதிக்க,
ஆடுகிறான் கண்ணன் !


முகத்தில் புன்னகை தவழ,
தலையில் முத்து மகுடம் இருக்க,
ஆடுகிறான் கண்ணன் !


காளியனின் கோபக் கடியெல்லாம்
வலக்காலில் தழும்பாய் இருக்க,
ஆடுகிறான் கண்ணன் !


நம் பாவமெல்லாம் அழிய,
அஹ்ம்பாவமெல்லாம் ஒழிய,
ஆடுகிறான் கண்ணன் !


ஆளரவமில்லா கிராமத்தில்,
அரவத்தின் மீது ஆர்வமாய்,
ஆடுகிறான் கண்ணன் !


இரு காலில் நிற்கும் என்னையும்,
ஒரு காலில் நிற்க வைத்து,
ஆடுகிறான் கண்ணன் !


நான் உட்கார்ந்து ரசிக்க,
 அதை அவன் ஆனந்தமாய் ரசிக்க,
ஆடுகிறான் கண்ணன் !


ஒரு கால் அவனைக் காண ஏங்கின
என்னை ஒரு காலில் நிற்க வைத்து,
ஆடுகிறான் கண்ணன் !


நினைத்தாலே சிரிப்பு வருகிறது !
ஆடுகிற கண்ணனை
நான் ஆடி ஆடிக் கண்டதை !


நீயும் வா . . . நானும் வருகிறேன் !
இருவருமாய் செல்வோம் !


ஆடுகிறான் கண்ணன் !
நாம் காண காத்திருந்து
ஆடுகிறான் கண்ணன் !


சீக்கிரம் போவோம் வா !
ஆடுகிறான் கண்ணன் !


ஊத்துக்காட்டில் வேங்கடகவிக்காக
ஆடுகிறான் கண்ணன் !


என் உள்ளக்காட்டில்
ஆடுகிறான் கண்ணன் !


பக்தி ஊற்றெடுக்கும் காட்டில்,
ஆடுகிறான் கண்ணன் !
உன் உள்ளக்காட்டிலும்
ஆடுகிறான் கண்ணன் !


உடல் என்னும் ஊரில்,
உள்ளம் என்னும் காட்டில்,
ஆடுகிறான் கண்ணன் !

ஆட்டுவிக்கும் ஆட்டநாயகா !
நானும் ஆடுகிறேன் உன் க்ருபையில் ! ! !


அழுகிறான் கோபாலவல்லி தாசன் !
ஆடுகிறான் கண்ணன் !
ஆனந்தத்தில் அழுகிறான் தாசன் !
ஆடுகிறான் கண்ணன் !


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP