ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜூலை, 2012

படுத்துக்கொள்ள ஆசை !

ராதேக்ருஷ்ணா
 
 
பூமி . . .
எல்லோருக்கும் பிடிக்கும் !
 
செடிகள், கொடிகள், மரங்கள்
எல்லாவற்றிற்கும் பிடிக்கும் !
 
ஜந்துக்கள்,மிருகங்கள்,பறவைகள்,
மனிதருக்கும் பிடிக்கும் !
 
 பகவானுக்கும் ரொம்ப பிடிக்கும் !
 
பூமியில் படுப்பதே சுகம் . . .
தாயின் மடியில் படுப்பதைப் போல்
ஒரு இதமான அனுபவம் . . .
 
துக்கம் வரும்போது
பூமியில் படுப்பதையே
எல்லோரும் ரசிக்கிறோம் . . .
 துக்க சமயத்தில் பூமியில்
படுத்தால் ஒரு சமாதானம் கிடைக்கும் !
 
 
ஆனந்தத்தில் துள்ளும் போதும்
பூமியில் உடலைக் கிடத்துவதே
பரமானந்தம் !
 
 
குழந்தைகளும் பூமியை
நன்றாக ரசிக்கும் !
 

கடற்கரை மணலில்
காலார நடக்க யாருக்குத்தான்
பிடிக்காது !

அந்த கடற்கரை மணலில்,
சில்லென்ற காற்றில்
ஆகாயத்தைப் பார்த்து
படுத்திருப்பது பரம சுகம் !
 
 
பகவானுக்கு ரொம்ப நாள் ஆசை !
 
 
ஆதிசேஷன் இல்லாமல்,
மெத்தென்ற பஞ்ச சயனம் இல்லாமல், 
ஒரு விரிப்பும் இல்லாமல்,
பூமியில் படுத்துக்கொள்ள ஆசை !
 
அதுவும் வெட்டவெளியில்
கடற்கரை மணலில் ஒய்யாரமாய்
படுத்துக்கொள்ள ஆசை !
 
ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை !
 
 
பகவானும் காத்திருந்தான் . . .
அவனது ஏக்கம் வீண்போகவில்லை !
 
 
புண்டரீக மஹரிஷி
திருக்கடல் மல்லையில் தவமிருந்தார் !
 
நாராயணனை அனுபவிக்க
திருக்கடல் மல்லையில் ஏங்கியிருந்தார் !
 
பக்தியின் ஆழத்தை ருசிக்க
திருக்கடல் மல்லையில் கசிந்துருகினார் !
 
திருக்கடல் மல்லை அவரது
ஏக்கத்தைப் புரிந்துகொண்டது . . .
 
பூமிப்பிராட்டி மண்ணின் மைந்தனின்
தாபத்தை அறிந்துகொண்டாள் . . .
 
 ஒரு நாள் ஓர் ஆயிரம் இதழ்
தாமரையை தன் மைந்தனின்
பக்திக்காக பரிசாகத் தந்தாள் . . .
ஓர் அழகான குளத்தில்
ஆயிரம் தாமரைகளுக்கு நடுவே
ஆயிரம் இதழுள்ள தாமரையை
பரிமளத்தோடு பூக்க வைத்தாள் !
 
 
புண்டரீக மஹரிஷியின் திருக்கண்களில்
புண்டரீக மலர் தெரிந்தது !
 
 கண்டார் . . . நினைத்தார் . . . பறித்தார் . . .

புண்டரீக மலரைக் கண்டார் . . .
புண்டரீகாக்ஷனை நினைத்தார் . . .
புண்டரீகத்தைப் பறித்தார் . . .


விரைந்தார் . . .
திருப்பாற்கடல் நாதனுக்கு
புண்டரீக மலரை சமர்ப்பிக்க
விரைந்தார் . . .


தடுத்தது அலை கடல் . . .
சளைக்கவில்லை புண்டரீகர் . . .
 
கையினால் ஜலமெடுத்து
சமுத்திரத்தை வற்றடிக்க
திடமான தீர்மானம் கொண்டார் . . .
புண்டரீகத்தை தரையில் வைத்து,
புண்டரீகர் கையினால் ஜலம் இறைத்தார் . . .
 
 
சமுத்திரம் சிரித்தது . . .
உலகம் நகைத்தது . . .
தேவருலகம் பரிகசித்தது . . .
 ஆனால் நாராயணனின் இதயம் கசிந்தது . . .
 
இவனல்லவோ பக்தன் . . .
என்னையே நினைக்கும் பக்தன் . . .
என்னை மட்டுமே நினைக்கும் பக்தன் . . .
 
 
பார்த்தான் பரந்தாமன் . . .
பரிதவிப்போடு வந்தான் பக்தப்ரியன் . . .
வழிப்போக்கனாய் வந்தான் வத்சலன் . . .
 
 
நான் இறைக்கிறேன் இந்த அலைகடலை;
நீர் எனக்கு உணவு கொண்டு தாரும்;
என்று இறைஞ்சினான் விண்ணவர் கோன் . . .

புண்டரீகரும் விரைந்தார்
பசித்தவனுக்கு ஆகாரம் தர . . .
பசி தாகமாய் இருப்பவனுக்கு
ஆகாரம் தர விரைந்தார் . . .
பக்தனின் பசியைப் போக்குபவனின்
பசியைப் போக்க விரைந்தார் . . .


கொண்டு வந்தார் . . . கண்டு வியந்தார் . . .

ஆகாரம் கொண்டு வந்தார் . . .
மாலவனைக் கண்டு வியந்தார் . . .

திருவடியில் தான் பறித்த
புண்டரீக மலரோடு,
ஸ்தலத்தையே பாயாகக் கொண்டு
கச்சிக் கிடந்தவனை
கடல் மல்லையில் தல சயனமாகக்
கண்டு வியந்தார் . . .
 
 
சமுத்திர ராஜன் அர்ச்சித்தான் . . .
பூமா தேவி புளகாங்கிதமானாள் . . .
தேவருலம் விம்மியது . . .
பக்தருலகமோ ஆனந்தக் கூத்தாடியது . . .
 
புண்டரீகாக்ஷனை புண்டரீக மலரோடு
புன்னகைப் பூத்த திருமுகத்தோடு
புண்டரீக மஹரிஷி கண்டார் . . .
 
புதிய கோல தல சயனத்தைப் பார்த்து
புண்டரீகர் பெருமாள் காலடியில் புரண்டார் . . .
 
இங்கேயே இரு என்றார் புண்டரீகர்!
இங்கேயே இருப்பேன் என்றான் புண்டரீகாக்ஷன் !
இதுவே என் பாக்கியம் என்றது புண்டரீகம் !

தலசயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரே . . .
எங்கள் வம்சத்தைக் காத்தருளும் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP