ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 நவம்பர், 2009

வரம் கேள் ! ! !



ராதேக்ருஷ்ணா


 வரம் கேள் ! 
வாழ வரம் கேள் ! 
ஒரு நாள் வாழ வரம் கேள் !


திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண நம்பியின்
செங்கனி வாயோடு சென்ற மனமுடைய ஸ்வாமி நம்மாழ்வாரை தன்னுள் வைத்த
திருப்புளியாழ்வாராக
 ஒரு நாள் வாழ வரம் கேள் !



மேல்கோட்டை திருநாராயணனோடு,
தமர் உகந்த திருமேனியான 
யதிராஜன் ஸ்வாமி ராமானுஜரின்
பாதுகையாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !



கிரிதாரியையே ப்ரபுவாகக் கொண்டு,
 த்வாரகா நாதனிடத்தில் ஐக்கியமான மீரா, 
 கட்டி அணைத்துக் கொண்டு மீட்டும் 
தம்பூராவாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


விட்டலனின் திருவடியை மட்டும்
தலையில் சுமக்கும் சந்த் துகாராமின்
சிரசைக் கட்டிக்கொள்ளும் 
தலைப்பாகையாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


குழலழகர்,வாயழகர்,கண்ணழகர்,
நம்பெருமாள் ரங்கராஜனுக்கு 
ஆண்டாள் தந்த சூடிக்களைந்த
மாலையாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !



ராதாக்ருஷ்ண ஸ்ருங்கார ரஸத்தை
பூரி ஜகந்நாதனிடம் அனுபவித்து 
கீத கோவிந்தமாகத் தந்த ஜயதேவரின்
எழுத்தாணியாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


கைங்கர்யத்தை தட்டிப் பறிக்க நினைத்த
ஏழுமலையான் முகவாய் கட்டையைப்
பதம் பார்த்த அனந்தாழ்வானின்
கடப்பாரையாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


 ஸ்ரீ அனந்தபத்ம நாப ஸ்வாமியிடம்
தீராத காதல் கொண்ட
மஹாராஜா ஸ்வாதித் திருநாளின்
குதிரை மாளிகையாக  
 ஒரு நாள் வாழ வரம் கேள் !


வரம் தரும் வரதராஜனுக்கு
வியர்வையின் வாட்டம் தணிய
வீசும் திருக்கச்சி நம்பிகளின் 
விசிறியாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


மழையில் நனைந்த உன்னிகுட்டன்
குருவாயூரப்பனுக்கு கோமணம்
கொடுத்த குரூரம்மையின்
கந்தல் புடவையாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !


உடுப்பி க்ருஷ்ணனையும் சுவற்றில்
மத்தைக் கொண்டு ஓட்டையிட
வைத்த கனகதாஸரின் கழுத்தில்
துளசிமாலையாக 
ஒரு நாள் வாழ வரம் கேள் !

   
 ஸ்ரீநாத்ஜீயின் அலங்காரத்தை
த்யானத்தில் பார்த்து அப்படியே பாடும்
கண் தெரியாத சூர்தாஸரின்
 கைத்தடியாக
ஒரு நாள் வாழ வரம் கேள் !

எத்தனையோ வரம் கேட்டாயே ?
 இப்படியொரு வரம் கேட்டாயா ?

எத்தனை நாள் வாழ்க்கை....
யாருக்குத் தெரியும் ?

ஒவ்வொரு நாளும் ஆயுள்
குறைகிறது ! மறந்துவிடாதே !

ஒரு நாள்....கடைசி யாத்திரை...
அதற்கு முன்...


ஒரே ஒரு நாள்...
இப்படி வாழும் அனுபவத்தைக் கேள் !

ஒவ்வொரு நாளும் இப்படியாக
நினைத்து வாழ்ந்து பார் ! ! !
  

இன்னும் இது மாதிரி நிறைய உண்டு ! ! !



நீயே கண்டுபிடி ! ! !

உன்னால் முடியும்.... 
  

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP