ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலி . . .

ராதேக்ருஷ்ணா

Lord Sri Parthasarathy, Triplicane

 கண்கள் பலவிஷயங்களை
காண்கிறது . . .

ஆனால் எல்லா விஷயங்களும்
சுகமானவையா என்றால்
இல்லை என்பதே பதில் . . .

பார்க்கின்ற எல்லாமுமே
வாழ்க்கைக்கு
பிரயோஜனமானதா என்பதும்
நிச்சயமில்லை . . .

பார்ப்பதால் நன்மை அடைந்தோமா
என்பதும் சரியாகத் தெரியவில்லை . . .

ஆனாலும் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டேயிருக்கின்றோம் . . .

நாம் பார்க்கின்ற பல விஷயங்களில்
கண்கள் சந்தோஷத்தை
அனுபவிக்கின்றதா என்பதை
நாம் அறிவதேயில்லை . . .

சில விஷயங்களில்
சத்தியமாக
கண்கள் அகண்டு விரிந்து
மலர்கின்றன . . .

நேற்று என் கண்கள்
மலர விரிந்தன . . .

நேற்று என் கண்கள்
அதிசயத்தில் மூழ்கின . . .

நேற்று என் கண்கள்
ஆனந்தத்தில் திளைத்தன . . .

நேற்று என் கண்கள்
கண்ணீரில் மூழ்கின . . .

நேற்று என் கண்கள்
இமைக்க மறந்தன . . .

நேற்று என் கண்கள்
காட்சியை மாற்ற யோசித்தன . . .

ஏன் ?
நேற்று எதைக் கண்டன என் கண்கள் ?
எதனால் இப்படி நடந்தது ?

நேற்று அடியேன்
திருவல்லிக்கேணி சென்றேன் . . .

பல வருடங்கள் கழித்து
திருவல்லிக்கேணி சென்றேன் . . .

சென்றேன் என்பது அஹம்பாவம் . . .
ஓ...அது என்றுமே வேண்டாம் . . . 

மீசைக்காரன் அழைத்தான் என்பதே சரி !

மீசைக்காரன். . .
வேறு யாருமே போட்டி போட முடியாத
ஒரு திருநாமம் . . .

என் பார்த்தசாரதியை அடியேன்
மீசைக்காரன் என்றுதான் எப்போதும்
கொஞ்சுவேன் . . .

அவனை நான் கண்ட சுகத்தை சொல்லவா . . . 

ராதேக்ருஷ்ணா. . .

திருமங்கையாழ்வார் பாடின
பார்த்தசாரதியை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

முறுக்கு மீசைக்காரனை,
ருக்மிணித் தாயாருடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

 பார்த்தனுக்கு சாரதியானவனை
அண்ணன் பலராமனுடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

கீதாசார்யனை, வேங்கட க்ருஷ்ணனை
சாத்யகியுடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஆயர் குல சிகாமணியை,
பிள்ளை ப்ரத்யும்னனோடு
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

மாட்டுக்காரக் குறும்பனை
பேரன் அனிருத்தனோடு
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

பீஷ்மரின் அம்புகளால் ஏற்பட்ட
வடுக்களை சுமந்த சுந்தரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

வண்டினம் பாட,மயில்கள் ஆட,
ரங்கத்தில் அரிதுயில் பயிலும் வித்தினை,
ஸ்ரீ ரங்கராஜனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . . 

இடக்கையில் பாஞ்சசன்னிய சங்கோடும்,
இடையில் உறை வாளோடும் நிற்கும் 
ஆயர் தம் கொழுந்தை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

பிரளயத்தில் உலகை உந்தியில்
கொண்ட பிரானை, ஆலிலைக் கண்ணனை
பச்சை வண்ண ஆடையில் 
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

வேதநாயகனை நெஞ்சில் சுமந்து,
தன்னை அவனை நெஞ்சில் சுமக்க வைத்த,
வேதவல்லித் தாயாரை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஆதி மூலமே என்றழைத்த வார்த்தை முடியும் முன்,
கதறிய யானையைக் காப்பாற்ற கருடனின் மேல் வந்த,
கஜேந்திர வரதனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

 ப்ரஹ்லாதனுக்காக தூணில் பிறந்து,
யோகத்தில் அமர்ந்த தெள்ளிய சிங்கமான,
அழகிய சிங்கனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்து,
ரங்கராஜனை ஆண்ட ஆண்டாளை,
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

கேசவ சோமாயஜி,காந்திமதி ப்ரார்த்தனைக்காக, 
எங்களுக்கு காரேய் கருணை இராமானுசனாக
வந்துதித்த, என்னை ஆளும் அப்பனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . . 

  வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை
விழுங்கும் முனிவரின் தெய்வத்தை,
ஸ்வாமி விவேகானந்தனும் கடிதத்தில்
கொண்டாடின ஆதியை, அமுதை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

எங்களை 3 முறை அழைத்து, அழைத்து,
தரிசனம் தந்த ஒப்பாரும் மிக்காரும்
இல்லாத முறுக்கு மீசைக்காரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

இந்த அழுக்குடம்பு,எச்சில் வாய்,
மல மூத்திர மாமிசப் பிண்டம் தந்த
செண்பகப் பூவையும் வாங்கிக்கொண்ட,
கருணா சாகரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

நான் கண்டேனே . . .
இல்லை...இது பொய்...
அவன் என்னைக் கண்டான் . . .

என்னை கொள்ளையடித்தான். . .

அவன் முறுக்கு மீசைக்கு முன்
என் ஆண்மை தோற்றது . . .
நான் பெண்ணாக மாறினேன் . . .
அவனிடத்தில் காதல் கொண்டேன் . . .

அவன் அழகில் காமம் தலைக்கேற,
ஏன் ஆணாய் பிறந்தேன் என்று
கோபத்தில்,அழுகையில்,
துவண்டேன். . . துடித்தேன் . . .

அவன் என்னை தன்
காதலியாக ஏற்றுக்கொண்டான். . .

என்னை அவனிடத்தில் தந்தேன் . . .

இனி நான் பெண் . . .

முறுக்குமீசைக்காரனின் காதலி . . .

  
இனி என் திவ்ய தேசம் திருவல்லிக்கேணி . . .
இனி என் காதலன் பார்த்தசாரதி . . .
இனி என் சகோதரன் இராமானுஜன் . . .
இனி என் பிள்ளை ப்ரத்யும்னன் . . .
இனி என் பேரன் அநிருத்தன் . . .
இனி என் இளமை . . . மீசைக்காரனுக்கு . . .
இனி என் வாழ்க்கை . . . மீசைக்காரனின் ப்ரேமைக்கு . . .
இனி என்னுடையது என்பதே கிடையாது . . .

கரைந்து விட்டேன் . . .
என்னை கரைத்து விட்டான் . . .
என்னை திணற வைத்து விட்டான் . . . 
  
 இனியும் யாரும் இப்படி தோற்றுவிடாதீர்கள் . . .

இந்தப் பக்கம் மறந்தும் வராதீர்கள் . . .

வந்தால் நீயும் என்னைப் போல் புலம்புவாய் . . .

ஆனாலும் வா. . .
என் காதலனை உனக்கு நான் 
அறிமுகப்படுத்தி வைக்கிறேன் . . .

நீயும் காதல் வயப்படு . . .
எனக்கும் புலம்பத் துணை இல்லை . . .
வா . . .கூடியிருந்து குளிர்வோம் . . . வா


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP