நெருக்கடி . . .
ராதேக்ருஷ்ணா
சின்னதாய் ஒரு
இடைக்கழி . . .
அதிலே
ஒருவர் படுக்கலாம் . . .
இருவர் இருக்கலாம் . . .
மூவர் நிற்கலாம் . . .
நாலாவதாய் இன்னொருவர்
வந்தால் ? ? ?
அதனால் என்னவாகும் ? ? ?
நெருக்கடி அதிகமாகும் . . .
இட நெருக்கடி . . .
யாருக்கும் பிடிக்காது . . .
மிகவும் சிரமம் . . .
யாரால் நெருக்கடி வருகிறதோ,
அவர் மீது கோபம் வரும் . . .
ஒரு சமயம் ஒரு நெருக்கடி !
ஒரு மழைக்காலத்தில் ஒரு நெருக்கடி !
ஒரு ரிஷியின் வீட்டில் நெருக்கடி !
ஒரு இரவில் ஒரு நெருக்கடி !
ஒரு இடைக்கழியில் ஒரு நெருக்கடி !
மூன்று பக்தர்கள் . . .
பொய்கையாழ்வார் . . .
பூதத்தாழ்வார் . . .
பேயாழ்வார் . . .
வந்தனர் திருக்கோவலூருக்கு . . .
ஆயனைக் காண்பதற்கு . . .
உலகளந்த ஆயனைக் காண்பதற்கு . . .
உலகளந்தவன் மூவரையும்
அனுபவிக்க ஆசைகொண்டான் . . .
மழையால் மூவரையும் இணைத்தான் . . .
ஓர் இரவில்,ஓர் இடைக்கழியில்,
மூவரையும் இணைத்தான் . . .
தானும் வந்தான் . . .
திருமகளோடு வந்தான் . . .
நெருக்கடி கொடுத்தான் . . .
இட நெருக்கடி கொடுத்தான் . . .
மனதிலும் நெருக்கடி கொடுத்தான் . . .
உடனே மூவரும் விளக்கேற்றி
கண்டனர் ஆயனை . . .
திவ்யப்ரபந்தம் விளைந்த
இடமாயிற்றே திருக்கோவலூர் . . .
நானும் போனேன் . . .
நெருக்கடி ஊருக்கு . . .
உடலை நெருக்கி,
ஆத்மாவுக்கு ஒளி தரும் ஊருக்கு . . .
ஊருக்குள்ளே நுழையும்போதே
நெருக்கடி தான் . . .
கோவிலுக்கு வெளியேயும்
நெருக்கடி தான் . . .
என்னை யாராவது நெருக்க
மாட்டார்களா என்று ஆசையோடு
நுழைந்தேன் . . .
என் காமம் தான் என்னை நெருக்கியது !
என் கோபம் தான் என்னை நெருக்கியது !
என் திமிருதான் என்னை நெருக்கியது !
என் அஞ்ஞானம் தான் என்னை நெருக்கியது !
என் சந்தேகம் தான் என்னை நெருக்கியது !
என் ஆசைகள் தான் என்னை நெருக்கியது !
என் பயம் தான் என்னை நெருக்கியது !
சன்னிதி அருகில் நின்றோம் . . .
உள்ளே சிலர் நெருங்கி நின்று
உலகளந்தவனைத் தரிசித்தனர் !
ஆழ்வார்களையே நெருக்கி
தன்னைக் காட்டினவனாயிற்றே . . .
ஆழ்வார்களையே நிறுத்தினவன் . . .
எங்களையும் நிறுத்தினான் . . .
எனக்கு சந்தோஷமாய் இருந்தது !
இனம் புரியாத சந்தோஷம் !
அதற்குள் சில பக்தர்களும் வந்தனர் !
அதில் ஒரு வயதான பெண்மணியும்
கூட்டத்தில் வந்தாள் . . .
எல்லோரையும் இடித்தாள் . . .
சிலர் சப்தம் போட்டனர் . . .
"ஏனம்மா இப்படி இடிக்கிறாய்" என்று
எல்லோரும் சப்தம் போட்டனர் . . .
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது . . .
ஆனந்தமாய் சிரித்தேன் . . .
சன்னிதி வரைக்கும் சாந்நித்தியம் . . .
ஆழ்வார்களின் சாந்நித்தியம் . . .
இடிக்கும் சாந்நித்தியம் . . .
சன்னிதிக்குள்ளும் ஆயன்
ப்ரும்மா,மஹாபலி,நமுசி,
முதலாழ்வார்கள்,ம்ருகண்டு மஹரிஷி,
அவரின் தர்மபத்தினி என்று
ஒண்டிக்குடித்தனம்
நடத்திக்கொண்டிருக்கிறான் . . .
இந்த ஆயனுக்கு
இடித்துக்கொண்டிருப்பதுதான்
மிகவும் பிடித்த விஷயம் . . .
நான் கேட்டேன் . . .
ஏன் இப்படி இடித்துக்கொண்டு
நீ சிரமப்படுகிறாய் . . .
உலகளந்தவன் சொன்னான் . . .
தாய்க்கு சேய் இடிப்பது கடினமோ ?
காதலனுக்கு காதலி இடிப்பது கசக்குமோ ?
மரத்திற்கு கொடி இடிப்பது வலிக்குமோ ?
நண்பனுக்கு நண்பன் இடிப்பது சிரமமோ ?
கண்ணுக்கு இமை இடிப்பது தொந்தரவோ ?
மேகத்துக்கு காற்று இடிப்பது இம்சையோ ?
எனக்கு என் பக்தர் இடிப்பது சுகமல்லவா ! ! !
என் கண்ணோரம் கண்ணீர் இடித்தது . . .
என் மனதோரம் ஆனந்தம் இடித்தது . . .
என் ஆத்மாவை பரமாத்மா இடித்தான் . . .
என் உடலை பக்தர்கள் இடித்தனர் . . .
இப்பொழுது புரிந்தது . . .
ஏன் ஆழ்வார்களை ஆயன் இடித்தான் ! ! !
ஏன் ஆழ்வார்கள் அதை அனுபவித்தனர் ! ! !
நெருக்கடி சுகம் . . .
இட நெருக்கடி சுகம் . . .
வாழ்வில் நெருக்கடி பலம் . . .
சத்தியம் . . .
திருக்கோவலூர் சொன்ன பாடம் . . .
உலகளந்தவன் சொன்ன பாடம் . . .
மூன்று அடிக்கு ஒரு அடி குறைய,
அந்த நெருக்கடியில் மஹாபலிக்குக்
கிடைத்தது ஆயனின் திருவடி !
மூவர் படுக்க இடமில்லாமல்,
இடைக்கழியில் நெருக்கடி வர,
ஆழ்வார்களுக்குக் கிடைத்தது ஆயன் அன்பு !
ஆகமொத்தத்தில் நெருக்கடியில்
ஆயன் வருகிறான் . . .வருகிறான் . . .
இதுவே நான் உணர்ந்தது . . .
இல்லை... நெருக்கடி ஊர் உணர்த்தியது !
நெருக்கடியே நீ வாழ்க . . .
இட நெருக்கடியே நீ வாழ்க . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக